2008, டிசம்பர் 7 அன்று சென்னை மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகில் நடைபெற்ற ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழ்க் கவிஞர்களின் கண்டனப் போராட்ட நிகழ்வில் இப்பிரதி முதன்முதலாக நிகழ்த்தப்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கவிதை வாசிக்கும்படி நண்பர் செல்மா ப்ரியதர்ஷன் அழைப்பு விடுத்தபோது, வெறுமனே சுயதிருப்திக்கான சடங்காக வாசிக்க மனமின்றி, வேறு ஏதேனும் உருப்படியாக செய்ய முடியுமா என்று யோசிக்கிறேன் என்று தெரிவித்தேன்.
ஈழத்தில் தமிழ் மக்கள் இலங்கை அரச இராணுவத்தால் அனுதினமும் கொல்லப்படுவது மிகச் சாதாரணமான நிகழ்வாகிவிட்டிருக்கும்போது, இங்கே தமிழகத் தமிழராகிய நாம் எவ்வகையில் வினையாற்றுவது என்ற கேள்வி சில மாதங்களாகவே மனதை அரித்துக் கொண்டிருந்தது.
இலங்கை அரச இராணுவத்தினரின் படுகொலைகள் மீதான கண்டனங்கள் தமிழகத்தில் சற்றுப் பரவலாக தற்போது எழுந்திருக்கிறது என்பது உண்மையெனினும், 80 - களில் இருந்தது போன்று, வெகுமக்களிடத்தில், ஈழப் போரட்டத்திற்கு ஆதரவான ஒரு எழுச்சி மனநிலை தற்சமயம் இல்லாதிருக்கும் நிலையில், அத்தகைய ஒரு மனநிலையை தமிழக வெகுமக்களிடையே மீண்டும் உருவாக்கும் திசையில் ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டிருந்தது.
இத்தகைய மனநிலையின் தவிப்பில் உருவானதே இந்நாடகப் பிரதி.
தமிழக மக்களிடையே ஒரு உணர்வெழுச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், எவரும் எளிதாக நிகழ்த்தும் சாத்தியங்களை மனதில் வைத்து, நாட்டுப்புற கதைசொல்லல் உத்திகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பதைத் தொடக்கத்திலேயே முடிவுசெய்து, எழுத முனைந்ததில் பிரதி இயல்பாக இவ்வடிவம் கொண்டது.
ஈழப் படுகொலைகளுக்கு எதிராக தமிழக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் விருப்பம் உள்ள எவரும் இப்பிரதியை நிகழ்த்தலாம். எனது அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (பதிப்பிக்க விரும்பும் பெரும் நிறுவனங்களுக்கு இந்த அரசியல் உரிமை இல்லை.)
முதல் நிகழ்த்துதலை சாத்தியப்படுத்திய நண்பர்கள் கருணா பிரசாத், ஆறுமுகவேல், புருஷோத்தமன் இளம் நடிகர்கள் வினோத், தரணி, விஜய், மற்றும் எமக்குப் புரவலர்களாக வாய்த்த "தமிழ் மையம்" அமைப்பினருக்கும் அன்பிற்குரிய நண்பர் தமிழச்சி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
குடுகுடுப்பைக்காரன்: நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
ஆத்தா பகவதி மாகாளியம்மா
ரத்தஞ் சொட்டுற நாக்கு சொல்லுதம்மா
அம்மா
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
அய்யா
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
மாதேவி மாகாளியம்மா
நர்த்தனமாடி கால்கடுக்க
தலகொடுத்தா
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
மண்ணாச
விண்ணாச
பெண்ணாச
பொன்னாச
பேராச
பேயாச விட்டு
ஆத்தா மாகாளியம்மா
கேட்டா தல கொடுத்தா
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
(பார்வையாளர்களை நோக்கி)
அம்மா நீ கொடுக்கியா
அய்யா நீ கொடுக்கியா
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
(பார்வையாளர்கள் பின்னே இருந்து வரும் இளைஞன்)
இளைஞன்: ஏ குடுகுடுப்ப ... நாங் கொடுக்கேன்
குடுகுடுப்பைக்காரன்: தம்பீ ... வெளயாட்டில்ல ... தலயக் கொடுக்கோனும் ... தலயக் கொடுக்கோனும் ...
இளைஞன்: விளையாட்டெல்லாமில்ல
குடுகுடுப்பைக்காரன்: நெஞ்சுல உரமிருக்கா? தைரியமிருக்கா?
இளைஞன்: அதெல்லாம் ஒன்னுமில்ல
குடுகுடுப்பைக்காரன்: வாய்ச்சவடாலா ... தம்பீ ... தெய்வ குத்தமாயிடும் ...
இளைஞன்: ஏ குடுகுடுப்ப ... அதெல்லாம் ஒன்னுமில்லய்யா ... நாங் குடுக்கேன் தலய ... ஆத்தா வரங்குடுப்பாளா?
குடுகுடுப்பைக்காரன்: மனசால பூரணமா வேண்டிக் கேட்டா கொடுப்பா ... தலயக் கொடுத்திட்டு ...
இளைஞன்: என்ன கேட்டாலும் குடுப்பாளா?
குடுகுடுப்பைக்காரன்: எதக் கேட்டாலும் கொடுப்பா ...இந்தக் கடலையே குடிக்கலாம் நீ ...
மரத்தப் புடுங்கலாம்
மலயப் பெயர்க்கலாம்
மண்ணப் பொன்னாக்கலாம்
பொன்ன கல்லாக்கலாம்
கல்ல சிலையாக்கலாம்
சிலைய பெண்ணாக்கலாம்
காத்தக் கட்டி கக்கத்துல வச்சுக்கலாம்
ஆத்தா வரங்கொடுத்தா
நீ தலயக் கொடுத்தா
ஆமா ... ஒனக்கென்ன வேணும்
இளைஞன்: அத நா ஆத்தா கிட்ட கேட்டுக்கறேன்
குடுகுடுப்பைக்காரன்: அட சொல்லு தம்பி; உன் தலயவா கேட்டுப்புட்டேன்
இளைஞன்: அது ஆத்தாவுக்கு
குடுப்பைக்காரன்: சரி சரி சொல்லு ... நா ஆத்தாகிட்ட கூட்டிட்டுப் போறேன் ... ஆத்தாவ இங்கயே வரவழைக்கிறேன்.
இளைஞன்: நெசமா?
குடுகுடுப்பைக்காரன்: உன் தல நெசந்தானே?
இளைஞன்: (பலமாகத் தலையை ஆட்டி)
ம்ம்ம் ... ம்ம்ம்
நா நா கவிஞனாகனும் ... வரகவியாகோனும்
குடுகுடுப்பைக்காரன்: என்னாது!
காளி: அடேய்!
பேய்க்கூத்தாடியபடி காளி அரங்கவெளியை வலம் வந்து அரங்கின் மையத்தில் நிலை கொள்கிறாள். குடுகுடுப்பைக்காரன் (தாயே என்றலறி) முழங்காலிட்டு கைகூப்பி வணங்கி உறைந்து விடுகிறான். இளைஞன் பயந்து நடுங்கி அவன் பின்னே ஒடுங்கி நிற்கிறான்.
காளி: யாரடா அது! தலை கொடுக்க வந்தது!
குடுகுடுப்பைக்காரன்: (பின்னாலிருக்கும் இளைஞனை முன்னே இழுத்து நிறுத்தி)
தாயே! மாகாளி! இவன்தாம்மா, இவன்தாம்மா!
இளைஞன்: நா இல்ல, நா இல்ல.
பயந்து நடுநடுங்கி ஒடுங்கி நிற்கிறான். குடுகுடுப்பைக்காரன், அவனைப் பிடித்து மண்டியிட்டு குனியச் செய்கிறான்.
இளைஞன்: (தலை நிமிராமல்) ஆத்தா! என்ன விட்டுடு, என்ன விட்டுடு!
காளி: அடேய், அற்ப மானிடா! தலை கொடுக்கறேன்னு வந்தது நீ தானா?
இளைஞன்: இல்ல ஆத்தா ... தெரியாம ...
காளி: (குடுகுடுப்பைக்காரனை நோக்கி)
ம்ம்ம் ... என்னடா இது வேடிக்கை!
குடுகுடுப்பைக்காரன்: (நடுங்கிக்கொண்டு) தாயே! பைரவி! அகிலாண்டேஸ்வரி ... ஆரோக்கியமாதா ... இல்லே இல்லே ... ‘அபிராமி அபிராமி' ... ஐயோ ... ஆத்தா ... காளியாத்தா ... பத்ரகாளியம்மா ... நான் சோதிச்சுப் பாக்குறதுக்குள்ள நீயே வந்துட்டியே ... நா என்ன பண்ணுவேன் ...
காளி: ம்ம்ம் ... சரி, என்ன வேணுமாம் இவனுக்கு! என்ன வரம் வேணுமாம்? என்ன கேட்கிறான் இந்தப் பதர்!
குடுகுடுப்பைக்காரன்: தாயே! கவிஞனாகனுமாம்!
காளி: என்னது! ஒரு கிறுக்கனுக்கு அந்த வரத்தை எப்பவோ குடுத்திட்டேனே! சாகுந்தலையும் பாடி மகாகவி பட்டமும் வாங்கிட்டானே அவன்! இப்போ இன்னொரு கிறுக்கனா!
(இளைஞனைப் பார்த்து)
அடேய் மானிடா! எங்கே, நிமிர்ந்து பார்!
(இளைஞன் நடுக்கத்துடன் நிமிர்ந்து பார்க்கிறான்.)
இளைஞன்: தாயே!
காளி: எதுக்கடா உனக்கு இந்த விபரீத ஆசை? சினிமாப் பாட்டு எழுதனுமா?
இளைஞன்: (பயத்தில்) ஆமா ஆத்தா ... இல்ல ஆத்தா ...
காளி: என்ன!
இளைஞன்: இல்ல ஆத்தா ... இல்ல ஆத்தா ...
காளி: பின்னே வேற என்ன?
இளைஞன்: சீரியஸ் கவிஞனாகனும் ஆத்தா
“சமூகம் கெட்டுப் போய்விட்டதடா
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம்
வாடா”
இதுமாதிரி சின்னத்தனமா கூத்தடிக்காம ...
“எழுது உன் கவிதையை நீ எழுது”
இப்படி ஆணவமா சவடால் அடிக்காம
“தழுவ விரியும்
தொடைகள்
திரண்டு
பிரிந்து பிரிந்து
இடையே ஓர்
தலைகீழ் கருஞ்சுடர்
எரிந்து எரிந்தழைக்கும் “
இதுமாதிரி எழுதோனும் ஆத்தா
குடுகுடுப்பைக்காரன்: அடே அடே! கிராதகா! மாபாதகா! ஆத்தா கிட்டயே இப்படி கூச்சநாச்சமில்லாம பேசறியே ...
காளி: (புரியாமல் விழித்து) என்ன? என்ன அது கூச்சநாச்சமில்லாம?
இளைஞன்: (சுதாரித்துக்கொண்டு) இல்ல ... ஒன்னுமில்ல ஆத்தா ... என் கவிதையை நானே எழுதனும் ஆத்தா ... அவ்ளோதான்.
காளி: அட அற்பப் பதரே! இவ்வளவுதானா! எங்கே நாக்கை நீட்டு. ஆணியால எழுதிடறேன்.
இளைஞன்: ஐயோ! வேணா ஆத்தா, வேணா ஆத்தா ...
காளி: (குடுகுடுப்பைக்காரனைப் பார்த்து) என்னடா இவன்! கவிஞனாகனும்னு கேட்கிறான். நாக்கை நீட்டச் சொன்னா அலறுகிறான்!
(இளைஞனை நோக்கி)
அடே மானிடா! என் பொறுமையைச் சோதிக்காதே!
இளைஞன்: இல்ல ஆத்தா! இல்ல ஆத்தா! நாக்குல எழுதிட்டு, என் தலய எடுத்திட்டு நீ போயிட்டன்னா, அப்புறம் எப்படி நான் கவிஞனா ஆகுறது?
காளி: (குடுகுப்பைக்காரனைப் பார்த்து)
பார்த்தாயா மானுட சாமர்த்யத்தை
(பலமாகச் சிரிக்கிறாள்)
(இளைஞனைப் பார்த்து)
அதனால் ...
இளைஞன்: என் தலய மொதல்ல குடுத்துடறேன் ... அதுக்கப்புறம் நீ ஒட்ட வச்சு நாக்குல எழுதிடு ...
குடுகுடுப்பைக்காரன்: (பார்வையாளர்களை நோக்கி)
நிறைய ஜிவாஜி படம் பாத்திருப்பான் போலிருக்கே!
காளி: (கோபத்துடன்) அடே மானிடா! எடுத்ததைக் கொடுத்ததில்லை. கொடுத்ததை எடுத்ததில்லையடா இந்த மாகாளி.
(குடுகுடுப்பைக்காரனைப் பார்த்து கோபமாக)
மூடனே! எதுவுமே சொல்லவில்லையா இந்தப் பதரிடம்!
குடுகுடுப்பைக்காரன்: மாகாளியம்மா! நேரம் போதல்லையம்மா ... நேரம் போதல்லையே ... நீ சீக்கிரமா வந்துட்டியேம்மா ...
காளி: ஆமாமடா ... அங்கே ஆயிரம் தலைகளை விட்டுவிட்டு, இந்த ஒற்றைக் குடுமிக்காக கடல் தாண்டி வந்தேனே, என்னைச் சொல்லனும்.
இளைஞன்: ஆத்தா ... கடல் தாண்டி வந்தியா!
குடுகுடுப்பைக்காரன்: ஆமாண்டா அபிஷ்டு. ஆத்தா கடல் தாண்டித்தான் வந்திருக்கா. உனக்காக ... உனக்கு வரங் கொடுக்கறதுக்காக ... கோட்ட விட்டுடுவ போல இருக்கே ...
இளைஞன்: ஆனா, ஆத்தா என் தலய எடுத்துடுவாளே! எடுத்துட்டு ஏமாத்திட்டான்னா?
குடுகுடுப்பைக்காரன்: அட, உன் ஒரு தல எம்மாத்திரம் ... ஆத்தா & co பல லட்சம் தலைகள உருட்டியிருக்காக
இளைஞன்: ஆத்தா & co – வா?
குடுகுடுப்பைக்காரன்: ஆமாமடா ... சகோதரிகள் நாலுபேர் ... திசைக்கு ஒருத்தி. மேற்கு ஆரோக்கியமாதாவுக்கு , கிழக்கு மகிஷாசுரமர்த்தினிக்கு , வடக்கு திரிசூலிக்கு , தெற்கே ... பத்ரகாளி ... யுகயுகமா மனுஷங்க ரத்தம் குடிச்சுக் குடுச்சு அட்டகாச நடனம் ஆடிட்டிருக்காங்க. ஆனந்தக் களி நடனம் ... ஆகா ... காணக் கண் கோடி வேணுமடா ... கண் கோடி வேணும் ... என் மாகாளி, பத்ரகாளியம்மா பாதம்பட்ட மண் ரத்தத்தால சிவக்குமடா, ரத்தத்தால சிவக்கும் ... புத்தனையே புல்லனாக்கும்.
இளைஞன்: என்னது! புத்தனையேவா?
குடுகுடுப்பைக்காரன்: நாஞ்சொல்லலையப்பா, நாஞ்சொல்லல. தெற்கின்
மாகாவியம், மகாவம்ச மகாகாவியம் சொல்லுது ...
போர்த்தியிருக்கும் குடுகுடுப்பைக்காரனுக்குரிய சால்வையைக் களைந்துவிட்டு ஒரு கதைசொல்லியாக முன்நகர்ந்து, பார்வையாளர்களை நோக்கி ...
கல்பகோடி ஆண்டுகள் முன்னே
பூமாதேவி மத்தியிலே - நெத்தியிலே
ஒசந்து நின்ன மேருமல அடிவாரத்திலே
பரந்து விரிந்த ஜம்புத்வீபம்
நாவலந்தீவு
பாரதவர்ஷம்
யுகங்கள் கற்பூரமாய் எரிந்து
அந்தார கல்பத்திலே ஆங்கார ஆசையிலே
மண்ணாசை
பெண்ணாசை
பொன்னாசை
பேராசை
பேயாசை விரட்டி
பாவம் பலகோடி புரிந்த பாதகரைக்
காத்துக் கடைத்தேற்றப் பிறந்தான் சித்தார்த்தன்
போதி மரத்தடியில் சித்தம் தெளிந்து
ஞானம் கண்டு
புத்தனான ஒன்பதாம் வருஷத்திலே
ஜம்புத்வீபத்தின் தென் கோடியிலே
இந்து மகாசமுத்திரத்திலே
தத்தளித்துத் தவித்துக் கிடந்த
இலங்கைத் தீவும் சேர்ந்தான்
மாகாளி பாதம் பட்ட மண்ணல்லவா
புத்தனும் புல்லனானான்
புத்தனும் புல்லனானான்
புயலும் பெருமழையும்
இருளும் சுடுநெருப்பும் பொழிந்து
ஆங்கே கூடிக்களித்திருந்த யட்சர்களை
பூச்சிகாட்டி
பணியவைத்தான் பணியவைத்தான்
பெளத்த மாகாவியம்
மகாவம்ச மகாகாவியம்
சொல்லுதடா
புத்தனும் புல்லனானான்
புத்தனும் புல்லனானான்
...
எம் மாதேவி மாகாளி
பெளத்த மாகாவியத்திலே
கொண்ட ரூபம் விகாரி
தமிழன் தலையறுத்த வாள் கழுவி
அச்செந்நீர் பருகி
சூல் கொண்டு
மாகாளி விகாரி ஈன்ற பிள்ளை
துத்தகமுனு ...
துத்தகமுனு ...
கதைசொல்லி, இளைஞன், காளி மூவரும் இணைந்து ஒரு வட்டமாகச் சுழன்று பாத்திரம் மாறுகின்றனர்: கதைசொல்லி அரசனாக, இளைஞன் துத்தகமுனுவாக, காளி விகாரியாக.
அரசன்: (துத்தகமுனுவை நோக்கி) துத்தகமுனு! தாயின் தாள் பணிந்து தருக்கழித்து தணிந்து என் முன்னே வா!
துத்தகமுனு விகாரியின் தாள் பணிந்து, தந்தையின் முன் வந்தமர்கிறான்.
அரசன்: பிள்ளாய்!
காட்டுக் குறவர்க்கும் கிட்டாத தேனெடுத்து
பன்னிரெண்டாயிரம் பிக்குகள் பருகி
மீதம் தந்ததைச் சுவைத்து
தமிழனொருவன் தலையறுத்த
வாள் கழுவி
அச்செந்நீர் பருகி
அறுத்த தலைமீதேறி
அநுராதபுரத்து பொற்றாமரைக் குளத்
தாமரை மலர் சூடி
தவமிருந்து பெற்றாளடா
உன் அன்னை விகாரை.
இப்பால் சோறு உண்டு
யானுரைக்கும் மொழி கேட்டு சபதம் கொள்!
(பால் சோறுள்ள கிண்ணம் எடுத்து, முன்னே வைப்பது போன்ற பாவனை செய்து)
எம் தேசத்து உயிர்ச்சுடராம் பிக்குகளை ஒருநாளும் புறந்தள்ளாய்!
துத்தகமுனு: (பால் சோறு பருகும் பாவனை செய்து)
இத்திண் தோள் மீது சிரம் நிற்கும் வரை எம் பிக்குகள் வழி நடப்பேன் தந்தையே!
அரசன்: (இரண்டாவது பால் சோறு கிண்ணத்தைத் தந்து)
ஒருபோதும் சோதர யுத்தம் புகமாட்டேன் என சபதஞ்செய்!
துத்தகமுனு: (பருகி) இன்னுயிர் துறக்கினும்
உடன் பிறந்தோனை ஒரு வன்சொல் துணியேன்!
அரசன்: தமிழர் தம் பகை நாடேன் என சூல்கொள்!
துத்தகமுனு: ஆ!
அலறி ஆவேச நடனம் ஆடி பால் சோறு கிண்ணத்தை வீசி எறிந்து ...
ஏலாது! ஏலாது! ஒருபோதும் ஏலாது!
உரக்கச் சொல்லி விரித்திருக்கும் சால்வையில் கைகால்கள் குறுக்கி படுக்கிறான்.
விகாரி: (அவனருகே சென்று தலை வருடி)
துத்தகமுனு ... ஏனய்யா கூனிக்குறுகி இக்கோலம் ... ?
துத்தகமுனு: தாயே!முப்புறம் கடல் ... வடக்கே தமிழர் ... எங்ஙனம் யான் கைவீசி, கால் பரப்பி உடல் சாய்ப்பேன்?
விகாரி: (ஆங்காரமாக சைகையுடன்) இப்படி உதையடா! தமிழரை இப்படி உதை!
உதைத்துக் காட்டி ஆவேச நடனமாடி வலம் வந்து நிற்க, அதேபோது, துத்தகமுனுவும் அரசனும் இரு சேவகர் போல், சற்று தள்ளி மண்டியிட்டு நிலை கொள்கின்றனர்.
விகாரி: உதைத்துத் துரத்து
தமிழரை உதைத்துத் துரத்து ...
கொல்
கொல்
பட்டத்து யானை சரிந்துபட
கரம் பரப்பி களத்தில்
நெடுக வீழ்வான் எல்லாளன்
அவன் மகுடம் மண்ணில் தேய்த்து அமிழ்த்தி
சிரம் கொய்து
ஆங்கே நெடிதுயர்ந்து எழுப்பு ஓர் தூபி
ஆண்டுகள் ஈராயிரம் கடக்கினும்
உன் வழித்தோன்றல்கள்
இரத்தத்தினால் அபிஷேகம் செய்து
எனை வழிபட ஏதுவாய்
நெடிதுயர்ந்த ஓர் தூபி ...
தமிழர் தலையறுத்து
இரத்தாபிஷேகம்
இரத்தாபிஷேகம்
புத்தம் சரணம் புத்தம் சரணம் ...
தலைகள்
தலைகள்
புத்தம் சரணம் புத்தம் சரணம் ...
இரத்தம்
இரத்தம்
புத்தம் சரணம் புத்தம் சரணம் ...
எங்கே
எங்கே
புத்தம் சரணம் புத்தம் சரணம் ...
யாரடா அங்கே
அடே வர்த்தனா
அடே பக்சனா
எங்கேயடா இரத்தம்
எங்கேயடா இரத்தம்
இருவரும் ஒருசேர: தாயே! இதோ ... இதோ ...
இருவரும் பார்வையாளர்களிடையே அமர்ந்திருக்கும் 10 நடிகர்களில் ஒருவரைப் பிடித்து இழுத்து விகாரியின் முன் நிறுத்தி ...
இருவரில் ஒருவர்: உன் பேரென்ன?
பிடித்து வரப்பட்டவர்: குமரன்
வயது: 15
விகாரி: கொல்! கொல்!
இருவரும் அந்த இளைஞனைக் கொல்வது போன்று பாவனை செய்ய, அவன் விகாரியின் முன் வீழ்கிறான்.
அடுத்தவர் ...
இருவரில் ஒருவர்: பேரென்ன?
பி.வ: கந்தய்யா
வயது: 18
விகாரி: அறு! கழுத்தை அறு!
பாவனை ... இளைஞன் முன் விழுந்தவன் அருகே வீழ்கிறான்.
அடுத்தவர் ...
இரு. ஒரு: பேரச் சொல்லு?
பி. வ: கோணேஸ்வரி
விகாரி: இவளைச் சூறையாடுங்கள்!
இருவரும் அவளைச் சுழற்றி விட அவள் மும்முறை சுழன்று விழ ...
விகாரி: அவள் யோனியில் குண்டைத் திணி! வெடித்துச் சிதறட்டும்!
அடுத்தவர் ...
இரு. ஒரு: பெயர்?
பி. வ: யோகன் ... 14 வயசுங்கோ...
விகாரி: கிட்டே இழுத்துவாங்கடா அவனை ...
மடியில் கிடத்தி கழுத்தைக் கடித்து இரத்தம் உறிஞ்சுவது போன்று பாவனை செய்து உருட்டி விடுகிறாள்.
சரசரவென அடுத்தடுத்து ... : குமுதா 16, செல்வா 22, குமரேசன் 19, ராசய்யா 17, யோகேஸ்வரன் 20, சீராளன் 15...
உடல்கள் ஒன்றன்மீது ஒன்றாகக் குவிந்து ஒரு மலை போல விழுந்துகிடக்க விகாரி அப்பிணக்குவியலைச் சுற்றி ஆவேச நடனமாடி, இறுதியில் சேவகம் புரிந்த வர்த்தனா, பக்சனா இருவரையுமே மடியில் கிடத்தி இரத்தம் குடித்து அப்பிணக்குவியலில் தள்ளி, குவியலின் மேல் ஒருகாலை வைத்து ஆவேசம் அடங்காது நிற்கிறாள்.
* * *

