பைத்தியக்காரன் தனது கருத்துக்களை இரண்டு பகுதிகளாக தெளிவாகப் பிரித்து, முதல் பகுதியில் மொழியின் அமைப்பு - அர்த்தங்கள் உருவாகும் விதம் - அதிகாரம் இவற்றுக்கிடையிலான உறவுகளைப் பற்றி பொதுவான குறிப்புகளைத் தந்துவிட்டு, இரண்டாவது பகுதியில் சுந்தரின் கவிதை பற்றியும் எழுதியிருப்பதை வாசிப்பவர் எவரும் எளிதாக உணர்ந்திருக்கலாம்.
முதற்பகுதியிலும் எனக்கு மாறுபட்ட சில கருத்துக்கள் உண்டு. மொழியின் அமைப்பு பற்றி (வித்தியாசங்களின் ஊடாக உருப்பெறுவதே மொழி) பெரிய கருத்து மாறுபாடு ஏதும் இல்லை. மொழியின் இயக்கம் பற்றிய அவரது சிதறலான குறிப்புகளில் மிகுந்த மாறுபாடு இருக்கிறது. அவற்றை சந்தர்ப்பம் வாய்க்கும்போது பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
இரண்டாவது பகுதியில் சுந்தரின் கவிதையை எடுத்துக்கொண்டு, ஒரு 'பன்முகப்பட்ட' வாசிப்பை எப்படி நிகழ்த்திக் காட்டலாம் என்று அவர் முன்வைத்திருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளின் மீது மட்டும் தற்போதைக்கு.
பைத்தியக்காரன் அடுக்கடுக்காக வைத்திருக்கும் கேள்விகளுக்குள் நான் நுழையப்போவதில்லை. "பதிவின் இந்தத் தலைப்பையே பலவிதமாக வாசிக்கலாம்" என்று தொடங்கி சுந்தரின் கவிதை வரிகளை சில தொகுப்புகளாகப் பிரித்து அவற்றுக்கு எப்படியெல்லாம் 'பலவிதமான' அர்த்தங்கள் இருக்கலாம் என்று அவர் அடுக்குவதன் அடிப்படையைக் கேள்விக்கு உட்படுத்துவதே இங்கு செய்ய விழைவது.
(அவர் எழுப்பிய சில கேள்விகளே தவறானவை என்பதை சிலர் குறிப்பிட்டுள்ளதும் மிகச் சரியே. எ - கா: "Cum for me, I am on pills" I understand that she has taken contraceptive pills and he can cum inside her without worrying about pregnancy! என்று “சும்மா” என்பவரும் "tamil" என்பவரும் சுட்டிக் காட்டியுள்ளதைக் குறிப்பிடலாம்.)
பைத்தியக்காரன் தனது கட்டுரையில் சுந்தரின் கவிதைக்குள் புகுமுன்பாக, முதல் பகுதியை முடிக்கும் கடைசிப் பத்தியை எடுத்துக் கொள்வோம்.
"பன்முக வாசிப்பு சாத்தியப்பட வேண்டுமாயின், அதன் அர்த்தங்கள் இதுதான் என்று முத்திரை குத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.”
இதில் பெரிய பிரச்சினைகள் இல்லை. 'பன்முக வாசிப்பு' என்பதை எதற்காகச் செய்து பார்க்க வேண்டும் என்ற கேள்வியைத் தவிர. அதற்குப் பிறகு வருவோம்.
"ஒரு கவிதையை புரிந்துக் கொள்ள அதை கவிஞனின் கற்பனாரீதியான எழுச்சியாகவோ அதன் உரைநடை அளவிலான வாக்கிய அலகுகளாகப் பிரித்தோ இனம் காணக்கூடாது. இந்த இரண்டுமே குறுகலான வாசிப்புக்கே இட்டுச் செல்லும்."
முதல் வரி, "ஆசிரியன் மறைந்துவிட்டான்" (death of the author) என்ற கருத்தாக்கத்தோடு தொடர்புடையது. ஆசிரியனின் 'கற்பனையில் உருவான' படைப்புக்கு அவன் கொள்ளும் அர்த்தம் மட்டுமே அறுதியானதல்ல என்று வலியுறுத்துவது. மாறுபாடில்லை. சில நுணுக்கமான வித்தியாசங்கள் உண்டு. அதற்கும் வருகிறேன்.
இரண்டாவது வரியில் முழு உடன்பாடு. மொழியின் இலக்கண அமைப்பு அதன் வாக்கிய அமைப்பிலேயே எவ்வாறாக subject x predicate என்ற துருவங்களை உருவாக்கி “நான்” என்று சொல்லப்படும் ஒற்றைத் தன்னிலையைக் கொண்டிருக்கிறது, அதற்கு நாம் எவ்வாறு பழக்கமாகி அடிமைத் தன்னிலைகளை வரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதோடு நேரடியாகத் தொடர்புடையது.
இந்த இடத்தில் மேலே குறிப்பிட்டுள்ள முதல் வரியின் கருத்தமைவோடு பைத்தியக்காரனின் கட்டுரை முடியும் இறுதிப் பத்தியில் வரும் இந்த வரியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அது பின்வருமாறு (இப்படிப் ‘பின்வருமாறு' என்று எழுதுவதெல்லாம் எனக்குப் பிடிக்காத நடை. என்றாலும் வாசகர்களுடன் எத்துனை எளிதாக உறவுகொள்ள முடியுமோ அத்துனை முயற்சி செய்யவேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்):
"எனவேதான் சுந்தர் வார்த்தைக் கூட்டங்களில் மட்டுமே அக்கறை செலுத்துபவராக இல்லாமல், பல்வேறு கலைத்துறைகளின் தற்காலப் போக்குகளை பருண்மையாகப் பார்க்கும் போக்கை பெற்றிருப்பவராகவும் இருக்கிறார். எழுதப்படுகிற எழுத்து என்பதைத் தாண்டி, ஓவியம், கொலாஜ் கலந்த ஒரு புதிய அமைப்பைக் கவிதையிலும், உரைநடையிலும் இனம்காட்டுகிறார். இதன் மூலம் ஒற்றைத்தன்மையைத் தவிர்த்து, கவிதையின் சக்தியை, மொத்த கலாச்சார விடுதலைக்கான உந்துதலாக மாற்றுவதுடன், ஆதிக்கச் சக்திகளால் காயடிக்கப்பட்ட பொருளாக மாறிவிடமாலும் பார்த்துக் கொள்கிறார்."
எனது கேள்வி இதுதான். "ஆசிரியன் இறந்துவிட்டான்" என்று ஒப்புக்கொண்டபின், ஆசிரியன் ஒரு பிரதியை - கவிதையை, சிறுகதையை, குறுநாவலை, நாவலை - எத்துனை கவனமாக, சிறப்பாக எழுதியிருக்கிறாள்/ன் என்று அதே மூச்சில் நாம் ஏன் பாராட்ட வேண்டும்? (primordial sentiment - என்று தமிழவனும், "மரணச் சடங்கின் பதிலீடு" என்று நாகார்ஜுனனும் சொல்லக்கூடுமோ?!)
விட்ட இடத்திற்கு மீண்டும் திரும்பினால் தொடரும் வரி, "கவிதையாக்கம் என்பது, வாசிப்பவனுக்குக் கவிதை தனது ஒலி - வார்த்தை அமைப்புகளைத் திறந்து காட்டுவதாக அமையவிருப்பதைப் பார்க்க வேண்டும்" என்று தொடர்கிறது.
மீண்டும் அதே பிரச்சினை. முந்தைய வரி “ஆசிரியன் செத்துவிட்டான்” என்ற கருத்தை வழிமொழிவதாக இருக்கிறது. கட்டுரையின் கடைசிப் பத்தியில் வரும் மேற்குறிப்பிட்ட பகுதி ஆசிரியனைப் பாராட்டுகிறது. இந்த வரியும் கவிஞனுக்கு அழுத்தத்தைக் குறைத்து ‘கவிதையாக்கம்” என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
தொடர்ந்து பத்தியின் கடைசி வரி, “இந்த அமைப்பு திறந்தவுடன் அர்த்தங்கள் முடிவாக ஏதுமின்றி, ஒன்றிலிருந்து மற்றதற்கான அமைப்பியல் மாற்றம் அடையவே வடிகோலுகின்றன. வாசிப்பவன் இந்த மாற்றங்களை அடையாளம் கண்டுகொண்டு சென்றால், கவிதையின் புரியாதமுகம் கிழிந்து, கவிதை புரிய ஆரம்பிக்கும்” என்கிறது.
மீண்டும் கவிஞனைவிட கவிதைக்கு முக்கியத்துவம் (ஆனால், கட்டுரையின் இறுதிப் பத்தியில் கவிஞனைப் பற்றிய சிலாகிப்பு). அதேசமயம், இதில் புதிதாக மூன்று விஷயங்கள் சேர்ந்துகொள்கின்றன.
கொஞ்சம் நேர்மாறான வரிசையில் கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம்.
3) “கவிதையின் புரியாதமுகம் கிழிந்து, கவிதை புரிய ஆரம்பிக்கும்.” அதாவது கவிதை ‘புரிய வேண்டும்'.
(அடுத்த பகுதிக்கு வருமுன் யோசிக்க சில புள்ளிகள்:
கவிதை புரியக்கூடாது.
கவிதை புரிதலுக்கு அப்பாற்ப்பட்டது.
கவிதை மட்டுமல்ல இலக்கியம்/கலை என்று நாம் சொல்லக்கூடிய எதுவும் புரிதலுக்கு அப்பாற்ப்பட்டது.
முதல் மட்டமாக, புரிதல் என்பதை நாம் இங்கு understanding என்ற கருத்தாக்கத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும். Understanding என்பது “(மேலோட்டமாக அறிந்து) தெளிவது”. அது ஒரு அபிப்பிராயத்தை - opinion - நமக்குள் உருவாக்கும்.
2) “வாசிப்பவன் இந்த மாற்றங்களை அடையாளம் கண்டுகொண்டு சென்றால் (செல்ல வேண்டும்)”. கேள்வி்: 'ஆசிரியனைக் கொன்ற பிரதியை' வாசிக்கும் வாசகர், பிரதியை எப்படித் தொடர்ந்து செல்ல வேண்டும்? ஏன் தொடர்ந்து செல்ல வேண்டும்?
1) "இந்த அமைப்பு திறந்தவுடன் அர்த்தங்கள் முடிவாக ஏதுமின்றி, ஒன்றிலிருந்து மற்றதற்கான அமைப்பியல் மாற்றம் அடையவே வடிகோலுகின்றன்”.
அதாவது, அர்த்தங்களுக்கு எல்லை கிடையாது. Unlimited semiosis என்று இதைச் சொல்வார்கள். எந்த ஒரு பிரதிக்கும் - கவிதை, நாவல் இன்னபிற - முடிந்த முடிவான அர்த்தம் கிடையாது; எந்த ஒரு சூழ்நிலைமையிலும், அதற்கான அர்த்தங்களை வரையறுக்க முடியாது; ஒரு வாசகனின் புரிதலுக்கு ஏற்ப ஒரு பிரதி எந்த ஒரு அர்த்தத்தையும் உருவாக்கும் சாத்தியத்தையும் தனக்குள் கொண்டிருக்கிறது.
ஆக, பிரதி தனது சூழலில் இருந்து விலகி அல்லது கடந்து அல்லது மேலாக நின்று, எந்த அர்த்தங்களையும் கொடுக்கக் கூடியதாக, தனது சூழலை மீறி எல்லாக் காலத்திற்கும் எல்லா அர்த்தங்களையும் தனக்குள் உள்ளடக்கியதாக ஒரு கருத்து முன்மொழியப்படுகிறது. இது சமயம், இதைச் செய்வது ‘ஆசிரியன்' அல்ல; 'பிரதி' அல்லது பெரும்பாலான சமயங்களில் ‘வாசகர்' - the work of art or the slavish reader becomes eternal in place of the artist; transcendental argument in another guise.
(ஒப்புக்கொள்வதென்றால், பைத்தியக்காரன் "ஆசிரியன் இறந்துவிட்டான் என்ற கருத்தாக்கத்தின் தொடர்ச்சியாக, பிரதியை முன்வைக்கிறார். ஆனால், பிரதிக்கு காலம் - இடம் சார்ந்த வரையறுப்புகளை மீறிய ஒரு ‘அற்புதத் தன்மையைத்' தருகிறார். இதற்கு முன்னதாகச் சிலர் இந்த இடத்தை வாசகருக்குத் தந்து, வாசகரே என்ன அர்த்தத்தை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம் என்று மிகைப்படுத்திப் புரிந்திருந்தனர்.)
மொத்தத்தில், ஆபரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் அவுட், டாக்டர் சூப்பர் !!!

17 comments:
அன்பின் வளர்மதி அவர்களுக்கு,
கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள பட வேண்டியவையே. ஆனால் அவை ஒரு மரியாதையுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவை. தயவு செய்து யாரையும் புண்படுத்தும் நோக்கோடுஎழுத வேண்டாம் என்பது தான் நான் கேட்டு கொள்வது.
நன்றி அவன்யன்.
எவரையும் புண்படுத்தும் நோக்கில் இதை எழுதத் தொடங்கவில்லை.
என்றாலும் கடைசிப் பத்தியில் சில கோபங்கள் தெறித்துவிட்டன. அவற்றை நீக்கிவிட்டேன்.
வால்பையன்,
நீங்கள் குறிப்பிட்டு எழுதியுள்ள பகுதியை நீக்கியிருப்பதால் உங்களுடைய பின்னூட்டத்தையும் நீக்க வேண்டியதாயிற்று.
தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
வளர்,
இந்த கவிதையும்(ஒரு நல்ல fragmented lyric), அதை குளறுபடியாக deconstruction செய்ததை சரியாக சுட்டிக்காட்டீருக்கிறீர்கள்.
இது சம்பந்தமாக, மேலும் சில விடயங்களை சொல்லிக்கொள்ள விழைகிறேன்.பொதுவில், இந்த post-modernism அல்லது சுருக்கமாக po-mo
பற்றி இன்னும் "செந்தமிழ்நாட்டில்" கவர்ச்சி புயல் நமிதா மட்டும் தான் பேசவில்லை. அந்தளவிற்கு, ப்ளாக் நடத்தும் பல நண்பர்கள் அரைவேக்காட்டுதனமாக அடிக்கும் po-mo கூத்துகள் தாங்கமுடியலை சாமி!!! உளவியல் ரீதியாக, பார்த்தால், ப்ளாக் நடத்துவதற்கு காரணமே, தன் tit-bit அறிவை பறைசாற்றவும்,தன் போட்டோவை போட்டு எனக்கு இவ்வளவு hits வந்திருக்கிறது என்ற தற்ப்புகழ்ச்சி narcissist மனோபாவம்தான் எனக்கு தோன்றுகிறது.இதற்கு விதிவிலக்காக சில ப்ளாக்குகளில் ஆழ படித்து விவாதிக்க களம் உண்டு (நாகர்ஜுனன், உங்கள் தளம் உட்பட etc..)
PO-MO வை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம். ( a condition, a trend, a style, a process and ofcourse as a philosophy ) இதுதான் முக்கியம். PO-MO க்கு அர்த்தம் கற்ப்பிப்பதே அதற்கு எதிரானது!! po-mo வை ஒரு குப்பிக்குள் அடைக்கமுடியாது.ஒரு நண்பர் கருணாநிதிக்கும் காவடி தூக்குகிறார். focault படிப்பதாக அல்லது படிக்க முயற்சிப்பதாக பாவனையும் காட்டுகிறார். இன்னொருவர், அதிகாரத்தை பற்றி பேசிக்கொண்டு, ஆனால் ப்ளாக் வைத்திருப்பவர்கள்தான் தாங்கள் காட்டும் திரைப்படத்தை பார்க்கமுடியும் என்று சொல்வது அதிகாரத்தை துறந்த செயலாக எனக்கு தெரியவில்லை.(ஒரு exclusivity clan முன்வைக்கிறார்). ஆல்பிரட்டும்,ராஜன்குறையும் சீரியஸ் திரைப்படங்களை 15_20 வருடங்களுக்கு முன் திரையிட்டபோது இந்த மாதிரி நிபந்தனைகளை முன் வைக்கவில்லை.( ஒடிசா இயக்கத்தை ஆரம்பித்த ஜான் அப்ரிஹாம் எப்படி ஊடகத்தை empowering and liberating ஆக ஆக்கினார் என்பது இவர்களுக்கு தெரியுமா?) எனக்கு இவர்களை நேரியடையாக அறிமுகமும் இல்லை,மற்றும் தனி நபர் தாக்குதலிலும் எனக்கு நம்பிக்கையில்லை. இவர்களின் ஆர்வத்தை நான் குறைந்து மதிப்படவில்லை.ஆனால், po-mo பற்றி ஆழமாக படித்து மற்றும் தெரிந்த நண்பர்களிடம் விவாதித்தபிறகு, hyper-real பொதுதளத்திற்கு வருவது நல்லது என்பது என் கருத்து. PO-MO வை ஒரு மோஸ்தராக பயன்படுத்தவேண்டாம். இல்லையேல், இது பலவித தவறான புரிதலுக்கும், மற்றவர்களை பயமுறுத்த ஒரு ஆயுதமாகத்தான் இருக்கும். ஆக po-mo என்பது mixing of organic and inorganic, Hybridity, Play, irony, distributed knowledge, intertextuality, fragmentation இத்தியாதிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.எல்லாவித அபத்தங்கங்களுக்கும் இடம் கொடுக்கும் இந்த hyper-real இணயதளம். இதுதான் po-mo trendஓ?
மற்றபடி, எவரையும் புண்படுத்துவதோ, அல்லது அவர்களின் ஆர்வத்தை தடை போட நான் முயல விரும்பவில்லை.
மொத்தத்தில், ஆபரேஷன் (deconstruction) நடக்கவில்லை, பேஷண்ட் (lyric) அப்படியே இருக்கிறது, ஆனால் டாக்டர் (deconstructor) சூப்பர் மோஸ்தரோடு பவனி வருகிறார்.
வாசு,
பகிர்விற்கு நன்றிகள்.(தங்கள் பக்கத்தைத்தான் காண இயலவில்லை.)
நீங்கள் குறித்துள்ள பெரும்பாலானவற்றில் உடன்பாடே.
எனினும் இந்த deconstruction என்பது குறித்து: இலக்கியப் பிரதிகளைக் கட்டுடைத்து விளக்குவது என்பதாகச் சொல்லப்படும் போக்கில் எனக்கு நம்பிக்கை மெதுமெதுவாகக் குறைந்து தகர்ந்தே போய்விட்டது.
“கட்டுடைப்பு” என்ற கருத்தாக்கம் உருவானதன் பின்புலத்தை பலமுறை சுட்டிக் காட்டியும் இருக்கிறேன்.
இலக்கியப் பிரதிகளுக்கு அத்தகைய முறையைப் பிரயோகிப்பதாகச் சொல்லப்படும் முயற்சிகள் பெரும்பாலும் close reading techniques ஆகவே இருப்பதைக் காணமுடியும்.
இது அமெரிக்க New Critics குழுவினரின் வாசிப்பு உத்தி. ஒருகட்டத்தில் வலதுசாரித் தன்மையில் முடிந்ததை இலக்கிய வரலாறும் காட்டியிருக்கிறது.
//நீங்கள் குறிப்பிட்டு எழுதியுள்ள பகுதியை நீக்கியிருப்பதால் உங்களுடைய பின்னூட்டத்தையும் நீக்க வேண்டியதாயிற்று.//
பரவாயில்லைங்க!
ஆனா உண்மையிலேயே நீங்க யார சொன்னிங்கன்னு எனக்கு தெரியாது!
உங்களுட எழுத்து, பைத்தியகாரன் எழுத்து, ஜ்யோவ்ராம் சுந்தர் எழுத்தெல்லாம் தொடர்ந்து வாசித்தாலொழிய புரிய வாய்ப்பேயில்லை!
புரியவைக்கும் பொருட்டு தொடர்ந்து எழுதுங்கள்!
வளர்,
நன்றி! நான் பயணத்தில் மற்றும் அடுத்த 15 நாட்கள் வேலைப்பளு இருப்பதால் பொருத்தருள்க!! வேளைப்பளு...
மற்றபடி, எனக்கென்று வலைப்பக்கத்தை தொடங்குவதற்கு( அப்படியே ஒரு pretext ஆக இருந்தாலும்) நான் இதுவரையில் எழுதவும் இல்லை மற்றும் இந்த hyper-text ல் ஆரோக்கியமான விவாதத்திற்க்கான சாத்தியகூறுகள் குறைவு என்பது என்னுடைய கணிப்பு. உதாரணமாக, hyper-text dialogue/discussion ல் ஒரு flow இல்லை. அதாவது, என்னுடைய இன்றைய மறுமொழிக்கும், நாளை அல்லது 15 நாட்களுக்கான பிறகான என்னுடைய மறுமொழிக்கும் "differance" இருக்கிறது என்பதை நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். இருப்பினும், நீங்கள் சொன்ன கருத்துக்களுக்கு விரைவில் மறுமொழி இடுகிறேன்.
மிக்க நன்றிகள் வாசு :)
அவசரமில்லை, பொறுமையாகவே பகிர்ந்து கொள்ளலாம்.
வளர்,
சுந்தரின் கவிதையை வைத்து, பைத்தியக்காரன் நீங்களேன எழுதிக்கொண்டிருப்பது வாசிக்கச் சுவாரசியமாக இருக்கிறது. பைத்தியகாரனின் வாசிப்பைத ஆரம்பத்தில் பார்த்தபோது அமைப்பியல் ரீதியான வாசிப்போ என்ற எண்ணம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட இவ்வாறான வாசிப்புப்பற்றி (காயத்ரியின் கவிதையை முன்வைத்து) நீங்கள் ஜமாலனுடன் முன்பு ஓர் உரையாடலை ஆரம்பித்ததும் நினைவில் இருக்கிறது.
இங்கே பின்னூட்டம் எழுதும் வாசு என்கின்ற நண்பரும் மிகுந்த சுவாரசியத்தைத் தருகின்றார் (ஏற்கனவே நாகார்ஜூனனின் பதிவுகளில் அவரது பின்னூட்டங்களைப் பார்த்திருக்கின்றேன், விரைவில் வலைப்பதிவொன்று தொடங்கி எழுத அவருக்கு என் வாழ்த்துக்கள்). அதிலும் முக்கியமாய் உங்கள் இந்தப்பதிவின் தலைப்புக்கு அவர் தந்த விளக்கம் சிலாகிக்கக்கூடிய ஒன்று.
இவ்வாறு விரிவான வாசிப்புள்ள உங்களைப் போன்றவர்களைத் தொடர்ந்து எழுதச் செய்வதற்காகவேனும் நான் எதையாவது அரைகுறையாக எழுதவேண்டுமென யோசித்துக்கொண்டிருக்கின்றேன் :-).
நன்றிகள் டிஜே :)
இது குறித்து தொடர்ந்து எழுத விருப்பம்தான்.
நிலைமைகள் அனுமதிக்கும் என்று நம்புகிறேன்.
வாசு என்ற நண்பர் பதிவொன்றைத் தொடங்கி எழுதினால் மிக்க மகிழ்ச்சியே. எனக்குச் சொல்லச் சங்கடமாக இருந்தது. நீங்கள் முன்மொழிந்ததற்கு நன்றிகள்.
உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.
வளர்,
கண்ணக் கட்டுது. இரண்டு மூன்று முறை படிக்க வேண்டும். வாசு அவர்களின் பின்னூட்டம் அருவித் தண்ணீர் தலையில் அறைந்து இறங்குவது போல இருக்கு.
திரும்ப, பேஷன்ட், ஆபரேஷன், டாக்டர், நீதிமன்றம், வழக்கறிஞர் எல்லாரையும் பல முறை படிக்க வேண்டும்.
The week-end is promising thx to Jyov, Siva, you and Vasu.
அனுஜன்யா
வளர்,
நீங்கள் கூறிய கருத்துகளோடு எனக்கு உடன்பாடே. new critics, TEXT ய் கட்டுடைத்த போது பல சிக்கல் வந்தது.அதாவது new critics ஒரு text ய் அணுகும்போதோ/புரிந்துகொள்ளவோ/ அல்லது கட்டுடைக்கும்போதோ, புறக்காரணிகளான history, psychoanalysis,marxism,politics ETC.. போன்றவற்றை ஒதுக்கினார்கள். ஆக, new critisism, புதினத்திற்கு, ஒற்றை பார்வையை முன்வைத்தார்கள்.( புதினத்தில் வரும் ambiguity of language கணக்கில் எடுக்கமாட்டார்கள்)மேலும், படிக்கும் வாசகனின் பின்புலத்தை ( history,konowledge,background ) புறக்கணித்தார்கள்.
இதைக்கண்ட தெரிதா, இந்த கட்டுடைத்தல் என்பது தத்துவப்பிரதிகளை வாசிக்க ஒரு உத்தி என்று சொன்னார்.
ஆனால் நான் சொன்ன, deconstruction, paul de man சொன்ன மேற்சொன்ன எல்லா காரணிகளையும் பயன்படுத்தி,உள்வாங்கி, literaray text ய் அனுகலாம் என்பது என் கருத்து.
வளர்,
கொஞ்சம் அவகாசம் கிடைத்தது. கிடைத்த நேரத்தில், இந்த கவிதை, po-mo, மற்றும் உங்கள் மறுமொழி நினவுக்கு வந்தது. எனக்கு தெரிந்த அறிவை வைத்து, இந்த கவிதையை அணுக முயல்கிறேன். இது ஒரு எளிய முயற்சியே..
இந்த கவிதையில் முக்கியமாக
"" விபத்தில் இறந்தவரின்
கழுத்துவரை மூடிய வெள்ளை உடையில்
ஆங்காங்கே ரத்தத் திட்டுகள்
சின்னச் சின்ன தேசங்களின்
வரைபடங்களாய் உறைந்திருக்கின்றன""
மேற்க்கூறிய வரிகளை சொல்லலாம்.
மூன்று வழிகளில் இந்த வரிகளை அணுகலாம் / படிக்கலாம்.
(1) இதை அப்படியே உள்ளபடி படிக்கும்போது, ஒரு போதாமை/நெருடல் இருக்கிறது. விபத்தில் இறந்தவர் X ரத்தத்திட்டுகள் X தேசங்களின் வரைபடங்களாய் என்ற மூன்று வார்த்தைகளும் ஒரு காட்சியை விவரிக்கிறது. ஆனால், ரத்தத்திட்டுகள் தேசங்களின் வரைபடங்களாக ஒரு படிமம் தெரிகிறது. அவ்வளவே...
(2) இப்போது, "விபத்தில்" என்ற வார்த்தையை எடுத்துவிடலாம்.
""இறந்தவரின்
கழுத்துவரை மூடிய வெள்ளை உடையில்
ஆங்காங்கே ரத்தத் திட்டுகள்
சின்னச் சின்ன தேசங்களின்
வரைபடங்களாய் உறைந்திருக்கின்றன""
இதில் படிமமும் தெரிகிறது மற்றும் (1)ல் சொன்ன மூன்று வார்த்தைகளும் தங்களுக்குள் பிணைத்துக்கொண்டு, ஒரு அர்த்தத்தை கொடுக்க முயல்கிறது.முக்கியமாக, 'இறந்தவர்' என்ற வார்த்தை 'தேசங்களின் வரைபடங்களாய்" என்ற வார்த்தையோடு பிணைக்க முயல்கிறது. கவனிக்க (1) ல் இது நடக்கவில்லை.(விபத்தில் என்ற வார்த்தையால்).
(3) இப்போது, "விபத்தில் இறந்தவரின்" என்பதற்கு பதில், ""கொல்லப்பட்டவரின்"" என்ற வார்த்தையை பொறுத்திப்பார்க்கலாம்.
"" கொல்லப்பட்டவரின்
கழுத்துவரை மூடிய வெள்ளை உடையில்
ஆங்காங்கே ரத்தத் திட்டுகள்
சின்னச் சின்ன தேசங்களின்
வரைபடங்களாய் உறைந்திருக்கின்றன""
மாற்றியமைக்கப்பட்ட இந்த கவிதை வரிகளில், ஒரு பன்முகதன்மை வருகிறது. Politics,History இந்த வரிகளின் அடிகளில் உறைந்திருக்கிறது. மிக சமீபத்தில் நடந்த ஈழப்படுகொலை பின்புலத்தில், இந்த கவிதையை வாசித்தால், இந்த மாற்றியமைக்கப்பட்ட வார்த்தையின் முக்கியத்துவம் புலப்படும்.
வாசு தாமதத்திற்கு மன்னிக்கவும். சிறிது வேலையாய் இருந்துவிட்டேன்.
New Critics குறித்து நீங்கள் எழுதியுள்ளவற்றில் சில மாறுபாடுகள்.
நான் வாசித்தவரையில் அவர்கள் இலக்கியப் பிரதிகளில் ambiguity - ஐ வலியுறுத்தியவர்களே. William Empson - ன் Seven Types of Ambiguity இதில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். மற்றபடி, நீங்கள் குறித்துள்ளது போன்று இலக்கியப் பிரதிகளை புற நிலைகளிலிருந்து, சமூக - வரலாற்று - அரசியல் காரணிகளிடமிருந்து விலக்கி, தனித்ததாக - தன்னிறைவானதாகக் காணும் போக்கை வலியுறுத்தியவர்கள் அவர்கள் என்பது சரியான அவதானிப்பே.
New Criticism என்ற போக்கின் காலம் 60 - களில் முடிகிறது. கிட்டத்தட்ட அதே காலப் பகுதியில்தான் தெரிதா 1966 - ல் John Hopkins University - ல் தனது புகழ்பெற்ற "Structure, Sign, and Play in the Discourse of the Human Sciences" என்ற கட்டுரையை வாசிக்கிறார். இதில்தான் ஒரு “அமைப்பின் மையம் எப்போதும் அமைப்பிற்கு வெளியே இருக்கிறது” என்ற கருத்தை முன்மொழிகிறார் (இதைத்தான் மையமே இல்லை என்பதாகப் புரிந்துகொண்டு உளறிக்கொட்டினர் நமது தமிழ் அறிவு'சீவி'கள் சிலர்).
இதுவே 'deconstruction' என்பதன் ஆரம்பமாக new critics - களால் கொண்டாடப்பட்டது. ஒட்டுமொத்தமாக அவர்கள் 'கட்டுடைப்புவாதிகளாக' 'மதம்' மாறினார்கள் :)
Paul de man - ம் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர். அவரது மறைவிற்குப் பிறகு அவருடைய நாசி ஆதரவுப் பின்புலம் பெருத்த சர்ச்சையைக் கிளப்பியது. ஏற்கனவே, அமெரிக்காவின் தென் மாநிலங்களில் இருந்து வந்தவர்களான new critics குழுவினரில் பலரது நுட்பமான இனவெறிப் பார்வைக்காக விமர்சிக்கப்பட்டனர் என்பதும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியது.
அடுத்து, கவிதையை ஈழப் படுகொலையோடு இணைத்துப் பார்த்திருப்பது மிகச் சரியே.
என்றாலும், ”நெருடலாக” இருப்பதாகக் கருதி “விபத்தில்” என்ற சொல்லை விலக்கிவிட்டு நோக்குவது சரியாகப்படவில்லை. அவ்வாறு விலக்காமலேயே கவிதை ஈழ நிகழ்வுகளைக் குறித்து நிற்பதாகவே எனக்குப் படுகிறது.
மேலும் நீங்கள் விலக்கும் பகுதியில் இருக்கும் “விபத்தில்” என்ற சொல் சில வரிகள் கழித்து வரும் ”இதுவரை தாங்கள் பார்த்திருந்த
விபத்துச் சாவுகளைக் குசுகுசுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற வரிகளோடு இணைத்துப் பார்க்க வேண்டியது.
ஈழத்தில் நடந்தேறிய படுகொலைகள் - விபத்துக்களை மட்டுமே பார்த்துப் பழகிய தமிழகத் தமிழர்களின் பச்சாதாப உணர்வு - ஊடகத்தின் ஈனப்போக்கு இவை குறித்துச் சுழல்வதாகவே கவிதை முதல் வாசிப்பில் எனக்குத் தொனித்தது.
தொடர்ந்த பகுதியை எழுதுகையில் இன்னும் சற்றுக் கவனமாக வாசித்து எனது நோக்கை எழுதுகிறேன்.
தங்களின் தொடர்ந்த பகிர்வுகள் உற்சாகம் தருகின்றன.
மிக்க அன்புடன்
வளர் ...
வளர்,
William Empson - ன் Seven Types of Ambiguity நான் படித்ததில்லை. Paul de man ன் நாசி பின்புலம் நீங்கள் சொல்வது சரியே.
கவிதைக்கு வருவோம்,
நான் முழு கவிதை வரிகளை பரிசோதனைக்கு எடுக்கவில்லை. நீங்கள் கூறியது போல், முதல் வாசிப்பிலே,ஈழப்பிரச்சினை தெரிகிறது என்று சொல்வது, வலிய/வேண்டுமென்றே ஒரு அர்த்தத்தை திணிப்பதாக எனக்கு தெரிகிறது. விபத்தில் X தேசங்களின் வரைபடங்கள் வார்த்தைகளுக்குள் ஒரு relation, ஒர் இணைப்பு இல்லை என்பதாக தெரிகிறது. அல்லது நீங்கள் சொன்ன, விபத்தில் என்ற வார்த்தையை ”இதுவரை தாங்கள் பார்த்திருந்த
விபத்துச் சாவுகளைக் குசுகுசுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற வரிகளோடு சேர்ந்து வாசித்தாலும், ஈழப்பிரச்சினை எனக்கு தெரியவில்லை. நான் போன மறுமொழியில், சொன்னது போல்,( point 3 ) வேறு வார்த்தையை பொறுத்திப்பார்த்தால், இந்த கவிதை வரிகளின் வீர்யம்/அர்த்தங்கள் வேறு தளத்திற்கு செல்கிறது. அதாவது, தேச எல்லைக்குள் உடல்கள் X உடலில் தெரியும் தேச எல்லைகள் என்று பார்க்கலாம். இப்படி பார்க்கும்போது, இறந்த உடல்கள் மேல், சிங்கள அரசு தன் எல்லையை வடக்கில் விரிவாக்கியது நினைவுக்கு வரும். மேலும் ' Reader is born when author is dead' என்பதின் முக்கியத்துவம், போன் மறுமொழியில் வந்த point3 யோடு படித்தால் தெரியும்.
வாசு,
கவிதை நானும் கவிதையை இன்னும் கூர்மையாக வாசித்துவிடவில்லை. இன்னும் சில வாசிக்க வேண்டும். சற்று இடைவெளி விட்டு.
முதல் வாசிப்பில் கவிதை ஈழப் படுகொலை தொடர்பானதாகப் பட்டது என்று சொன்ன அதே சமயம்,
”ஈழத்தில் நடந்தேறிய படுகொலைகள் - விபத்துக்களை மட்டுமே பார்த்துப் பழகிய தமிழகத் தமிழர்களின் பச்சாதாப உணர்வு - ஊடகத்தின் ஈனப்போக்கு இவை குறித்துச் சுழல்வதாகவே கவிதை முதல் வாசிப்பில் எனக்குத் தொனித்தது.”
என்று குறிப்பிட்டிருக்கிறேன். இம்முன்று விஷயங்களையும் சுட்டிச் செல்வதாகவே கவிதை எனக்குத் தொனிக்கிறது. முதல் முறை வரும் “விபத்தில்” என்ற பிரயோகத்திற்கும் சில வரிகள் கழித்து வரும்,
”இதுவரை தாங்கள் பார்த்திருந்த
விபத்துச் சாவுகளைக் குசுகுசுத்துக் கொண்டிருக்கிறார்கள்”
என்ற வரிகளுக்கும் இடையிலான உறவு ஈழத்தில் நடக்கும் போரின் அவலங்களை ஆழ்ந்து உணர்ந்திருக்காத தமிழகத் தமிழர்கள், அங்கு நடக்கும் மரணங்கள் குறித்த செய்திகளை அறிய நேருகையில், விபத்தில் நிகழும் மரணங்களைக் கண்ணுறும்போது கொள்ளும் பச்சாதாப உணர்வுக்கு மேலாகக் கொள்வதில்லை என்று உணர்த்துவதாகவும் படுகிறது.
இடையில் வரும்
”ஆங்காங்கே ரத்தத் திட்டுகள்
சின்னச் சின்ன தேசங்களின்
வரைபடங்களாய் உறைந்திருக்கின்றன”
இங்கு நடக்கும் விபத்துச் சாவுகளிலிருந்து ஈழத்தில் (அங்கு மட்டுமல்லாது) நடக்கும் யுத்தப் படுகொலைகளுக்கு ஒரு existential leap ஆகத் தோன்றுகிறது.
இன்று பேச வேண்டிய கூட்டத்திற்கான தயாரிப்பில் இருப்பதால், பொறுமையாக வாசித்து மீண்டும் வருகிறேன்.
வளர்,
நீங்கள் கூறியது போல் பார்த்தால், கவிதை வரிகளுக்கு அதீத அர்த்தம் வருகிறது. அதாவது,வாசகரே என்ன அர்த்தத்தை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம் என்ற மிகைப்படுத்தல் தெரிகிறது.( வாசகனின் பங்களிப்பும்,உழைப்பும் முக்கியம் என்று கருதுகிறேன்). உங்கள் நோக்கில் பிரதியை பார்த்தால்,எல்லா நெம்புகோள் கவிதையையும் (நன்றி: ஜமலான் )படித்து, ஒவ்வொன்றிலும் பாலஸ்தீன,கொசாவா பிரச்சினையை etc..முன்வைக்கிறது என்று தவறாக அர்த்தம் கற்ப்பித்துக்கொள்ள சாத்தியக்கூறுகள் இருக்கிறது. வாதத்திற்க்காக, ஈழப்பிரச்சினையை கொஞ்ச நேரத்திற்கு ஒத்தி வைத்து, வரிகளை அணுகினால், படிமம் தான் தெரிகிறது. ஆக, வாசகன் எப்படி,வார்த்தைகளை, வெட்டி,நீட்டி, மாற்றி பார்க்கிறான் என்பது முக்கியமாக எனக்கு இருக்கிறது. மேலும், நான்(ம்), வார்த்தையை மாற்றியதை, வேறு ஒரு வாசகன், மாற்றலாம்,வெட்டலாம். அப்படி, ஒவ்வொரு வாசகனும் செய்யும்போது ( வாசகனின் பின்புலத்தையும் கருத்தில் கொண்டு), மையம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மொழியில் இருக்கும் இந்த எல்லையில்லா சாத்தியகூறுகளையும்/சூட்சமங்களையும் வாசகனின் பங்களிப்பால்தான் உடைக்கமுடியும் என்பது என் கருத்து.
வாசு,
என்ன சொல்வதென்று தெரியவில்லை.
நான் சொல்ல வந்ததை தவறாக பொருள் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டும் தற்போது சொல்லிவிட விரும்புகிறேன்.
வேலை இருக்கிறது. மாலை சற்று விளக்க முயற்சிக்கிறேன். சாத்தியமெனில் இன்று இரவு அடுத்த பகுதியில் கவிதையை நான் வாசிக்கும் நோக்கையும் தெளிவுபடுத்திவிடுகிறேன்.
நன்றிகள்.
Post a Comment