May 25, 2009

புலிகளும் கழுதைப் புலிகளும் ... 1

காற்றில் அலையும் சிறகொன்று
பெர்டோல்ட் ப்ரெக்டிற்கு:

சிறு ஒரு பகிர்வும்
சொல்லொன்னாச் சேதிகளைப் பகரும்
குற்றமாகும் காலமாகிப்போனதை
என்னென்பது?

- பால் செலான் (1920 - 70)


கடந்த ஒரு வாரகாலம் சொல்லொன்னா மன அலைக்கழிதல்களில் கழிந்து எழுத நினைத்திருந்தவற்றை எல்லாம் அழித்துச் சென்றது.

ஈழ மக்களின் அவலங்கள், ஈவு இரக்கமற்ற அரச பயங்கரவாத நடவடிக்கைகளின் கோரநடவடிக்கைகளிலும், சர்வதேச ‘சமாதான' அமைப்புகளின் திட்டமிட்ட பாராமுகப் புறங்கை நடவடிக்கைகளிலும் கேட்பாரற்றுக் கரைந்து கொண்டிருக்கும் துயர் என்னுள் கிளர்த்திய குற்ற உணர்ச்சிகள் இங்கு பகிர்ந்துகொள்ள இயலாதாவை. “சிறு ஒரு பகிர்வும் சொல்லொன்னாச் சேதிகளைப் பகரும் குற்றமாகிப் போகும் காலம்” நமது :((

எனது இயலாமையை நடவடிக்கைகளில் மடைமாற்ற முனைந்த அனைத்து சிறு சிறு முயற்சிகளும், கணப்பொழுதுகளில் மாறிக்கொண்டிருந்த நிகழ்வுகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் திணறிச் சிதறுண்டுபோனதையும் இங்கு விவரித்துக் கொண்டிருக்கவியலாது.

இம்முயற்சிகளுக்கு இடையிலும் ஈழ நிகழ்வுகளையொட்டி பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் பலவிதமான கருத்துக்களை (புலிகளின் ‘பாசிசம்', ஈழத்து தலித் மக்களின் நலன்கள், சிறுபான்மையினர் உரிமைகள் இன்னும் பலப்பல) மீள் பரிசீலனை செய்யும் நோக்கில் நூல்களைத் திரட்டி வாசித்துக் கொண்டிருந்தேன். வாசிப்பும் நிகழ்வுகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் பல திசைகளில் சிதறிக் கொண்டிருந்தது.

மேலுள்ள கேள்விகளை பரிசீலித்துக் கொண்டிருக்கையில் "ஈழத்தில் இனப்படுகொலையே நடக்கவில்லை, யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் மக்கள் அமைதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்" என்ற கருத்து உதிர்ப்புகள் முன்னாள் நண்பர்களின் 'மேதமை மிகுந்த' அபிப்பிராயங்களாகப் பரவவிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை விளைவித்தது.

அந்த 'மேதகைமை மிகுந்த' பேட்டி வெளியாகும் முன்னரே இனப்படுகொலை (genocide) என்று எத்தகைய நிகழ்வுகளை வரையறுப்பது என்பது குறித்து விரிந்த ஒரு கோட்பாட்டுத் தெளிவிற்கு வந்து சேர்ந்திருந்தேன். அத்தெளிவையொட்டி தொடர்ந்த கேள்விகள்.

கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் இனப்படுகொலை என்று சொல்லத்தக்க நிகழ்வுகள் பல, உலகின் பல பாகங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த போதிலும் சர்வதேசச் சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் அந்நிகழ்வுகளை அவ்வாறு அங்கீகரித்து தமது தலையீட்டைச் செய்ய விடாமல் தடுத்தது என்ன?

சர்வதேச - பிராந்திய வல்லாதிக்க நலன்கள் வெளிப்படையானவை. அதையும் மீறி சர்வதேசச் சட்டம் எங்ஙனம் வரையறுக்கப்பட்டிருக்கிறது? ஒரு நாட்டின் 'இறையாண்மை'க்குப் பாதகமில்லாமல் சர்வதேசச் சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு நாட்டில் நடக்கும் இனப்படுகொலை நிகழ்வுகளைத் தடுக்கத் - தலையிட, சர்வதேச உறவுகளும் சர்வதேசச் சட்டங்களும் எந்த வகையில் தடையாக இருக்கின்றன? அதிலிருந்து விடுபட சர்வதேசச் சட்டங்களை எவ்வாறு மீள எழுத வைப்பது, சர்வதேச உறவுகளை எவ்வாறு மீள வரையறுப்பது போன்ற கேள்விகளின் பின்னால் அலைந்து கொண்டிருக்க நேரிட்டது.

ஈழத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலங்களை இக்கேள்விகளுக்கான தற்காலிக விடைகளை அடைந்தேனும், அவற்றைப் பகிர்ந்தேனும், சிறு அளவிலேனும் அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான நிலைமைகளை உருவாக்கும் முயற்சியில் பங்களிப்பு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்க நேரிட்டது.

இத்தேடல்களில் மூழ்கியிருந்ததில், எனது 'மேன்மை மிகுந்த' முன்னாள் நண்பர்கள் அசட்டுத்தனமாக உதிர்த்துச் சென்று கொண்டிருந்த மேதைமை மிகுந்த கருத்துக்களுடன் இடையீடு செய்ய இயலாத நிலைமை (விருப்பமும் இருக்கவில்லை). அனைத்திற்கும் காற்புள்ளி வைத்து செயலிழக்கச் செய்து எனது இயலாமையைச் சினமாக மாற்றின கடந்த ஒரு வார காலம் ஊடகங்களும் அரசு எந்திரமும் மேற்கொண்ட திட்டமிட்ட பிரச்சார - புரளி யுத்தம்.

பெரும் அலைகளெனத் தொடர்ந்து மோதிய இப்பிரச்சாரத்தில் நிலைகுலைந்து போனேன். வெளிப்படையாக ஒப்புக் கொள்வதென்றால், இதற்கு முன்னர் ஊடகங்களும் அரசு எந்திரங்களும் மேற்கொண்ட பெரும் பிரச்சாரங்களுக்கு ஒருபோதும் ஆட்பட்டதில்லை. ஆனால், இச்சம்பவத்தில் நிலைதடுமாறி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக நேறிட்டது. நான் மட்டுமின்றி, தெளிந்து யோசிக்கக்கூடிய எனது நண்பர்கள் பலரும் இது போன்று நிலைகுலைந்து போய் நாங்கள் பரஸ்பரம் எமது வேதனைகளைப் பகிந்துகொண்டிருந்தோம்.

விடுபட்டு தெளிந்தபின், இது என்னுள் எழுப்பிய கேள்விகள், பிரச்சாரத்தின் அமைப்பு (structure of propaganda) குறித்த கேள்விகளின் பின் தொடரச் செய்துள்ளது. இவை குறித்து அடைந்துள்ள தெளிவுகளை ஒவ்வொன்றாக இங்கு பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

அதற்கு முன்னதாக, "சிறு பகிர்வும் சொல்லொன்னாச் சேதிகளைப் பகரும் குற்றமாகிப் போகும் காலம் நமது" என்ற தெளிவின் பின்னும், கவிதை எழுதுவது சாத்தியமாகும் எனும்போது, எனது முன்னாள் சகாக்களின் மிக மோசமான தவறுகளை சுட்டிக் காட்டுவதும் அவசியம் என்று தோன்றியதால் இதை ஒரு சிறு தொடராக எழுத முடிவு செய்திருக்கிறேன்.

(தொடரும் ... )

----------------------------------------

குறிப்புகள்:

1) இயலாமையும் சினமும் மனச்சோர்வும் கலந்து குழம்பியிருந்த நிலையிலிருந்து விடுபட்டு, சற்றே தெளிவைச் சேர்ந்ததுமே இதை எழுதத் துவங்கியிருக்கிறேன். இதை ஒரு விவாதமாகவோ கூட வளர்த்துச் செல்லும் விருப்பம் இல்லை.

வழமைகளிலிருந்து விலகி, மாற்றுகளை நோக்கிப் பயணிக்க முனைந்த சகபயணிகள் என்று யாரையெல்லாம் நம்பிக் கரம் கோர்த்தேனோ, எனது நேசத்தைப் பகிர்ந்தேனோ, அவர்களில் பலர் வஞ்சம் தீர்க்கும் கொடூர மனதினராக தம்மை வெளிப்படுத்திக் கொண்டபின், அதிகார வேட்கைகொண்டு அலைபவர்களாகிப் போனதைக் கண்ணுற்றபின், தமக்கொரு நியாயம் மற்றவருக்கொரு நீதி என்று நடப்பவர்களாக பலமுறை நிரூபித்தபின், 'அவப்பெயர்' காக்கத் தந்திரங்கள் செய்வதைப் பலமுறை சோதித்துக் கண்டபின்,
இத்துனை காலமும் அவர்கள் பேசித் திரிந்தவற்றுக்கும் அவர்களது உட்கிடக்கைகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று கண்டு கொண்டபின் அதை அவர்களை நோக்கி நேராகச் சொல்ல வேண்டும் என்ற சீற்றத்தில் ("அறச் சீற்றம்" என்றுதான் எழுதவேண்டும்; ஆனால் ‘அறத்தை' இவர்கள் முறமாக்கிப் பலகாலமாயிற்று என்பதால் தவிர்க்கிறேன்) எழுதத் தொடங்கியிருப்பது.

2) பால் செலானின் கவிதைகள் இன்னும் பலவற்றை மொழியாக்கம் செய்து வைத்திருக்கிறேன். அவரைப் பற்றிய அறிமுகம் சந்தர்ப்பம் வாய்க்கும்போது. இத்தொடரின் கருப்பொருளுக்குப் பொருத்தமாக இருப்பதாகக் கருதியதால் மேலுள்ள கவிதை. அலைக்கழிந்த மனநிலையில் மொழியாக்கம் செய்தது. குறை இருப்பின் நண்பர்கள் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். அதன்பொருட்டு ஆங்கில மொழியாக்கத்தை கீழே தந்திருக்கிறேன்:

A Leaf, treeless
for Bertolt Brecht:

What times are these
when a conversation
is almost a crime
because it includes
so much made explicit?

Paul Celan: Selected Poems
Translated by Michael Hamburger and Christopher Middleton, with an
Introduction by Michael Hamburger.

Penguin, 1972.

7 comments:

டிசே த‌மிழ‌ன் said...

வ‌ள‌ர்,
நிச்ச‌ய‌ம் நீங்க‌ள் இவை குறித்து எழுத‌வேண்டும்.
....
'அர‌சிய‌லைப் (ப‌லவீன‌ங்க‌ளுட‌ன்) பேசுவோம்' என்று நானும் ந‌ண்ப‌ரொருவ‌ரும் எழுத‌த்தொட‌ங்கிய‌ தொட‌ரொன்றை சில‌ அத்தியாங்க‌ளுட‌ன் ப‌திவு செய்யாம‌ல் வைத்திருக்கின்றேன்/றோம்). அது குறித்து நிதான‌மாய் எழுத‌க்கூடிய‌ ம‌ன‌ நிலை இப்போதைக்கு சாத்திய‌மில்லை என்ப‌தால் ம‌ட்டுமே. என்றேனும் ஒருநாள் ந‌ம் எல்லோரின‌தும் நிர்வாண‌ங்க‌ளை ‍ -முக்கிய‌மாய் முன்னோடிக‌ளாய் இருந்து எங்க‌ளை முட்டாளாக்கிய‌ புல‌ம்பெய‌ர்ந்து அர‌சிய‌ல் பேசிய‌வ‌ர்க‌ளை- ‍ வெளியே தெளிவாக‌க் காட்ட‌ கால‌ம் வ‌ராம‌லா போய்விடும்.

வளர்மதி said...

டி சே,

எழுத உத்தேசித்துத்தான் இவ்வாரம்பம்.

//அர‌சிய‌லைப் (ப‌லவீன‌ங்க‌ளுட‌ன்) பேசுவோம்'//

என்பது சரியான நிலையே. சொல்லப்போனால் இந்நிலைக்கு வருவது மிகச்சிரமம். The so called "politically correct" ஆட்களால் இதைப் புரிந்து கொள்வது இயலாது. இதை (சுட்டிக் காட்டுவதற்காக மன்னியுங்கள்) “இரண்டாயிரம் வருடங்களும் ...” என்ற கட்டுரையிலும் தொட்டுச் சென்றிருந்தேன்.

பிரச்சினை என்னவென்றால் தாம் அரசியல் ரீதியாக சரியான நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்ற மூட நம்பிக்கையில் இருப்போர் வாழ்வை மறுப்பவர்களாகவும், அந்த மூட நம்பிக்கையின் பாற்பட்டு நிகழ்வுகளைக் கவனமாகக் கூர்ந்து நோக்கி தமது முன்அனுமானங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் திறனை இழந்துவிடுவோராக மாறிவிடுவதும், இறுதியில் விடுதலை வாழ்வு மறுக்கப்படுவதற்குத் துணை நிற்போராக மாறிவிடுவதும்தான் :((

இத்தகையோரே இலக்கியத்தை/கலைகளை மிகுந்த பலத்துடன், அது தரும் வெறியுடன் இயற்றுபவர்களாக உருவெடுப்பதும் நிகழ்கிறது (இவர்களுக்குச் சுட்டிக்காட்டத்தான் பால் செலானை முன்மொழிகிறேன்).

இவர்கள் அரசியலுக்கும் கேடு விளைவிக்கிறார்கள்; இலக்கியத்தையும் பாழடிக்கிறார்கள். வாழ்வைக் கொல்பவர்களாக மாறுகிறார்கள்.

வலதுசாரிகள் எந்த அளவிற்கு இதில் பங்கு பெற்றார்களோ அதே அள்விற்கு ‘இடது'சாரிகளாக அறியப்பட்டவர்களும் - பத்து பதினைந்து கால ஃபேஷனில் - ‘மறுத்தோடிகள்', 'மாற்றுக்கருத்தாளர்கள்' என்று அறியப்பட்டவர்களும், சில மாங்கா மடையர்களும் செய்திருக்கிறார்கள் என்ற துணிபிற்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.

பெயர்ச் சொற்களைத் தற்சமயம் தவிக்கிறேன். எனினும் குறிப்பிட்டுச் சொல்லத் துணிவதில் எனக்குத் தயக்கமில்லை. அதிகார வேட்கைகள் பாற்பட்டு அவர்களது “நிற மாறுதல்கள்” ('நிறப்பிரிகை'யின் உட்கிடையே சிலருக்கு இதுதானோ!) எத்துனை கேடுகளை விளைவித்திருக்கின்றன என்பதைக் காட்ட.

sugan said...

முன்னொரு காலத்தில் யுத்தம் இருந்தது!
*************************************
மகிந்த மாத்தய எங்கள் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்
................................
அரசு என்பது ஆச்சிரமம் நடத்திக்கொண்டிருக்கும் அமைப்போ
அல்லது தேர்தல்களை நடத்தி உறுப்பினர்கள் மந்திரிகள் முதன்மந்திரி உள்ளிட்ட பாராளுமன்ற அமைப்புமுறைமூலமாக மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அமைப்போ அல்ல என நாம் பட்டுணர்ந்துள்ளோம்.

பொலிஸ்- இராணுவம்- நீதிமன்றம் - சிறைச்சாலை-இவற்றால் ஆனதுதான் அரசு இயந்திரமென்ற அரசறிவியலுக்கு அப்பால் அரசு
சமகாலத்தில் எப்படித்தொழிற்படும் என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணமும் சர்வதேசம் உலக ஒழுங்கு எப்படி இருக்கின்றது என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் நாம் நமது இலங்கை அரசைக்கேள்விக்கிடமின்றி சிறப்புதாரணம் கொள்ளமுடியும்.

அதேநேரத்தில் விடுதலைப்போராட்டம் என்பதன்பேரால் எப்படியான கொடூரங்களும் பயங்கரங்களும் உச்சபட்சமாக நிகழ்த்தமுடியும் என்பதற்கும் இந்த உலகத்தின் புத்தாயிரத்தின்தொடக்கத்தில் புதிய தசாப்தத்தில் நடந்துமுடிந்த நிகழ்வுகள் நமக்குமுன்னால் அள்ளிநிறைந்து கிடக்கின்றன.
.
போர் முடியும் என எல்லோரிடமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருந்தபோதிலும் நல்லமாதிரி முடியவேண்டுமென இருந்த அசட்டு நம்பிக்கை
அபத்தமாக அவலச்சுவையுடன் முடிந்துள்ளது.இப்பேரழிவின் சுழலிலிருந்து கிழக்குமாகாணம் தன்னை மிகவும் புத்திசாலித்தனமாக விடுவித்துக்கொண்டிருக்கிறது.

யுத்தத்திற்குப்பின்னான காலம் குறித்து புகலிடக் கவிதை ஒன்று இப்படிச்சொல்கிறது.

"இறக்கப்பிறந்தவனைச் சாகப்பண்ணி.... அதற்கொரு காரணம் சொல்லி கைதட்டுக்கேட்கும் காலம் அகன்றிருக்கும்.."

இந்தப்போரிலே ஈடுபட்டுத்தப்பியோடியவர்களுக்குத்தான் தெரியும் அதனது பயங்கரங்களும் அவலங்களும்.
நமது மாவீரர் குடும்பங்கள் இனி எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதை எழுதாமல் இருப்பது அவர்கள் மரணங்களைக் கொச்சைப்படுத்தாமல் இருக்க உதவும்.
தியாகிகள்-துரோகிகள் எனப்பிளவுபடுத்தப்பட்ட சமூகவகைப்படுத்தலிலிருந்து
இந்தப்போர்முடிவு மாபெரும் விடுதலையை அழித்திருக்கிறது.
இந்தவகையில் மகிந்த மாத்தயா எம் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்.அகதிமுகாங்களுக்கு தமிழரசியற்தலைவர்களின் பெயரைச்சூட்டிய உங்கள் நுண்ணுணர்விற்காக சிறப்பு மரியாதையையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

சிங்கள சினிமா மட்டுமல்ல சிங்கள அரசியலும் உலகத்தரம் வாய்ந்தது என மாத்தையா நீங்கள் நிறுவியிருக்கிறீர்கள்.

தேசியப்பெருமிதங்களும் இனப்பெருமைகளும் எங்குதானில்லை?

இனம்-மொழி-தேசம்-தன்னாட்சி- சுயநிர்ணய உரிமை-விடுதலை-உரிமை - சுதந்திரம் - இவற்றிற்கு எதிர்மறையான அர்த்தங்களை வழங்கியதென்றவகையில் மோசமான முன்னுதாரணமாகவும் சர்வதேச போராட்ட சக்திகளுக்கும் எதிர்ப்பியக்கங்களுக்கும் குழப்பத்தையும் நம்பிக்கையீனத்தையும் எச்சரிக்கையையும் வழங்கியிருக்கிறோம்.

இந்த முப்பதாண்டுகாலத்தில் இந்தப்போரிற்கான எதிர்ப்பில் இந்த யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என மிகவும் மெலிதான ஈனஸ்வரத்தில் ஒலித்த எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த போர் எதிர்ப்புப் போராளிகளுக்கு இந்த போர் முடிவு கசப்பான வெறுமையான வேதனையான துயர்மிகுந்த வெறுத்துப்போன மனநிலையை அளிக்கிறது.

""இந்த அராஜக யுத்தங்கள் நாகரீக சமுதாயத்தின் நல்விழுமியங்கள் அனைத்தையும் தடயமே இல்லாமல் குழிதோண்டிப்புதைத்தன" "என சிங்கள சமூகத்தின் புரட்சியாளரான தயபால திராணகம ஆயிரத்தித் தொளாயிரத்து தொண்ணூறாம் ஆண்டில் "துப்பாக்கிக்கலாசாரத்திலிருந்து மீள்வது எப்போது?" என்றதனது கட்டுரையில் நமது புகலிட சஞ்சிகையில் குறிப்பிடுகிறார்.
.
"செம்மனச்செல்வி சிவபெருமானுக்கு அடித்த அடி ஏன் எல்லா உயிர்கள்மேலும் படவேண்டும்.அடிக்க ஒருபிரம்பு இருந்ததால் .." என்ற நியாயமான கேள்வியிலிருந்து "ஆயுதங்களை வீசி எறிவோம் கடலுக்குள்...." என்பதுவரை போர் எதிர்ப்பில் இலக்கிய முகம் எதிர்ப்பு இலக்கியமாகவே இருக்கிறது.

துப்பாக்கிகளின் பேரைச்சொல்வதே கெளரமாகிப்போன தேசத்தில் மானுடத்தை யார் மதித்தார்....என கவிதை மானுட மேன்மைக்காக அழுதிருக்கிறது.

அறம் ஆன்மீகம் சகோதரத்துவம் அன்பு கருணை பரிவு நேசம் இவற்றிற்கும் சக மனிதரை மதித்தல் என்ற பக்குவத்திற்கும் இனி தமிழ்ச்சமூகம் தயாராகவேண்டியுள்ளது.

சுகன்

வளர்மதி said...

சுகன்,

இந்த மகிந்தக் 'காவடி'யை உங்கள் “பொய்க் கடதாசி”யில் வெளியிட்டிருக்கலாமே!

மயாதி said...

நல்லது...

இன்றைய எமது நிலை இனி மாறப்போவதில்லை. சர்வதேச சட்டங்கள் அரசுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே நடைமுறைப்படுத்தப்பட்டதே இதுவரையான வரலாறு.
இன்று அது இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது, இது மிகப்பெரிய உலக அழிவையே வருங்காலத்தில் ஏற்படுத்திவிடப்போவது உறுதி, ஏனென்றால் இந்தியாவைப்போல வெளிப்படையாகவே சுயநலமான வெளியுறவுக்கொள்கை உடைய நாடு சர்வதேச ரீதியில் ஆதிக்கம் பெறுவது இன்னும் ஒரு உலக யுத்தத்தையே வழிகோலும் ,, அதுமட்டுமல்ல இந்திய பாராளுமன்றத்தில் குற்றப்பின்னணி உடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை வீதம் .இது எல்லோருக்கும் தெரிந்த கணக்கு தெரியாதது இன்னும் அதிகம். இவ்வளவு குற்றவாளிகள் சர்வதேச ரீதியில் ஆதிக்கம் பெறும் பொது சர்வதேச கொலைகளுக்கா பஞ்சம் வரப்போகுது...


சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் எல்லாம் எழுதுங்கள் , அவைகள் அழிந்து போகும் நமது இனத்தின் கல்வெட்டுக்களாக இருக்கட்டும்,,,,

அய்யனார் said...

வளர்
எதிர்பார்க்கிறேன்.

மு.மயூரன் said...

//இப்பேரழிவின் சுழலிலிருந்து கிழக்குமாகாணம் தன்னை மிகவும் புத்திசாலித்தனமாக விடுவித்துக்கொண்டிருக்கிறது.//

பூளல்..!

Post a Comment

Recent Posts