Feb 15, 2009

ஈழ விடுதலைக்கு ஆதரவான இலங்கை சோஸலிஷ்ட் கட்சித் தலைவர் உரையாற்றும் நிகழ்வு

இலங்கை ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர். சிறிதுங்க ஜெயசூர்யா அவர்கள் ஒரு மாதகாலம் இந்திய துணைக்கண்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, இலங்கையில் பாசிச சிங்கள இனவெறி அரசின் நடவடிக்கைகளை விளக்கியும், ஈழத் தமிழ் மக்கள் மீதான சிங்கள இராணுவத்தின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.

நாளை சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள அய்க்கஃப் ஹவுசில் மாலை 5 மணியளவில் உரையாற்ற இருக்கிறார்.

வாய்ப்புள்ள பதிவர்கள் கலந்து கொள்ளலாம்.

சிறிதுங்கா 2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பெற்றவர். இலங்கையில் போரைக் கண்டித்தும், ஈழ விடுதலையை ஆதரித்தும் தொடர்ந்து வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருபவர் என்பதும், கொழும்பு நகரில் தமிழரிடையே பயங்கரத்தை விதைத்து வரும் “வெள்ளை வேன்” ஆட்கடத்தல்கள், சித்ரவதைகள், கொலைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தக்கோரும் Civil Monitoring Committee (CMC) - யின் தலைவராகவும் செயல்பட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி விபரம்:

துவக்கவுரை: தோழர். விஜய் ஆனந்த்

சிறப்புரை: தோழர். சிறிதுங்க ஜெயசூர்யா
பொதுச் செயலாளர், ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி, இலங்கை.

நிகழ்வு ஒருங்கிணைப்பு: பயணிகள் வெளியீட்டகம்.

இடம்: ஐக்கஃப் ஹவுஸ், 125, ஸ்டெர்லிங் ரோடு (லயோலா கல்லூரி அருகில்)
நுங்கம்பாக்கம், சென்னை - 600034.

நாள்: 15.02.09 ஞாயிறு, மாலை 5 மணி.

Feb 10, 2009

சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து லண்டனில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பேரணி - காணொளித் தொகுப்பு

ஜனவரி 31, 2009 அன்று இலண்டனில் சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் பேரணியின் காணொளித் தொகுப்பு.






தொடர்புச் சுட்டி: http://current.com/items/89798420/sri_lanka_the_silent_cry.htm


இரு நாட்கள் முன்னர், நீண்ட நாள் கழித்து, நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிக் கொண்டிருக்கையில், ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய , என்னைப் பற்றி உலவிக் கொண்டிருக்கும் "கிசுகிசு" ஒன்றைச் சொன்னார். “அவன் இப்போ தமிழ்த் தேசியவாதி ஆகிவிட்டானப்பா,” என்பதாம் அது :))))

1989 - ஆம் வருட அளவில் அ. மார்க்ஸ் தமிழ்ச் சூழலில் முன்னெடுத்த "தேசம" - "தேசியம்" குறித்த விவாதங்களால் உந்துதல் பெற்று, சுதந்திரமாக வாசிக்கத் தொடங்கிய பின்னர், 1992 - ஆண்டளவில், பெனடிக்ட் ஆண்டர்சன், பார்த்தா சாட்டர்ஜி போன்றோரையும் பிறரையும் தேடித்தேடி வாசித்ததோடல்லாமல், "தேசம்" - "தேசியம்" குறித்த விவாதங்களுக்கும் "குடிமகன்" - "குடியுரிமை" குறித்த பிரச்சினைகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை, திராவிட இயக்கங்கள், தலித் இயக்கம், தேசத்திற்கு மாற்றான குழும அமைவுகளை உருவாக்குவதன் சாத்தியங்கள், தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து சுட்டிக் காட்டியும் எழுதியும் (சிறிய அளவிலான பங்களிப்பையாவது) செயல்பட்டும் வரும் எனக்கு இது கடும் சினம் தருவதாகவே இருந்தது.

அற்பத்தனமான கிசுகிசுக்கள், அவதூறுகள், அபாண்டமான பழிகள் மறத்துப் போய் விட்ட போதிலும், அரசியல் ரீதியிலான எனது நோக்குகளை திரித்து செய்யப்படும் ஈனத்தனமான கிசுகிசுவுக்கு எனது தெளிவான மறுப்பை பதிவு செய்துவிடுவது அவசியம் என்று தோன்றுகிறது.

“தேசம்” ஒரு “கற்பிதம்” என்ற கருத்தமைவில் இன்னமும் எனக்கு மிகுந்த உடன்பாடே.

எனினும், ஈழத்தில் தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஈழம் ஒரு தனித் தேசமாக, விடுதலையை நோக்கி நகர்வதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லை என்பதையே உணர்த்துகின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கடந்த காலங்களிலும் தற்போதும் செய்த/செய்து கொண்டிருக்கிற பாரிய தவறுகளை எந்தவிதத்திலும நியாயாப்பாடு செய்யத் தயாரில்லை. எனினும், அதைக் காரணம் காட்டி தற்போதைய தேசிய விடுதலைப் போரில் அவர்களே தீர்மானகரமான சக்திகள் என்பதை மறுக்கவும் தயாரில்லை.

அவர்கள் மீதான விமர்சனங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி, என்றோ காலாவதியாகிப் போன இயக்கங்களையும் விடுதலை முயற்சிகளைக் காட்டிக் கொடுத்து, சிறீலங்கா அரசுடன் வெளிப்படையாக கூட்டு வைத்து செயல்பட்டுவரும் கருணா தரப்பினருக்கு “தலித் அரசியல்” நியாயப்பாடு வழங்குவதும் அரசியல் முதிர்ச்சியற்ற அற்பத்தனமே.

விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்களைக் கைவிடாமல, அவர்களுக்கான தார்மீக ஆதரவை முழுமையாக அளிப்பதே இன்றைய அரசியல் தேவை. விமர்சனம் - ஆதரவு - ஈழத்தில் வரலாற்று ரீதியாக ஒடுக்கபட்ட இஸ்லாமியர் - தலித்துகள் - மலையகத் தமிழர் குழுமங்களின் மறுக்கமுடியாத நியாயங்களை வலியுறுத்தல்; இத்தகைய அணுகுமுறையே இன்றைய தேவை.

தமிழகத்தில் முத்துக்குமரனின் அர்ப்பணிப்பை உத்வேகமாகக் கொண்டு ஈழ விடுதலைக்கு ஆதரவானதொரு சூழலை உருவாக்க முனைவதே இங்குள்ளோரின் உடனடிப் பணி. இதற்குத் தடையாக இருக்கும் வலிந்த ஊடகத் தணிக்கையை தகர்ப்பது முதற்கட்ட வேலை.

எந்த தலைபோகிற பிரச்சினையானாலும், "நானும் ரெளடிதான் நானும் ரெளடிதான்" என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயே கவனமாக இருக்கும் தற்குறிகளைத் தவிர்த்துவிட்டு என்னாலான பணிகளைச் செய்துகொண்டிருக்கிறேன்.

முத்துக்குமரனின் மரணத்தை முன்னிட்டு அசராமல் அலறும் "சோ" தொடங்கி, 'அமுக்கி வாசிக்கும்' பாப்பாரக் குசும்பன்களின் சில அசட்டுக் கருத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

தனிப்பட்ட வாழ்வழுத்தங்களுக்கு இடையிலும் அது தொடர்பான தயாரிப்பிலும் முயற்சியிலும் ... பருண்மையான விளைவுகள் மட்டுமே பேசட்டும்.

Feb 6, 2009

இலங்கையில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் - அல்ஜசீராவின் மற்றுமொரு காணொளி செய்தித் தொகுப்பு





தொடர்புச் சுட்டி: http://www.youtube.com/watch?v=s175UzQgVEE

Feb 5, 2009

இராமேஸ்வரம் - ஈழ அகதிகள்

சென்ற வாரம் ஊடகவியலாளரும் எனது இளம் நண்பருமான பிரகாஷ் அல் - ஜசீரா தொலைக்காட்சிக் குழுவினருடன் இராமேஸ்வரம் சென்று, சேகரித்த செய்தித் தொகுப்பின் ஒரு பகுதி இது. (மற்றொரு காணொளித் தொகுப்பு இன்னும் வெளியாகவில்லை.)

ஈழத்து அகதிகள் பலருடனான உரையாடல்களில் அவர் அறிந்த விஷயங்களை தனியாக நேர்காணல் கண்டு பதிவிடவும் இருக்கிறேன்.

தொடர்புச் சுட்டி: http://www.youtube.com/watch?v=l1E4y8ElKOc



Feb 2, 2009

முத்துக்குமார் மரணத்திற்கு இப்படியும் ஒரு எதிர்வினை !

இன்று மதியம் நண்பர் ஒருவர் அலைபேசியில் சொன்ன செய்தியைத் தொடர நேர்ந்தது. அவர் தந்த எண்களில் பின் தொடர்ந்ததில் கிடைத்த செய்தி முற்றிலும் எதிர்பாராதது.

செங்கல்பட்டில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் உள்ளவர்களில் இருவர் கதிர் மற்றும் சந்திரகுமார். இருவரும் சற்றே மனநலம் குன்றியவர்கள். ஈழம் குறித்த செய்திகளைக் கேட்டாலே மிகுந்த பதட்டமடைந்து விடக்கூடியவர்கள்.

யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யக் கூடாத இயலாத நிலையில் இருக்கும் இவ்விருவரையும் சில மாதங்களுக்கு் முன் பூந்தமல்லி கடுங்காவல் முகாமுக்கு மாற்றியுள்ளனர். செங்கல்பட்டு முகாமில் இருந்த அவர்களது உறவினர்களின் அயராத முயற்சியில் மீண்டும் செங்கல்பட்டு முகாமுக்கு திரும்பச் சேர்ந்திருக்கிறார்கள்.

கடந்த வாரம் முழுக்க ஈழம் குறித்த அவலச் செய்திகளைக் கேள்வியுற்று மிகுந்த பதட்ட நிலையில் இருந்த கதிர் இரு நாட்களுக்கு முன்பாக 40 உறக்க மாத்திரைகளை விழுங்கிவிட ஒருவழியாக உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்கள்.

உடல் நிலை தேறி வந்தவருக்கு நேற்று நிகழ்ந்த கொடூரத்தை என்னென்பது :(((

செங்கல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் திடீரென்று மருத்துவமனைக்குள் நுழைந்து கதிரை பூட்ஸ் கால்களால் உதைத்து கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.

தாக்குகையில் அவர்கள் சொன்ன விடயங்கள்:

1. “புலிகள் என்ன மசுராடா?”

2. "ராஜீவ் காந்தியைக் கொன்னது நீங்க தானடா ... ஓடுங்கடா உங்க ஊருக்கு.”

3. "ஈழத் தமிழன்னா பெரிய இவன்னு நினைப்பா?”

இப்படியான வசவுகளை உதிர்த்துக் கொண்டே எந்த விதமான எதிர்வினையும் புரியச் சக்தியற்றுக் கிடந்த கதிரை கடுமையாக தாக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர் அந்த போலீசு சிங்கங்கள்!

இன்று காலை தொடங்கி அவ்விரு போலீஸ்காரர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மருத்துவமனை முன்பாக ஈழ மக்கள் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முத்துக்குமாரின் மரணத்தைத் தொடர்ந்து முதற்கட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை கருணாநிதி அரசு எடுக்கத் தொடங்கியுள்ள அதே போதில் போலீஸ் வெறியர்களின் வக்கிரம் இந்த அளவுக்கு சென்றுள்ளது.

இனிவரும் நாட்கள் எப்படியோ!!!

Recent Posts