Mar 26, 2009

கடுக்கா லேக்கியம்

லேக்கியம் விற்பவன் ஒருவன் கடையைப் பரப்பிக் கொண்டே உரக்கப் பேசி கூட்டம் சேர்க்கத் தொடங்குகிறான். அவன் பேசப் பேச சிறு கூட்டம் கூடுகிறது.

லேக்கியம் விற்பவன்: வாங்கோ வாங்கோ வாங்கோ

அய்யா வாங்கோ ... அம்மா வாங்கோ

இங்க வாங்கோ ... இப்படி வாங்கோ

எட்டிப் பாருங்கோ ... சும்மா பாருங்கோ

பாக்க காசில்லே ... கேக்க காசில்லே

அய்யா வாங்கோ ... அம்மா வாங்கோ

பாக்க காசில்லே ... கேக்க காசில்லே

வாங்கோ வாங்கோ வாங்கோ

வாங்கிப் பாருங்கோ

ஒருக்கா

வாங்கிப் பாருங்கோ

இங்கே பாருங்கோ இங்கே பாருங்கோ

இதப் பாருங்கோ இதப் பாருங்கோ

கூவாக் குயில் சூரணம் ... கூவாக் குயில் சூரணம்

அபூர்வக் குயிலுங்கோ

அதிசயக் குயிலுங்கோ

கூவாக் குயிலுங்கோ

ஆயிரத்துல ஒன்னுங்கோ

ஆயிரத்துல ஒன்னுங்கோ

பொறி வச்சுப் புடிச்சதுங்கோ

பொறி வச்சுப் புடிச்சதுங்கோ

கூவாக் குயில் கழுத்த வெடுக்குனு திருகி

கசிஞ்ச ரத்தம்

கருநெல்லி கருத்த நொச்சி கருத்த வாழை கரிய வேலி

செங்கள்ளி செம்மல்லி சிவந்த கற்றாழை

ஆனான கற்பக மூலிகை ஏழுங் குழச்சி

நாயுருவி நெருஞ்சி நந்தியாவட்டை கலந்து

மூனு மண்டலம் முப்பது சாண் ஆழம்

பொதிச்சு வச்ச பாதி சுட்ட பானையில

சொதி ஊறி செஞ்ச சூரணம்

சொதி ஊறி செஞ்ச சூரணம்

கூவாக் குயில் சூரணம் கூவாக் குயில் சூரணம்

ஒரு மண்டலம் ஒரே மண்டலம்

வெந்நீ குடிச்சு மலசலம் கழிச்சு

வெத்து வயித்துல ஒரு மண்டலம்

ஒரே மண்டலம்

ஒரே குடுவ

குரலு வளம் ஓகோன்னு ஒசந்துடும் சார்

ஜேசுதாசோடவே போட்டி போட்டு பாடலாம் சார் நீங்க

உங்க வீட்டுக்கார அம்மாவுக்கு வாங்கி குடுங்கோ சார்

வீட்டுக்கார அம்மா இதக் குடிச்சிட்டு பாட வேணா

பேசுனாலே போதும் சார் பேசுனாலே போதும்

ஜானகியம்மா பிச்ச கேப்பாங்க சார்

கூவாக் குயில் சூரணம் ... கூவாக் குயில் சூரணம்

இங்கே பாருங்கோ இதப் பாருங்கோ

அகத்தி, அத்தி, அலரி, அவுரி

அறுகு, ஆவாரை, ஆமணக்கு, ஆடுதின்னாப்பாலை

பட்டிப்பூ, பழம்பாசி, பிரண்டை, பவளமல்லி

முசுட்டை, மொசுமொசுக்கை, முடக்கொத்தான், முத்தாமணக்கு

பதினாரு பெருமூலிகை சேத்து

நாலு மண்டலம் நாற்பது சாண் ஆழம்

பொதிச்சு வச்சு

நொதிச்ச சாறெடுத்து

நாலு மடங்கு அக்மார்க் தேங்காயெண்ணெயில கலந்து

அக்மார்க் தேங்காயெண்ணெய்

நாலு நாள் நாலு பானையில

ஒரு மடங்கா சுண்டக் காய்ச்சி

எடுத்த தைலம் சார் எடுத்த தைலம்

கேசபோஷிணி கேசபோஷிணி

சார் தலயப் பாருங்கோ

சும்மா பளபளன்னு ஷைனிங் அடிக்குது

பளபளன்னு ஷைனிங் அடிக்குது

ஒரு மண்டலம் ஒரே மண்டலம்

உச்சந்தலையில ஒரு சொட்டு வச்சு

காத்தால ஆறுமணிக்கு சூரியன் வெளிய வர்றப்போ

ஒரு மணிநேரம் மொட்ட மாடியில நில்லுங்கோ

மொட்ட மாடியில நில்லுங்கோ

கொட்டுன மசுரெல்லாம் முளைச்சுடும் சார்

கொட்டுன மசுரெல்லாம் முளைச்சுடும்

கேசபோஷிணி தைலம் கேசபோஷிணி தைலம்

இங்கே பாருங்கோ இதப் பாருங்கோ

கடுக்கா கடுக்கா கடுக்கா

கடுக்கா லேக்கியம் கடுக்கா லேக்கியம்

கடிக்க இல்லே முழுங்க இல்ல

ஊற வச்சு குடிக்கோனும் ஊற வச்சு குடிக்கோனும்

ஏழபாழைக்கு வெந்நீ

சம்சாரிக்கு பாலு

சுகவாசிக்கு தேனு

ஊற வச்சு குடிக்கோனும் ஊற வச்சு குடிக்கோனும்

இருக்கறதுலேயே இதுதான் சீப் ... ஒன்னு அம்பது ரூபா ...

அம்பதே ரூபா ...

லேக்கியம் விற்பவனை வேடிக்கை பார்க்கக் கூடும் சிறு கூட்டத்திலிருந்து ஒருவர் ...

நபர் 1: என்னாப்பா வெறும் கடுக்காவ காமிச்சு லேக்கியம்னு சொல்றே ...

லே. வி: சார் ... இன்னா சார் அப்படி சொல்லிட்டே ...வெறும் கடுக்கா

இல்ல சார் ... ஊறவச்ச கடுக்கா ... ஊறவச்ச கடுக்கா ...

நாப்பத்தெட்டு மூலிகைய கசக்கிப் பிழிஞ்சி, சாறெடுத்து

ஊறவச்சு, ஒரு மண்டலம் கழுகு மல உச்சிப் பாறையில காக்கா குருவி ஓட்டி காய வச்சு எடுத்த கடுக்கா சார் ... எங்க பரம்பரை ரகசியம் ... என் முப்பாட்டன் காலத்துலே இருந்து எங்க குடும்ப ரகசியம் சார் ... வெள்ளக்காரனுக்கே கடுக்கா கொடுத்த பரம்பரை சார் எங்க பரம்பரை ... சொன்னா பொழப்பு கெட்டுடும் சார் ... பொழப்பு கெட்டுடும் ... வெறும் கடுக்கா இல்ல சார் இது ... விசேஷமான கடுக்கா ...

நபர் 2: இன்னா விசேஷம் பா அதுல ?

லே. வி: அதக் கேளு சார் சொல்றேன் ... அதக் கேளு சார் சொல்றேன் ... ஆசையா அருமையா பெத்த புள்ளைங்க படிச்சு பெரிய ஆளா வரணும்னு கனவு காணுற ஏழ பாழைங்க வாயக்கட்டி வயித்தக்கட்டி கவெர்மெண்டு ஸ்கூல்ல புள்ளைகள சேக்குதுங்க. வீட்டுக்கார அம்மாவோட, முன்னால ஒரு பையன் பின்னால ஒரு பொண்ண வச்சு பாத்துப் பாத்து வண்டியோட்டுற டூவிலர் சார் தம் புள்ளைங்கள மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல சேக்குறார். டிப் டாப்பா ட்ரெஸ் போட்டு ... அதோ கார்ல போற அய்யா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்த பொண்ண சர்ச் பார்க்குல சேத்து படிக்க வக்குறார்; டான்ஸ் க்ளாஸுக்கு அனுப்பி வக்குறார்; டென்னிஸ் கோச்சிங்குக்கும் அனுப்பி வைக்கிறார். மூனு வேள சோத்த முழுசா தின்ன நாளு முழுக்க நாயா பாடுபடுற நாதியத்த குடிசை வாசிங்க, புள்ளைங்க நாலு வார்த்த எழுதப் படிக்க தெரிஞ்சா போதும்னு கார்ப்பரேஷன் ஸ்கூலுக்கு துரத்தி வுடுதுங்க. எல்லா பள்ளிக் கூடத்திலயும் ஒரே மாதிரிதான் பாடம் சொல்லிக் குடுக்குறாங்களா சார் ... சொல்லு சார் ...

நபர் 3: அதெல்லாம் தெரியும்யா ... அதுக்கும் உன் லேக்கியத்துக்கும் என்னா சம்பந்தம் ... ?

லே. வி: அவசரப் படாத சார் ... அவசரப் படாத ... என் லேக்கியத்தோட அருமைய தெரிஞ்சுக்கனும்னா இதையெல்லாம் சொல்லித்தான் சார் சொல்லோனும் ... சொல்லித்தான் சொல்லோனும்

நபர் 4: சொல்லு சொல்லு ... சட்டு புட்டுன்னு சொல்லு ...

லே. வி: சார் ... கவர்மெண்டு ஸ்கூல்ல படிக்குற ஆட்டோ டிரைவர் புள்ளயும், கான்வெண்டுக்கு தினமும் கார்ல போய் இறங்குற புள்ளயும் ஒரே மாதிரி படிக்குமா சார். கார்ல காண்வெண்டுக்கு போற புள்ள இங்கிலீஷுல பிச்சு உதறும் சார். சார் வூட்டு புள்ள ...? (சுற்றி நிற்கும் ஒருவரை நோக்கி) பையனா பொண்ணா சார்?

நபர் 5: பொண்ணு ... ரெண்டு பொண்ணு ...

லே. வி: பாருங்க சாருக்கு ரெண்டு பொண்ணுங்க ... பொம்பளப் புள்ளைங்க நல்லா படிச்சு முன்னேற்ர காலம் சார் இது ... சார் வூட்டுப் புள்ளைங்க ... (அதே நபரைப் பார்த்து) கான்வெண்டுல படிகுதுங்களா சார்?

நபர் 5: (பதில் இல்லை)

லே. வி: பாருங்க ... சார் கூச்சப்படறார் ... சாரப் பாத்தா சாதாரண சம்சாரி மாதிரி தெரியுது ... சாரால பொண்ணுங்கள கான்வெண்டுக்கு அனுப்ப முடியுமா? நான் அனுப்ப முடியுமா? (இன்னொருவரை நோக்கி) நீங்க அனுப்ப முடியுமா சார்? ... (அமைதி) சராசரி சம்சாரி வீட்டுப் புள்ளைங்க படிக்குற கவெர்மெண்டு ஸ்கூலும் கான்வெண்டும் ஒன்னா சார் ... ரெண்டுல படிக்குற புள்ளைங்களும் ஒரே மாதிரியாவா படிக்குது ... சொல்லு சார் ...

நபர் 1: அதுதான் தெரிஞ்ச விஷமாச்சேய்யா ... அதுக்கு உன் லேக்கியம் என்ன செய்யப் போவுது?

நபர் 2: யோவ் ... இவன் சுத்தி சுத்தி பேசி கடுக்கா கொடுக்கப் பாக்குறான்யா ...

லே. வி: சார் சார் ... என் கடுக்காவப் பத்தி தப்பா பேசாத சார் ... பொறுமையா கேளு சார் ... பொறுமையா கேளு ... சார் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிக்குற புள்ளைங்களுக்கும் கான்வெண்டு புள்ளைகளுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது சார் ... ஏணி வச்சாலும் எட்டாது ... சம்சாரி புள்ளைக்கும் சுகவாசி புள்ளைக்கும் ஒரே மாதிரி படிப்பு கிடையாது ... கவர்மெண்டு ஏழை பாழைங்களுக்கு கொடுக்குற கடுக்காவ இந்த சாரும் வாங்கிக்குறாரு அந்த சாரும் வாங்கிக்கிறாரு சம்சாரியும் வாங்கிக்குறார் ஏழை பாழைங்களும் வாங்கிக்குது ... சரிதானே சார் ... என் கடுக்காவ வாங்கிப் பார் சார் ... கார்ப்பரேஷனுக்கு கான்வெண்ட எட்ட வைக்கும் சார் ...

நபர் 3: எப்படிய்யா ... கார்ப்பரேஷனுக்கும் கான்வெண்டுக்கும் உன் கடுக்கா ஏணி போடுமா?

லே. வி: இன்னா சார் என்கிட்டவே நக்கலா ... சார் ... கவர்மெண்டால செய்ய முடியாத காரியத்தை என் கடுக்கா செய்யும் சார் ... என் கடுக்கா லேக்கியம் செய்யும் ... ஆதாரம் வேணுமா சார் ... சாட்சி வேணுமா சார் ...

நபர் 4: என்னய்யா ஆதாரம் வச்சிருக்க ... என்ன சாட்சி ... காட்டு ...

லே. வி: மனசாட்சிய வக்கிறேன் சார் ...

நபர் 1: என்னய்யா மனசாட்சி ... சாட்சிய காமி ... நா வாங்குறேன் உன் கடுக்காவ ...

லே. வி: சாட்சிய காட்டுனா வாங்கிக்குவியா சார் ... அப்புறம் பேக் அடிக்கக்கூடாது ...

நபர் 1: பேக் அடிக்கல்லை ஃப்ரெண்டும் அடிக்கல்லே ... மொதல்ல சாட்சியக் காமி

லே. வி: காமிக்கிறேன் சார் காமிக்கிறேன் சார் ... முதல்ல என் கடுக்காவோட அருமையச் சொல்றேன் கேளுங்க சார் ...

இந்த கடுக்காவ சாப்பிட்ட புள்ளைங்க பிச்சு உதறுதுங்க சார் ... இங்கிலீஷுல பிச்சு உதறுதுங்க ... கான்வெண்டு பசங்கள பிச்ச வாங்க வக்குதுங்க சார் படிப்புல ... பிச்ச வாங்க வக்குதுங்க ... கவர்மெண்ட்டு சாதிக்காத காரியத்தை என் கடுக்கா லேக்கியம் சாதிச்சிருக்கு சார் ... என் கடுக்கா லேக்கியம் சாதிச்சிருக்கு ...

நபர் 2: அப்படி என்னய்யா சாதிச்சிருக்கு ?

லே. வி: பணக்காரன், ஏழ, சம்சாரின்னு பாரபட்சம் இல்லாம எல்லாரையும் உசத்தி விட்டிருக்கு சார் ... எல்லாரையும் உசத்தி விட்டுருக்கு ...

நபர் 3: என்ன எல்லாரும் ப்ளேன்ல பறந்தாங்களா ... இல்ல சிவலோகத்துக்கு உசத்தி விட்டுருச்சா?

லே. வி: சிவலோகத்தை இங்க வரவழைச்சிருக்கு சார் ... இங்க வரவழைச்சிருக்கு ...

நபர் 4: ... திருவிளையாடல் படத்த சொல்றாருப்பா ...

லே. வி: திருவிளையாடல்தான் சார் ... திருவிளையாடலே தான் ... ஆனா படம் இல்ல சார் ... மாயம் இல்லே சார் மந்திரம் இல்லே சார் தந்திரம் இல்லே சார் ... மூலிகை மருத்துவம் சார் ... மூலிகை மருத்துவம் ...

ஒரே லேக்கியம் ... ஏழபாழ, சம்சாரி, சுகவாசி மூனு பேருக்கும் ஒரே லேக்கியம் ...

ஏழபாழ ஒரு மாதிரி, சம்சாரி ஒருமாதிரி, சுகவாசி ஒருமாதிரி ... மூனு பேரும் ஒவ்வொரு மாதிரி எடுத்துக்கோனும் ... ஒவ்வொரு மாதிரி எடுத்துக்கோனும் ... ஒரே லேக்கியம் ...

நபர் 5: எல்லாரும் வாயாலதான எடுத்துக்கனும் ...

லே. வி: நாக்குல நரம்பில்லாம பேசாத சார் ... நரம்பில்லாம பேசாத ... சுகவாசி கிட்டே பணம் கொட்டிக் கெடக்கு சார் ... பணம் கொட்டிக் கிடக்கு ... அவங்க வீட்டுப் புள்ளைங்கோ இந்த கடுக்காவ அரை டம்பளர் தேனுல ஊற வச்சு அதை குடிக்கோனும் ... ஊறுன தேனக் குடிக்கோனும் ...

நபர் 1: அப்போ சம்சாரி ?

லே. வி: சார் சம்சாரி ... கூச்சப்படாம கேக்குறார் பாருங்க ... கூச்சப்படாம கேக்குறார் பாருங்க ... சம்சாரி வீட்டு புள்ளைங்க ரெண்டு டம்பளர் பால ஒரு டம்பளருக்கு சுண்டக் காச்சி அதுல இந்த கடுக்காவ ஊற வச்சு, ஊறுன பால குடிக்கோனும் ... ஊறுன பாலக் குடிக்கோனும் ...

நபர் 2: ஏழபாழைங்க எதுல ஊற வச்சு குடிக்கனும்யா ... சோடாவுலயா ...

லே. வி: சோடா ஆவியா போயிடும் சார் ஆவியா போயிடும் ... காத்துல கரைஞ்சிடும், மூலிகை சத்தெல்லாம் காத்துல கரைஞ்சிடும் ... ஏழபாழைக்கு வெந்நீர் போதும் சார் வெந்நீர் போதும் ... ஒரு டம்ப்ளர் வெந்நீர்ல ஊற வச்சு அந்த வெந்நீரக் குடிச்சா போதும் சார் ...

நபர் 3: எவ்வளோ நேரம் ஊற வக்குறது?

லே. வி: ஒரு மணி நேரம் ஊற வக்கோனும் சார் ஒரு மணி நேரம் ஊற வைக்கோனும் ... தேனோ பாலோ வெந்நீரோ ... ஒரு மணி நேரம் ஊற வைக்கோனும் ...

தூங்கப் போறது முன்னாடி ஒரு மணிநேரம் ஊற வச்சு குடிக்கோனும் ...

ஒரு மண்டலம் சார் ... 48 நாள் ... ஒரு நாள் விடாம இப்படி ஊற வச்சு அந்த திரவத்தை - சுகவாசிக்கு தேனு, சம்சாரிக்கு பாலு, ஏழை - பாழைங்களுக்கு வெந்நீ - ஊற வச்சு குடிக்கோனும் ...

நபர் 4: கடுக்கா அத்தணை நாள் தாங்குமாய்யா ?

லே. வி: மூலிகை கடுக்கா சார் மூலிகை கடுக்கா ... எம்முப்பாட்டன் சித்தருங்க ஏடெல்லாம் கரைச்சுக் குடிச்சு தயாரிச்சது சார் ... கரைச்சுக் குடிச்சு தயாரிச்சது ...

(குனிந்து இன்னொரு குடுவையை எடுத்து)

இங்க பாருங்க இந்த திரவம் ... மூலிகைச் சாறு சார் மூலிகைச் சாறு...

தேனுலயோ பாலுலையோ வெந்நீரிலயோ ஊற வச்ச கடுக்காவ கைபடாம கரண்டியில எடுத்து இதுல ஊற வச்சிடனும் ...

சுத்த பத்தம் முக்கியம் சார் ... சுத்த பத்தியம் முக்கியம் ...

தீட்டுப்பட்ட மகராசிங்க தொடவேகூடாது சார் ... காத்தே படக்கூடாது ...

48 நாள் ... ஒரு மண்டலம் இப்படி விடாம குடிச்சு வந்தா ...

நபர் 5: என்னாய்யாஆகும்?

லே. வி: புள்ளைங்க நாக்குல சரசுவதி டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவா சார் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவா ... கணக்குல பிணக்கு வராது ... சயின்ஸுல டெளட் வராது, கம்ப்யூட்டரை பசங்க பிரிச்சு மேஞ்சிடுவாங்க ... குப்பையில கிடக்கும் மாணிக்கமெல்லாம் துலங்க ஆரம்பிக்கும் சார் ... குப்பமெல்லாம் கம்ப்யூட்டர் கோபுரங்களா ஆயிடும் ... புள்ளைங்க வெள்ளைக்கார துரை கணக்கா சும்மா இங்கிலீஷுல பிச்சு உதற ஆரம்பிக்கும் ... சொன்னா நம்ப மாட்டீங்க சார் நம்ப மாட்டீங்க ... ஒரு வெள்ளைக்கார துரை என் லேக்கியத்த நாஞ்சொன்ன மாதிரி ஒரு மண்டலம் சாப்பிட்டு தமிழில அச்சு பிசறாம பேச ஆரம்பிச்சிட்டார் சார் ... அசல் திருநெல்வேலி தமிழ் ... நம்புவீங்களா சார் ... எல்லாம் என் லேக்கிய மகிமை சார் ... இதெல்லாம் கவர்மெண்டால செய்ய முடியுமா சார் ... நீங்க கவர்மெண்டு கிட்ட கேக்கதான் முடியுமா? கவர்மெண்டுக்கு நேரம்தான் இருக்கா ... சொல்லு சார் ... இன்னா சார் பாக்குற ...

யோசிக்காத சார் யோசிக்காத ... ரொம்ப யோசிக்காத ... அம்பது ரூபா ... அம்பதே ரூபா சார் ... வாங்கிப் பாரு சார் ... புள்ளைகளுக்கு குடு சார் ... புள்ளைங்க வாழ்க்கை பிரகாசமா இருக்கும் சார் ...

(பேசிக் கொண்டே புட்டிக்குள்ளிருந்து கடுக்காய்களை விநியோகிக்கிறான். பார்வையாளர்களுக்கும்.)

நபர் 1: ஏய்யா ஒரு கடுக்கா 50 ரூபா ரொம்ப அதிகம்யா?

லே. வி: இன்னா சார் நீ ... மூணு மணி நேரம் தியேட்டருல முக்கி முக்கி உக்காந்து தசாவதாரம் படத்த பாத்துட்டு அம்மா அந்த குரங்கு வேஷத்துல நடிச்சதும் கமல்தானாம்மா -ன்னு கேட்ட குழந்த மாதிரி கேக்குற! மூலிகை கடுக்கா சார் இது ... 12 வருஷத்துக்கு ஒருமுறைதான் செய்யுறது ... போனா வராது, வித்து தீந்தா கிடைக்காது சார் ... அம்பது ரூபா சார் ... அம்பதே ரூபா ... யோசிக்காத சார் ... புள்ளைங்க படிப்பு சார் ... கம்ப்யூட்டர் இஞ்ஜினியர் சார் ... குப்பம் சார் ... கோபுரமாகோனும் சார் ... கவர்மெண்டால முடியாது சார் ... என் கடுக்கா லேக்கியம் செய்யும் சார் ...

நபர் 2: ஏய்யா அந்த மூலிகைச் சாறுக்கு காசு கேப்பியா?

லே.வி: ஃப்ரீ சார் ... கடுக்காவுக்கு மட்டும்தான் சார் காசு ... விலை மதிப்பில்லாத மூலிகை மருத்துவம் சார் ... பரம்பரை சேவை சார் ... கவர்மெண்டு செய்ய முடியாத சேவை சார் ... அம்பதே ரூபா அம்பதே ரூபா சார் ... வாங்கிப் பாரு சார் ... வாங்கு சார் ...

சும்மா ஒரு தடவை வாங்கிப் பாரு சார் ... இந்தா சார் ...

* * *


குறிப்பு: அனைத்து மக்களுக்குமான சமச்சீரான கல்வி முறையை வலியுறுத்தி, State Platform for Common School System என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் 07.01.09 அன்று மாலை 5.00 மணியளவில், சென்னை அரசுப் பொது மருத்துவனையின் எதிரில் அமைந்துள்ள மெமோரியல் ஹால் அருகே வீதி நாடகமாக நிகழ்த்தப்பெற்றது.


இயக்கம்: கருணா பிரசாத்.


நடிகர்கள்: தரணி, ரியாஸ், விஜய்.


இயக்குனரின் விருப்பத்திற்கிணங்கி லேக்கியம் விற்கும் பாத்திரத்தை மூன்று நபர்களாகப் பிரித்து அவர்களுக்குரிய பகுதிகளையும் பிரித்தோடல்லாமல், குறிப்பான சில பாடப்பிரிவுகள், அரசியல் நிகழ்வுகள் குறித்தும் சில பகுதிகளை எழுதித் தந்தாலும், அவை நேரடியான பிரச்சாரமாக இருக்கும் என்பதாலும், நாடகப் பிரதி, நிகழ்த்துதலின் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு திறப்புள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் முதலில் எழுதிய இவ்வடிவத்தையே தக்க வைத்துக்கொள்ள விருப்பம்.

Mar 24, 2009

இன்மையில் திளைத்தல் / வீணான தொகை

வேலையில்லை வெட்டியில்லை வீணில்லை வினையில்லை வேகமில்லை விவேகமில்லை விசர் இல்லை வீரம் இல்லை விழுப்புண்ணும் இல்லை வெற்றியில்லை தோல்வியுமில்லை துயரில்லை துவட்சி இல்லை துணையில்லை சுகமில்லை சோகமும் இல்லை சுத்தமாக ஏதுமில்லை சொல் இல்லை சொல்லவும் ஏதுமில்லை தாளில்லை தானில்லை தருக்கில்லை தவிப்பில்லை தனிமையும் இல்லை நானில்லை நீயில்லை நாயில்லை நரியில்லை நட்பில்லை பகையில்லை பிணக்கில்லை பிலாக்கனமும் இல்லை பற்றில்லை பாசமில்லை பேய் இல்லை பிசாசுமில்லை பசி இல்லை புசிக்கவும் இல்லை பாயில்லை படுக்கையில்லை பெண்ணுமில்லை கட்டிலைவிட்டிறங்காக் கதையுமில்லை காசில்லை கசடில்லை கசப்பில்லை கனிவில்லை கரிசணை இல்லை கசாப்புக்கடையுமில்லை வெட்டில்லை துண்டில்லை தூணில்லை துரும்பும் இல்லை தூசில்லை தும்பில்லை துப்பில்லை துணிவில்லை தகைமை இல்லை தப்பில்லை சரியில்லை உப்பில்லை சப்பில்லை சோறில்லை சுரைக்காயுமில்லை சுரத்தில்லை சந்தேகமில்லை சேறில்லை சகதியில்லை செருப்புமில்லை செருக்குமில்லை சேனையில்லை சூரனில்லை சகுனியுமில்லை சூதில்லை வாதில்லை வசமேதும் இல்லை விண்ணில்லை மண்ணில்லை ஊரில்லை பேரில்லை ஏதிலியும் இல்லை ஏற்பும் இல்லை மறுப்பும் இல்லை மாயமில்லை மந்திரமில்லை மாங்காயுமில்லை காதலில்லை கத்தரிக்காயும் இல்லை செடியில்லை கொடியில்லை மரமில்லை மழையில்லை வித்தில்லை விழுதில்லை உழுதில்லை தொழுதில்லை பொய்யில்லை உண்மையுமில்லை இருத்தலும் இல்லை இன்மையும் இல்லை.

24.03.09

குறிப்பு: ஒரு மாதத்திற்கு முன்பாக 'தட்டிய பொறி'. குறித்து வைத்திருந்தேன். நேரம் கிட்டியபோது அவ்வப்போது செதுக்கி வந்தாலும் ஏனோ திருப்தியில்லாமல் இருந்தது. இன்று மீண்டும் ஏதோ ‘பொறி பறந்ததில்' ஒரே மூச்சில் செதுக்கியது.

Mar 21, 2009

Reporters Without Borders - இலங்கை நிலவரம் - 2008 ஆண்டறிக்கை

குறிப்பு: சொல்லொன்னாத் துயரங்களில் சிக்குண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துயரனைத்திற்கும் புலிகள் மட்டுமே காரணம் என்று வாய்ப்பாடு பாடிக்கொண்டிருக்கும் குறுங்குழுத் தரப்பொன்றின் அற்பத்தனங்களுக்கிடையில் எத்தரப்பிற்கும் வக்காலத்து வாங்காத இவ்வறிக்கையை அவசியம் கருதி பதிவிலேற்றுகிறேன்.

Reporters Without Borders என்ற ஊடவியலாளர் சுதந்திரத்தை வலியுறுத்தி செயல்பட்டு வரும் சர்வதேசக் குழுவின் ஆண்டறிக்கை இது. இவ்வறிக்கையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம்: http://www.rsf.org/article.php3?id_article=25690
இதே பக்கத்தில் இவ்வறிக்கையின் தமிழாக்க pdf கோப்பும் உண்டு.

"இலங்கையில் தற்சமயம் இரண்டு அதிகார மய்யங்கள் உள்ளன; ஒன்று சிங்கள அரசு மற்றது புலிகள்" என்று கண்ணை மூடிக் கொண்டு எழுதுபவர்கள் இங்கு இந்த அறிக்கை குறித்திருக்கும், சிங்கள அரசுடன் கைகோர்த்துக் கொண்டு பத்திரிகையாளர்களைக் கொல்லும் தரப்பினர் அதிகார மையமில்லையா எனச் சொல்லட்டும்.

"சிங்கள அரசின் மீதான விமர்சனம் 200 %; புலிகள் மீதான விமர்சனம் 100 %; இதுவே எமது அணுகுமுறை" என்று மையநீரோட்ட அரசியல்வாதிகளுக்கு நிகராக வசனம் (வசனம் மட்டுமே) வீசும் வாய்வீச்சாளர்களின் எழுத்துக்களில் சிங்கள அரசின் மீதான விமர்சனங்களைத் தேடிப் பொறுக்க வேண்டியிருப்பதைச் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதே நிலவரம். இதற்கு நேர்மாறாக, புலிகள் மீதான கடும் கசப்பு மட்டுமே இவர்கள் சொல்லிலும் செயலிலும் நிரம்பி வழிவது. சிங்கள அரசுடனும் இராணுவத்துடனும் கைகோர்த்துக்கொண்டு, அப்பாவி ஈழத்தமிழ் மக்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லும் கசடர்களின் மீதான விமர்சனமும் இவர்களது எழுத்திலும் செயல்பாட்டிலும் அரிதினும் அரிது. சிங்கள அரசு அருள்பாலிக்க ,கிழக்கில் ஜனநாயகம் தழைக்க இராப்பகலாக உழைத்துக் கொண்டிருப்பவர்களிடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

இவ்வறிக்கையில் புலிகளின் மீதான விமர்சனங்களும் உண்டு (அவற்றின்பால் எனக்கு ஏற்பும் உண்டு. கண்மூடித்தனமான புலி எதிர்ப்பிற்கும் அவர்கள் மீதான விமர்சனத்தை முன்வைப்பதற்கும் நிரம்ப வித்தியாசங்கள் உண்டு என்று நம்புகிறேன்); சிங்கள அரசின் மீதான கடும் கண்டனமும் அவ்வரச - இராணுவ சக்திகளின் கைக்கூலிகளாக செயல்பட்டுவரும் தரப்பினர் மீதன கண்டனமும் உண்டு.

அதன் பொருட்டே இதை இங்கு பதிவிலேற்றுகிறேன்.

சிங்கள அரச - இராணுவத் தரப்பினரோடு சேர்ந்து படுகொலைகள் புரியும் தரப்பினர் குறித்த தகவல்களை கவனத்தில் முன்னிறுத்த அப்பகுதிகள் மட்டும் சிகப்பெழுத்துக்களில்.

நன்றிகள்.


------------------------------------------------------------------


பரப்பளவு: 65,610.

மக்கள் தொகை: 19,800,000.

மொழி: சிங்களம், தமிழ், ஆங்கிலம்.

அரசின் தலைவர் மஹிந்தராஜபக்ஸ.

இலங்கை அரசாங்கமும் படைத்தரப்பும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தி உள்ளன. ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ விடுதலைப் புலிகளை அழித்துவிடுவதாக சூளுரைத்துள்ளார். இதற்காக தேவையேற்படும்போது மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் என்றும் இல்லாதவாறு 2007ல் இலங்கை அரச அதிகாரத்தின் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டு தவிக்கின்றன. மறுபுறம் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களின் குரல்களை அனுமதிப்பதில்லை.


கிழக்கில் கிடைத்த இராணுவ வெற்றிகளால் மஹிந்தராஜபக்ஷ அரசாங்கம் உந்துதல் அடைந்துள்ளது. தனது சகோதரராகிய கோத்தபாய ராஜபக்ஷவை,பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கொண்ட மஹிந்த அவரது உந்துதலிலும், பின்புலத்திலும், சிங்கள மக்களை தாக்கிவரும் புலிகளுக்கு தொல்லை கொடுத்து இராணுவ வெற்றிகளை ஈட்டப் போவதாக சூளுரைத்துள்ளார். இதேவேளை இலங்கை அரசாங்கத் தரப்பினர், அதிகாரத்துடன் முரண்படுபர்வகள் எனத் தாங்கள் கருதும் ஊடகவியலாளர்களையும் பயமுறுத்தி வருகின்றனர்.

தமிழ்ப் பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் துணை இராணுவக் குழுக்கள் சட்டத்திற்கு புறம்பான கொலைகள், கடத்தல்கள், பயமுறுத்தல்கள் எனப் பயங்கரநிலைமையைத் தோற்றுவித்துள்ளனர். சர்வதேச சமூகத்தின் கண்டனங்கள் தோன்றும்போது அவற்றையும் மீறி, தனது “கழிசடைத்தனமான போரினை” நியாயப்படுத்துவதற்கு இது பயங்கரவாதத்திற்கெதிரான போர் எனக் கூறி வருகிறது. இத்தந்திரோபாயத்தினால் தமிழ் ஊடகத்துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அடிப்படையில் தமிழ் ஊடகத் துறையை அழுத்தத்திற்கு உட்படுத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிவரும் ஆதரவை வலுவிழக்கச் செய்ய முடியும் என்பது அவர்களது நோக்கமாக உள்ளது.


வலதுசாரி மற்றும் இடதுசாரி சிங்களப் பெரும்தேசியவாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள அரசாங்கம், தலைநகர் கொழும்பில் சுயாதீனமான ஊடகக் குழுக்களைச் செயலிழக்கச் செய்துள்ளது. அத்துடன் ஒரு ஒலிபரப்புச் சேவையையும், சிங்கள மொழியிலான வெளியீடுகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தையும் இழுத்து மூடியுள்ளது. பல அரச அதிகாரிகள், சுதந்திரமான செயற்பாட்டாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளனர் பலராலும் அறியப்பட்ட இக்பால் அத்தாஸ் இலங்கையை விட்டுத் தற்காலிகமாக வெளியேறி உள்ளார்.


யுத்தம் நடக்கின்ற பிரதேசத்தில் தகவல்களைச் சேகரிக்கக் கூடிய சந்தர்ப்பம், அல்லது அனுமதி, அதறக்கான நடைமுறைச் சாத்தியம் என்பன ஊடகவியலாளர்களுக்கு இல்லை. இதனால் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போரும், இழப்பீட்டு எண்ணிக்கைகளுமே ஊடகமெங்கும் பரவிக்கிடக்கின்றன.


கடந்த ஜனவரியில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் படகுத்துறை மீது அரசாங்கப் படையினர் நடத்திய விமானத் தாக்குதலை, விடுதலைப் புலிகளின் இராணுவத் தளத்தின் மீது நடத்திய வெற்றிகரமான தாக்குதலாக அரசாங்கம் அறிவித்து வெற்றி கொண்டாடியது. எனினும் இதனை மறுத்த விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதலில் 15 பொதுமக்களே கொல்லப்பட்டதாக அறிவித்தனர். மேலும் தமது ராணுவநிலைகள் எதுவும் தாக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தனர் ஆனால் பக்கம்சாராத எந்த ஒரு ஊடகவியலாளர்களாலும் இவ்விரு தரப்புச் செய்திகளையும் சரிபார்க்க அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை.


பெரும்பாலான சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் இலங்கை அரசு வழங்கும் தகவல்களையே பிரசுரிக்கின்றன. இவற்றைச் சரிபார்த்துக் கொள்வதற்கான சூழ்நிலைகள் அங்கில்லை. மறுபுறத்தில் தமிழ் பத்திரிகைகளும், இணையத் தளங்களும் புலிகள் வழங்கும் தகவல்களையும், இணைப்புக்களையுமே பிரசுரிக்கின்றன.


சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், ஐக்கியநாடுகள் சபையின் அவதானிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளது. மேலும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக அபிப்பிராயங்களை வெளியிட்ட இராஜதந்திரிகளுக்கும் அழைப்பாணைகளை அனுப்பி அதிருப்திகளையும் வெளியிட்டுவருகிறது. இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் சுயாதீனமற்ற தன்மையால் 2007ல் அதன் சர்வதேச தரத்தை இழந்துள்ளது. கடந்த பங்குனி மாதத்தில் இருந்து இந்த ஆணைக் குழு தனது அதிகாரிகளுக்கு சில குறிப்பான சம்பவங்கள் குறித்து செய்திகள் வழங்கத் தடைவிதித்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் பயங்கர நிலை

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரதேசம் பொதுவாக பொது மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கும் மிகவும் ஆபத்தான பிரதேசமாக மாறியுள்ளது. அலையாகத் தொடரும் படுகொலைகள், கடத்தல்கள், பயமுறுத்தல்கள் மற்றும் பத்திரிகைத் தணிக்கை என்பன, ஊடக செயற்பாட்டுக்கு உலகிலேயே பயங்கரமான பிரதேசங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை மாற்றி உள்ளது. கடந்த வருடத்தில் இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் கடத்தப்பட்டுள்ளனர். குறைந்தது மூன்று ஊடக நிறுவனங்கள் நேரடியாகத் தாக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க அளவிலான ஊடகவியலாளர்கள் இப்பிராந்தியத்தை விட்டு வெளியேறி உள்ளனர். மேலும் பலர் இத்தொழிலைக் கைவிட்டுள்ளனர்.


தமிழ் ஆயுதக் குழுவான ஈ. பீ. டீ. பீ எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை படையினரின் ஆதரவுடன் மேற்கொள்ளும் இந்தக் குழுவே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் பல்வேறு சம்பவங்களுக்கும் பொறுப்பாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவே இந்தத் தமிழ் ஆயுதக் குழுவின் தலைவராக உள்ளார். மறுபுறம் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற மற்றும் ஒரு குழு கிழக்கிலங்கையில் பயங்கரத்தை தோற்றுவித்துள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் செல்வராஜா ரஜிவர்மன் என்ற இளம் செய்தியாளர் மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாதோரால் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தில் அதிகம் விற்பனையாகும் உதயன் பத்திரிகைக் காரியாலயத்திற்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவியல் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் இவர், கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் குறித்து பொலிஸ்நிலையங்கள், வைத்தியசாலைகள் என்பவற்றிற்குச் சென்று தகவல்களை சேகரித்து வந்தவராவார்.

இந்தக் கொலையின் பின்னணியில் ஈ.பீ.டீ.பீ எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களே உள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் பலதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதே ஏப்ரல் மாதப் பகுதியில் நிலம் எனப்படும் உள்ளூர் சஞ்சிகையின் ஆசிரியர் சந்திரபோஸ் சுதாகரன் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியான வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க காவற்துறை தவறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி பத்திரிகைத்துறை மாணவரான சகாதேவன் நிலக்ஸன் மோட்டர்; சைக்களில் சென்ற இரண்டு ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். யாழ்ப்பாண நகரில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள அவரது வீட்டில் வைத்து பலமுறை சுடப்பட்ட பின் இவரை அவர்கள் குற்றுயிராக விட்டுச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சாளரம் சஞ்சிகையின் நிர்வாக உறுப்பினராக இருந்த இவர் யாழ் மாவட்ட மாணவர் அமைப்புடனும் தொடர்புடையவராக இருந்தவர். மற்றுமொரு ஊடகவியலாளரான கனகராசன் பிரசாந்தன் என்பவர் தமிழ்த்தேசியவாதப் பத்திரிகையான நமது ஈழ நாடு 2006ல் மூடப்படும் வரை அங்கு பணியாற்றி வந்தார். இவரை கடந்த அக்டோபர் மாதம் இலகுவான முறையில் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அவரை ஒத்தவரான அவரது சகோதரனின் கொலையில் முடிந்தது. கொலையாளிகளின் தவறான புரிதலினால் இரட்டையர்களில் ஒருவரான ஊடகவியலாளர் தப்பிக்க அவரது சகோதரர் கொல்லப்பட்ட நேர்ந்தது.


இரண்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனோர் தொடர்பில் ஐக்கியநாடுகள் சபையினால் அறிக்கையிடப்பட்ட எண்ணிக்கை நிலவரங்களின் படி மிக அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள பட்டியலில் இலங்கை சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தினக்குரல் செய்தியாளரான சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமல் போயுள்ளார். உதயன் பத்திரிகையின் துணை ஆசிரியர் வடிவேல் நிமலராஜ் தனது அலுவலகத்தில் பணிமுடிந்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டார்.

அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளையும் சில அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களையும் தவிர மேற்கூறிய எந்த ஒரு சம்பவமும் அக்கறையுடன் விசாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதேபோலவே கடந்த மேமாதம் உதயன் பத்திரிகைக் காரியாலையத்தின் மீது நடத்தப்பட்ட இரத்தம் தோய்ந்த தாக்குதலின்போது இரண்டு அலுவலர்கள் கொல்லப்பட்டமை குறித்த விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. உதயன் நிர்வாகத்தினர் இந்த சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பொலிசாருக்கு தெரிவித்திருந்த போதும் அது குறித்து எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை. வள்ளுவன் எனப்படும் இந்த சந்தேக நபர் .பீ.டீ.பீ இராணுவக் குழுவின் உறுப்பினர் ஆவார். 2007 ஆம் ஆண்டளவில் யாழ்பாண நிர்வாக அலுவலகங்களில் இவரைக் காணக்கூடியதாக இருந்தது என சாட்சியங்கள் கூறுவதாக உதயன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தமிழ் மக்கள் சுயாதீனமான செய்திகளை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்

சுயாதீனமான ஊடகங்கள் மூலம் தமிழ்மக்கள் செய்திகளைப் பெறும் வாய்ப்பை கடந்த பலவருடங்களாக அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் தடுத்து வந்துள்ளனர். இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் ஏற்கனவே போரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்கோ அல்லது அதனுடன் இணைந்திருக்கும் ஆயுதக் குழுவுக்கோ சார்பல்லாத செய்திகளை பெறும் வாய்ப்பையும் மக்கள் இழந்துள்ளனர். விடுதலைப் புலிகளும் தங்களுடைய பங்கிற்கு தமிழ் ஊடகவியலாளர்களை கண்காணித்து வருகின்றனர். தம்மை வெளிப்படையாக விமர்சிப்பவர்களைப் பயமுறுத்தியும் வருகின்றனர். இவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கும் ஊடகங்கள் இயக்கப் பிரச்சாரங்களை தாங்கிவரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி உள்ளன.


யாழ்ப்பாணத்தின் மத்தியில் உள்ள உதயன் பத்திரிகையின் பணியாளர்கள் சிலர் அதன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலில் இருந்து தப்புவதற்காக மேலதிக நேரத்தையும் அலுவலகத்திலேயோ கழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தைவிட்டு வெளியே வீதியில் செல்வது அவர்களுக்கு மரண ஆபத்தைத் தருவதாக உள்ளது.


ஒரு பத்திரிகையாளர் 2007 ஆம் அண்டில் இருந்து நிரந்தரமாகவே அலுவலகத்தில் வசித்து வருகிறார். “2006 ஆம் ஆண்டிற்கு முன்னர் 20 பத்திரிகையாளர் உட்பட 120 ஊழியர்களைக் கொண்டிருந்த எங்கள் நிறுவனம் இன்று 5 பத்திரிகையாளர் உள்ளிட்ட 55 பேராக குறுகியுள்ளது. இவர்கள் அனைவரும் பத்திரிகைத் துறையின் மீது விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளனர்,” என உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பை தனது அலுவலகத்தில் வரவேற்றபோது தெரிவித்தார்.


யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பத்திரிகைத் துறை கடந்த மே மாதம் வரை தனக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் பாரிய நெருக்குதல்களைச் சந்தித்துள்ளது. 2006 ஆகஸ்டில் இருந்து அரசாங்கம் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கொண்டு செல்ல அனுமக்கப்பட்ட, பொருட்களில் அச்சுத்தாள்கள், மை என்பவற்றை உள்ளடக்க மறுத்தது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் அடைந்து வந்த 3 பத்திரிகைகளையும் (உதயன், வலம்புரி, யாழ்தினக்குரல்) மரணப்படுக்கையில் தள்ள முயற்சித்தது. இத்தடைகாரணமாக இந்த மூன்று பத்திரிகைகளும் தமது பக்கங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. சர்வதேசத்தின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக அரச இராணுவம் இத்தடையை நீக்கியது. இதன் பின்னர் வெளியீட்டுக்குத் தேவையான கையிருப்பு கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.


ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 5 வானொலிச் சேவைகளான சண் எவ்.எம், கோல்ட் எவ்.எம், கிரு எவ்.எம், ஸா.எவ்.எம், சூரியன் எவ்.எம் ஆகியவற்றிற்கு வழங்கிய அனுமதிப்பத்திரங்களைத் தகவல் துறைக்கு பொறுப்பான அமைச்சு கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி ரத்துச் செய்ய முடிவு செய்தது. தவறான செய்தி ஒன்றை ஒலிபரப்பியமைக்காகவே அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இலங்கை அரசின் தலைவர் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தமது வேலைகளை இழந்தனர். ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சூரியன் எவ் எம் பணிப்பாளர், கடந்த 2006 ஆகஸ்ட் 29 ஆம் திகதி கடத்தப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி பணியாளர்களை தமது கடமைகளுக்கு திரும்புமாறு ஏ.பீ.சீ நிறுவனம் கேட்டுள்ளது. 2008 ஜனவரியில் அரசாங்கம் ஏ.பீ.சீ நிறுவனத்துடன் புதிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.


மிகவும் பிரபல்யம் மிக்கதான தமிழ்நெற் இணையத்தளம் இலங்கையின் இணையச் சேவை வழங்குனர்களால் 2007 யூன் 15ல் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நெற் இணையத்தளம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிகழும் விடயங்கள் தொடர்பாக பிரத்தியேக தகவல்களை வழங்கி வந்தது. இந்த இணைத் தளத்தின் இயக்குனரும் பத்திரிகையாளருமான தர்மரட்ணம் சிவராம் “தராக்கி” 2005 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டதையும் இங்கு நினைவு கூரலாம். எனினும் 2007 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் அரச அதிகாரிகள் “தராக்கி” கொலை தொடர்பான விசாரணைக்கு தடைகளை உருவாக்கினர். தராக்கி கொலை தொடர்பான சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணை ஆரம்பித்த போதே இது நடந்தது. (இவர் இலங்கை அரசுக்கு சார்பான தமிழ் குழுவைச்சேர்ந்தவர்)


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழ் ஊடகங்களுக்கான, ஊடகவியலாளர்கள் ஒருவர்பின் ஒருவராக வடக்கு, கிழக்கை விட்டு, சிலவேளை நாட்டைவிட்டே வெளியேறிவருகின்றனர். பயமுறுத்தல்களுக்கு அஞ்சியே அவர்கள் அவ்வாறு வெளியேறி வருகின்றனர். கடந்த யூன்மாதம் எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பின் பிரதிநிதி யாழ்ப்பாணத்தில் இருந்தபோது ஏ.பி செய்தியாளருக்கு குறுஞ்செய்தி ஒன்றும், செய்மதித் தொலைபேசியூடான செய்தி ஒன்றும் கிடைக்கப்பெற்றன. அதன்படி அவர்பெறும் கடைசி எச்சரிக்கை அதுவென கூறப்பட்டிருந்தது. அதே நாள் அவர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிட்டார்.


இப்படியான ஒரு சூழலை முன்னொருபோதும் நான் காணவில்லை. ஈராக்கில் சதாம் உசைனின் ஆட்சிக் காலத்தில் கூட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஆவது சுதந்திரத்தை அனுபவிக்கக் கூடியதாக இருந்தது,” என பிரஞ்சு பத்திரிகையாளர் ஒருவர் தனது யாழ்ப்பாண விஜயத்தின் பின்னர் நாடு திரும்பியபோது எல்லையற்ற ஊடகவியலாளர் அமைப்பிற்கு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இராணுவப் பாதுகாப்புடனேயே இடங்களுக்கு தான் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், பொதுமக்களில் ஒருவரைக் கூடத்தான் சந்திக்கவோ நேர்காணல் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.


பிரித்தானியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும யாழ்குடாநாட்டில் தமது கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. யாழ் குடாநாட்டுக்குள் படமெடுக்கவும், தகவல்களைச் சேகரிக்கவும் பாதுகாப்பு அமைச்சிடம் அவர்கள் அனுமதியைப் பெற்றிருந்தபோதும் நடைமுறையில் அவர்களால் அவ்வாறு தொழிற்பட முடியவில்லை. அந்தப் பத்திரிகையாளர்கள் மூவரையும் படையினர் பலாலி படைத்தளத்தில் பலவந்தமாக தங்கவைத்ததுடன் ராணுவத்தின் வழிகாட்டலுடன்கூடிய இரண்டு மணிநேரச் சுற்றுப் பயணத்தை மட்டும் யாழ்குடாநாட்டுக்குள் மேற்கொள்ள அனுமதித்தனர். அதன் பின்னர் அவர்கள் உடனடியாகவே கொழும்பு திரும்ப வேண்டி இருந்தது.


கடந்த நவம்பரில் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் உத்தியோகபூர்வ வானொலி நிலையத்தை குண்டு வீசி அழித்தனர். இந்தத் தாக்குதலில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் மூவர் வானொலிநிலையப் பணியாளர்கள். இத்தாக்குதலில் 12 ற்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். புலிகளின் குரல் வானொலி புலிகளின் உத்தியோகபூர்வ பிரச்சார வானொலியாக இருந்தபோதும் இராணுவத்தின் குண்டுத்தாக்குதல்கள் இராணுவ இலக்குகள் மீது மட்டுமே நடத்தப்படலாம் என்ற சர்வதேச விதிகளை மீறுவதாக இந்தத் தாக்குதல் அமைந்தது.


மறுபுறம் விடுதலைப் புலிகளால் ஊடகங்கள் மீது கொடுக்கப்படுகின்ற அழுத்தம் அரசாங்கத்தைப் போன்று வெளிப்படையாக இல்லாவிடினும் அழுத்தத்தின் கனதி சற்றேனும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அவர்களது சிறு அழுத்தமே கடுமையான விளைவுகளை சுட்டி நிற்பதாகும். இந்த விடுதலை இயக்கம் தங்களது கருத்துக்களுடன் முரண்படுபவர்களை இனம்காண்பதிலும், அவர்களை அழுத்ததத்திற்கு உட்படுத்துவதிலும், எந்தத் தயக்கத்தையும் காட்டியதில்லை. அவர்களின் இந்த அணுகுமுறைக்கு ஊடகங்களும் தப்பியதில்லை. தமிழ் ஊடகம் ஒன்றின் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார். “விடுதலைப்புலிகளின் எதிர்வினைகளும் அடிப்படையில் எங்களது பணியாளர்களுக்கு பாதகமானவையாக இருக்கச் சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவேதான் நாம் மிகக் கவனமாக இருக்கிறோம். எங்களது ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் கவனமாகவே தெரிந்தெடுக்கிறோம். இராணுவத்தைப் பற்றியோ, புலிகளைப் பற்றியோ பேசும்போது எங்களது வார்த்தைகளை அளந்தே பேசுகிறோம். இந்த வகையிலே நாங்கள் புலிகளைப் பயங்கரவாதிகள் என அழைப்பதில்லை. விடுதலைப் புலிகளின் புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்கு தேவைப்படும் போது தகவல்களைப் பெறுவதற்கு ஊடகவியலாளர்களை அழைப்பதும், தங்களைச் சந்திக்கச் சொல்வதும் நடக்கவே செய்கிறது.”


தெருச்சண்டியர்களான அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள்


அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தெருச் சண்டியர்கள் போலவே தொழிற்படுகின்றனர். தொழில் அமைச்சர் மேவின்சில்வா கடந்த டிசம்பர் மாதத்தில் அரசினால் நடத்தப்படும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் தனது அடியாட்களுடன் புகுந்து செய்தி ஆசிரியரைத் தாக்கியிருந்தார். புதிய பாலத் திறப்பு விழா ஒன்றில் தான் பேசிய பேச்சை ஒளிபரப்ப மறுத்தமைக்காகவே அவர் அச் செய்தி ஆசிரியரைத் தாக்கினார். காவற்துறையினர் தலையிடும் அளவுக்கு நிலமைகள் மாற்றம் அடைந்ததும் கூக்குரலிற்கும் ஆரவாரங்களுக்கும் மத்தியில் அவர் அவமானத்துடன் நிலையத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. இதே அமைச்சர் கடந்த ஜனவரி மாதத்திலும் ஊடகவியலாளர்களைத் தாக்குவதற்கு தனது ஆதரவாளர்களை ஊக்குவித்திருந்தார். அமைதியான ஊர்வலம் ஒன்றில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பீ.பீ.சீயின் செய்தியாளரைத் தாக்குவதற்கும் ஊக்குவித்தார். கடந்த வருடம் ஏப்பிரல் மாதத்தில்

நேரர்காணல் ஒன்றில் பத்திரிகையாளர்களை விசர் நாய்கள் எனவும், அவர்களுக்கு விசர்நாய் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபேய ராஜபக்ஸ கடந்த வருடம் ஏப்பிரல் மாதத்தில், டெய்லிமிரர் ஆசிரியருக்கு தனது தொலைபேசிமூலம் மிரட்டல் ஒன்றை விடுத்திருந்தார். டெய்லிமிரரின் முதன்மை ஆசிரியரான சம்பிக்க லியனாராட்சி இராணுவத் தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டுமாயின் தனது பதவியைத் துறக்க வேண்டும் என அவர் மிரட்டி இருந்தார். மேலும் பத்திரிகை நிர்வாகத்திற்கு சம்பிக்கவை பதவியில் இருந்து அகற்றுமாறு அழுத்தங்களை கொடுக்கப்போவதாகவும் மிரட்டி இருந்தார். அத்துடன் பத்திரிகையாளர் உதித்த ஜெயசிங்கவுக்கும் மரணப் பயமுறுத்தலை விடுத்திருந்தார். உதித்த ஜெயசிங்க யுத்தத்தில் பாதிக்கப்படும் அல்லது மரணமடையும் பொதுமக்களின் துயரங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் காரணமாகவே அவருக்கு இந்த அச்சுறுத்தல்களை விடுத்திருந்தார். இலங்கையின் பாதுகாப்பு படைகள் இரண்டு சந்தர்ப்பங்களில், டெய்லிமிரர் நாட்டுக்கு துரோகம் செய்வதாக குற்றம்சாட்டியிருந்தன.

புலனாய்வு பத்திரிகைத் துறைக்கு அதிகரித்துவரும் தடைகள்


சண்டே ரைம்சின் முன்னணிப் புலனாய்வுப் பத்திரிகையாளரான இக்பால் அத்தாஸ் மற்றும் அவரது சகாக்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இராணுவத்தின் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேர்ந்தது. உக்ரையினிடம் இருந்து மிக் 27 ரக விமானங்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பான விடயங்களை அத்தாஸ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததனாலேயே அவர் இவ்வாறு நெருக்குதலுக்கு உள்ளாக நேர்ந்தது. ராணுவத்தினர் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் மூலம் இக்பால் அத்தாசை மௌனமாக்கவும், புலனாய்வுப் பத்திரிகைத் துறையை முடக்கவும் முனைந்தனர். இலங்கை அரசாங்கம் அத்தாஸின் இல்லத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுடன், அத்தாஸை துரோகி எனவும் குற்றம்சாட்டியது. பின்னர் அத்தாஸிற்கு முன்பு வழங்கியிருந்த பாதுகாப்பையும் விலக்கிக் கொண்டது. இதன்காரணமாக அத்தாஸ் சிலவாரங்கள் நாட்டைவிட்டு வெளியேறி இருந்ததுடன் இராணுவ விடயங்கள் தொடர்பான தேர்ச்சி மிக்க தனது பத்தி எழுத்துக்களையும் தற்காலிகமாக நிறுத்தி இருந்தார்.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி தனது இணையத்தளத்தில், இக்பால் அத்தாஸ் புலிப் பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்படும் உளவியல் யுத்தத்தில் பங்கெடுப்பவர் எனக் குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இக்பால் அத்தாஸ் தனது பத்தி எழுத்தை மீண்டும் ஆரம்பித்தபோது இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான உதயநாணயக்கார ஊடகங்களை அத்தாஸின் எழுத்துக்களைப் பிரசுரிக்கக் வேண்டாம் எனக் கேட்டிருந்தார்.

இலங்கையின் அதிகாரத்தில் உள்ளவர்கள், 15 பேர் அடங்கிய குழுவொன்றை இராணுவத்தின் துணையுடன் அனுப்பி, லீடர் வெளியீட்டுக் குழுமத்தின் அச்சகத்தை எரியூட்டி இருந்தனர். இச்சம்பவத்தின் போது இந்தத் தாக்குதல் குழு அச்சு இயந்திரங்கள் மீது பெற்றோலை ஊற்றுவதற்கு முன் அங்கு வேலைசெய்த பணியாளர்கள் இருவரை மோசமான முறையில் தாக்கியும், சித்திரவதை செய்துமிருந்தது. லீடர் குழுமம் ஆங்கிலத்தில் வார இதழான சண்டே லீடர், மற்றும் மோனிங் லீடரினையும், சிங்களத்தில் வரும் வார இதழான இருதின பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்றது. தமிழில் சுடொரொளிப் பத்திரிகையை அச்சேற்றிக் கொடுக்கின்றது. அச்சு இயந்திரங்களை எரியூட்டியவர்கள் மறுநாள் விற்கப்பட இருந்த மோனிங் லீடரின் ஆயிரக்கணக்காண பிரதிகளையும் நாசப்படுத்தினர். தனது விமர்சனம் மிக்க ஆசிரியர் தலையங்கங்களுக்காகவும், புலனாய்வுத் தன்மை மிக்க கட்டுரைகளுக்காகவும், பிரபல்யம் பெற்றிருந்த சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இந்தத் தாக்குதல் அரசாங்கத்தின் பின்புல ஆதரவுடன் நடத்தப்பட்ட கொமாண்டோத் தாக்குதல் என கடுமையாக கண்டித்திருந்தார்.

புலனாய்வுப் பத்திரிகைத் துறையில் ஈடுபட முனைந்த சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும் குறிவைக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ் மொழி நாளாந்தப் பத்திரிகையான தினக் குரலின் இராணுவ விடயங்களுக்கான செய்தியாளர் கே.பீ. மோகன் என்றழைக்கப்படும் காளிமுத்து பாலமோகன் தனது வீடு திரும்பும் வழியில் அசிற் திராவக வீச்சுக்கு உள்ளானார். இதற்கு இரண்டு மாதங்களின் முன்பு விமானப் படையினர் இவரைத் தாக்கியும் இருந்தனர். "நான் எனது பத்திரிகை அடையாள அட்டையைக் காண்பித்த போதும் அவர்கள் என்னை அவமதித்ததோடு மேலும் பலரை அழைத்து என்னை தாக்கச் செய்தனர். எனது முகத்தில் காயம் ஏற்பட்டது,” என கே.பீ. மோகன் சம்பவம் குறித்து தெரிவித்திருந்தார்.

சுனந்தா தேஷப்பிரியாவின் நேர்காணல்

The Real News Network என்ற மாற்று ஊடகத் தொலைகாட்சி நிறுவனத்திற்கு சிங்கள இதழாளர் சுனந்தா தேஷப்பிரியா அளித்துள்ள நேர்காணல். சுனந்தா தேஷப்பிரியா கடந்த ஜனவரியில் இதழாளர் லசந்தவின் படுகொலையைத் தொடர்ந்து சிறீலங்காவை விட்டு வெளியேறிய 35 இதழாளர்களுள் ஒருவர். தற்சமயம் ஜெனீவாவில் அடைக்கலம்.

சுனந்தா சிறீலங்காவில் அமைதியையும் ஊடகச் சுதந்திரத்தையும் வலியுறுத்திச் செயல்பட்டு வரும் Movement for Interracial Justice and Equality (MIJRE)
Movement for the Defence of Democratic Rights (MDDR) Free Media Movement (FMM) ஆகிய அமைப்புகளின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். "யுக்தியா" என்ற நாளிதழின் ஆசிரியராகச் செயல்பட்டவர்.

1971 - ல் ஜே.வி.பி யால் முன்னெடுக்கப்பட்ட இளைஞர் எழுச்சியில் முக்கிய பங்காற்றியவரும் கூட.



Recent Posts