Feb 21, 2008

ஜெயமோகனின் திருட்டு - ஒரு சான்றாதாரம்

குறிப்பு:

சில வாரங்கள் இணையப் பக்கம் அதிக நேரம் செலவிட வாய்க்கவில்லை. நண்பர் ஜமாலன் "செல்லம்மாள் பாகம் II - ல் எழுப்பிய கேள்விக்கு பதில் பகிர வாய்க்கவில்லை. அவரது கேள்வி எழுப்பிய தூண்டுதலில் புதுமைப் பித்தனை மீண்டும் ஒருமுறை வாசித்த மகிழ்ச்சி மட்டுமே.

இன்னும் சில வாரங்கள் இந்த நிலையே தொடரும் என்று தோன்றுகிறது. அவ்வப்போது இங்கு 'உலாத்திவிட்டுப்' போக நேர்ந்தபோது கவனிக்க நேர்ந்த 'ஜெயமோகன் விவகாரம்' திரு. பொ. வேல்சாமியின் இந்த அம்பலப்படுத்தலை விஷயத்தின் முக்கியத்துவம் கருதி இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. அவருடைய அனுமதி பெற்று இங்கு பதிவிலிடுகிறேன்.

சிற்றிதழ் உலகில் ஜெயமோகனை பன்முறை பலரும் மிக வெளிப்படையாக அம்பலப்படுத்தியாகிவிட்டது. ஒவ்வொரு பிரச்சினையின் போதும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் என்றுமே நேர்மையாக பதில் சொன்னதில்லை. 'அவதூறு' செய்கிறார்கள் என்று பழியை எதிர் தரப்பினர் மீது சுமத்திவிட்டு, சில மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும் வேறு ஏதாவதொரு அசட்டுத்தனமான பிரச்சினையைக் கிளப்புவதே அவரது வாடிக்கை. இனியும் சட்டை செய்யக் கூடியவரல்ல என்ற அளவுக்கு இது நிகழ்ந்தேறிவிட்டது.

இது தொடர்பாக இன்னும் சில விஷயகளைப் பகிர்ந்து கொள்ளவும் விருப்பமுண்டு. சாத்தியமானால் முயற்சிக்கிறேன்.நன்றிகள்.

_______________________________________________

(சொல் புதிது டிசம்பர் 2001, இதழ் 8 க்குப் பின்னர் இதழ் 9 என்று வந்த இதழில் (இவ்விடத்தில் வெளியிடப்பட்ட தேதி இல்லை. இதழ் வெளிவந்த தேதியை கண்டுபிடிப்பவருக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாம்) தமிழ் இசை பற்றிய சில கட்டுரைகளும், இசை பற்றிய ஒருவரது பேட்டியும் வந்துள்ளது.

பக்கம் 4 - ல் உள்ள எஸ். அருண்மொழி நங்கை பெயரில் வெளிவந்திருக்கும் "தமிழிசை ஒரு பின்னோக்கிய பார்வை" என்ற கட்டுரை 1997 இல் வெளிவந்த "மனோரமா இயர் புக்" பக்கங்கள் 176 முதல் 185 வரை உள்ள பகுதியின் முழுமையான "காப்பி"யாக உள்ளது. மனோரமா இயர்புக்கில் அந்தக் கட்டுரையை எழுதியவர் தற்பொழுது தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் இசைத்துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியை திருமதி இ. அங்கயற்கண்ணி அவர்கள்.

இக்கட்டுரை சில பகுதிகள் நீக்கப்பட்டு, சில சொற்கள் மாற்றப்பட்டு ('வழங்கிய' என்பதற்கு 'இயற்றிய' என்றும் 'இந்தளம்' என்ற தமிழ்ப் பண்ணின் பெயர் 'இளந்தளம்' - வந்துள்ளது. இளந்தளம் என்று எந்தப் பண்ணிற்கும் தமிழில் பெயர் இல்லை என்பதை காப்பி அடிக்கும் அவசரத்தில் மறந்துவிட்டனர் போலும்.

ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்பதற்கு நாயன்மார்கள் என்றும் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் என்பதற்கு ஆழ்வார்கள் என்றும் இக்காலங்களில் என்பதற்கு - இக்காலகட்டங்களில் பேணினர் என்பதற்கு - வளர்த்தனர் என்றும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய முழுமையான காப்பிக்கு தமிழில் திருட்டு என்று பெயர்.

இதழ் 9 - ன் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள்: 1. ஜெயமோகான் 2. வேதசகாயகுமார் 3. அருண்மொழிநங்கை 4. மோகனரங்கன் 5. சூத்ரதாரி. ஆசிரியர் சரவணன். கட்டுரை அருண்மொழிநங்கை பெயரில் உள்ளது. (இவர் ஜெயமோகன் துணைவியார்.)

இக்கட்டுரைத் திருட்டு பற்றி நண்பர்களிடம் உரையாடும்போது ஒருவர் இந்த ஒரு கட்டுரைதானே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்டுரைகள் உண்மையானவைதான் என்று எப்படி நம்புவது என்றார். அடுத்தவர் பொருளை அபகரிப்பது அரசியலில் அன்றாட நடைமுறைதான். இது இலக்கியத்திலும் தொடர வேண்டுமா? ஆம், மக்கள் முட்டாள்கள் என்பது அரசியலுக்கு சரிதான். இலக்கிய வாசகர்கள், சக எழுத்தாளர்களுக்குமா? இத்திருட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவர எனக்கு உதவிய முனைவர் சு. துரை அவர்களுக்கு என் நன்றி.

- பொ. வேல்சாமி.
_______________________________________________
சொல் புதிதுவில் வெளிவந்த வடிவம்

தமிழிசை - ஒரு பின்னோக்கிய பார்வை

எஸ். அருண்மொழி நங்கை

பெண்பாற் இயலிசைப் புலவரான காரைக்காலம்மையார் (5 ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இசை உலகில் முக்கியத்துவம் பெறுகின்றன. பதிக மரபிற்குப் புத்துயிரூட்டிய அம்மையார் நட்டபாடை, இளந்தளம் ஆகிய இரு பண்களில் பாடிய பதிகங்களைப் பின்வந்த இயலிசைப் புலவர்கள் முன்னோடியாகக் கொண்டனர்.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் சைவ - வைணவ சமயங்களைப் பரப்புவதற்கும், இறைவனைத் தலங்கள் தோறும் சென்று வழிபடுவதற்கும் பல்லாயிரக்கணக்கான தேவாரப் பாடல்களையும், திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் இயற்றித் தமிழிசையை வளர்த்தெடுத்தனர். இக்கால கட்டங்களில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் (7 - ஆம் நூற்றாண்டு) இசைக் கலையை வளர்த்தனர் என்பதற்கு மகேந்திரவர்ம பல்லவ மன்னன் புதுக்கோட்டையில் உள்ள குடுமியான் மலையில் பொறித்த இசை பற்றிய கல்வெட்டே சான்று.

இராசராச சோழன் காலத்தில் (கி. பி. 985 - 1014) தேவாரப் பாடல்கள் பாடுவதற்குக் கோயில்களில் 48 ஓதுவார்களுக்கும், உடுக்கை, 'கொட்டி மத்தளம்' வாசிப்போர் இருவருக்கும் ஆக 50 பேருக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் பற்றிய செய்திகளைத் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள் உரைக்கின்றன.

பதின்மூன்றாம் நூற்றாண்டில், சாரங்கதேவர் இயற்றிய 'சங்கீத ரத்னாகரம்' எனும் வடமொழி இசை இலக்கண நூலில், 'தேவார வர்த்தினி' எனும் அடைமொழியுடன் பல தமிழ்ப் பண்களும், பெயர்களும், இலக்கணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர், தமிழக இசையின் தாளங்களை விளக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கில் முருகப் பெருமானின் பெயரில் திருப்புகழ்ப் பாடல்களைச் சந்த நடையில் பாடியருளினார். அவையே தமிழக இசையின் தாளக் கூறுகளுக்கு மூல இலக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இன்றைக்கு வழக்கில் உள்ள நூற்றுக்கணக்கான தாளங்கள் திருப்புகழ்ப் பாடல்களின் அமைப்பிலிருந்தே பெறப்படுகின்றன.

சோழர் காலத்தை அடுத்து தமிழகத்தை ஆண்ட விசயநகர, நாயக்கர், மராட்டிய (17, 18, 19 ஆம் நூற்றாண்டுகள்) மன்னர்களும் இசையைப் போற்றிப் பேணினர். அம்மன்னர்களின் தாய்மொழிப் பாடல்கள் ஆதரிக்கப்பட்டன. இவை தமிழிசை மரபை ஒட்டிப் பாடப்படும் 'கர்நாடக சங்கீதம்' எனும் பெயரில் குறிக்கப்பட்டன. இவ்வாறு கோயில்களிலும், அரசவைகளிலும் இருந்து வந்த தமிழக இசை, பொது மக்களுக்காக அரங்குகளில் வேற்று மொழிப் பாடல்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கால கட்டங்களில் முத்துத் தாண்டவர் (1560 - 1640), மாரிமுத்துப் பிள்ளை (1712 - 1787), அருணாச்சலக் கவிராயர் (1711 - 1778) முதலானோர் பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் பிரிவுகளைக் கொண்ட கீர்த்தனை, பதம் முதலான இசைப் பாடல்கள் இயற்றியிருப்பினும், அவை தமிழல்லாது வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு மன்னர்கள் ஆண்ட காலத்தில் பாடப்பட்டதால் ஆதரிக்கப்படாமல் போய்விட்டன.

இதையடுத்து தஞ்சையில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் (1767 - 1847), முத்துசுவாமி தீட்சிதர் (1775 - 1834), சியாமா சாஸ்திரிகள் (1762 - 1827) ஆகியோர் தெலுங்கு, வடமொழியில் பல பாடல்கள் இயற்றி கர்நாடக இசையை மேம்படுத்தினர். இம்மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாதலால் இவர்கள் இயற்றிய பாடல்களின் இசை மரபு தேவாரம் மற்றும் தமிழிசைப் பாடல்களை அடியொற்றியவை எனக் கருதலாம். இவர்களை அடுத்து, கோபால கிருஷ்ண பாரதியார், வேதநாயகம் பிள்ளை, இராமலிங்க அடிகளார், நீலகண்ட சிவன் ஆகியோர் தமிழ்ப் பாடல்களை இயற்றினர். இருபதாம் நூற்றாண்டில் கோடீசுவர ஐயர், பாபநாசம் சிவன், மகாகவி பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் தமிழ்க் கீர்த்தனைகள் இயற்றித் தமிழிசையை வளப்படுத்திய போதிலும், சங்கித மும்மூர்த்திகளின் பாடல்களால் செவ்விசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் பிரபலமடையவில்லை. இந்நிலையில் தமிழ் நாடகங்களில் தமிழ்ப் பாடல்கள் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தின. சங்கரதாஸ் சுவாமிகள், மதுரை மாரியப்ப சுவாமிகள் பாடல்கள் குறிப்பிடத்தக்கன. பின்னர் திரைப்படங்களில் தமிழிசைப் பாடல்கள் இடம் பெறும் காலகட்டம் தொடங்கியது. குறிப்பாக எம். கே. தியாகராச பாகவதர், ஜி. என். பாலசுப்பிரமணியம், தண்டபாணி தேசிகர், பி. யூ. சின்னப்பா போன்றோர்கள் செவ்விசையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படப் பாடல்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

செவ்விசை அரங்குகளில் வடமொழி, தெலுங்குப் பாடல்கள் பாடப்பட்டு வந்த நிலையிலும், தமிழ்ப் பாடல்களுக்குரிய இடம் தரப்படாத நிலையிலும், தமிழ் நாட்டு இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் முழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு, டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் சீரிய முயற்சியில் சென்னையில் 1943 ஆம் ஆண்டில் தமிழிசைச் சங்கம் நிறுவப்பட்டது. அங்கு ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தேவாரப் பண்ணாராய்ச்சி மாநாட்டில் ஆராய்ந்ததில் 25 பண்களுக்குரிய இன்றைய இராகங்கள் கிடைத்துள்ளன. அவை பாடப்படும் காலங்களுக்கேற்ப பகற் பண்கள், இரவுப் பண்கள், பொதுப் பண்கள் என வகைப்படுத்தியுள்ளனர்.

இத்தகு சிறப்பு வாய்ந்த தமிழிசை சென்ற நூற்றாண்டு வரை செவ்விசையாகவே இருந்தது. பொதுமக்கள் விரும்பி இலயித்துக் கேட்கும் வண்ணமிருந்தது. ஆனால், இந்த நூற்றாண்டில் இந்நிலை மாறியுள்ளது. இன்றைய நிலையில் தமிழிசை என்றாலே, புதுப்புதுக் கவிஞர்கள் இயற்றிய பக்திப் பாடல்களும், திரை இசைப் பாடல்களுமே நினைவுக்கு வருகின்றன. தமிழிசையில் உயிர்நாடியாகத் திகழும் இன்னிசை தன்மை மாறி, ஒத்திசையும் இன்னிசையும் கலந்தொரு கலப்பிசையாகத் தமிழிசை இன்றைய திரை இசையமைப்பாளர்களால் புது உருவம் அடைந்துள்ளது. இப்புது உருவத்தையே மக்கள் விரும்பி மயங்குவதால், தமிழில் செவ்விசைப் பாடல்கள் அருகி வருகின்றன.

நாளைய தலைமுறையினருக்குத் 'தமிழிசை' சென்று சேருமா என்பதே ஐயம்தான்.

___________________________________________

'மனோரமா இயர் புக்' இல் வெளிவந்த மூலக் கட்டுரை

காலந்தோறும் தமிழிசை

முனைவர் இ. அங்கயற்கண்ணி
இசைத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

பெண்பாற் இயலிசைப் புலவரான காரைக்காலம்மையார் (5 ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இசை உலகில் முக்கியத்துவம் பெறுகின்றன. பதிக மரபிற்குப் புத்துயிரூட்டிய அம்மையார் நட்டபாடை, இந்தளம் ஆகிய இரு பண்களில் பாடிய பதிகங்களைப் பின்வந்த இயலிசைப் புலவர்கள் முன்னோடியாகக் கொண்டனர்.

இவ்வகையில் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலான நாயன்மார்களும், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் முதலான ஆழ்வார்களும் சைவ - வைணவ சமயங்களைப் பரப்புவதற்கும், இறைவனைத் தலங்கள் தோறும் சென்று வழிபடுவதற்கும் பல்லாயிரக்கணக்கான தேவாரப் பாடல்களையும், திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் இயற்றித் தமிழிசையை வளர்த்தெடுத்தனர். இப்பாடல்களின் இசை மரபு, கோயில்களில் வழிவழிவழியாக வந்த ஓதுவார்களாலும், அரையர்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.

இக்காலத்தில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் இசையறிஞராக விளங்கி, இசைக் கலையை வளர்த்தனர். மகேந்திரவர்ம பல்லவன் (7 - ஆம் நூற்றாண்டு)புதுக்கோட்டையில் உள்ள குடுமியான் மலையில் இசை பற்றியொரு கல்வெட்டினைப் பொறித்திருந்தான்.

இராசராச சோழன் காலத்தில் (கி. பி. 985 - 1014) தேவாரப் பாடல்கள் பாடுவதற்குக் கோயில்களில் 48 ஓதுவார்களுக்கும், உடுக்கை, கொட்டி மத்தளம் வாசிப்போர் இருவருக்கும் ஆக 50 பேருக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் பற்றிய செய்திகளைத் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள் உரைக்கின்றன.

இன்றைக்குத் தேவாரப் பாடல்களைப் பாடிவரும் முறையினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தமிழிசைச் சங்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தேவாரப் பண்ணாராய்ச்சி மாநாட்டில் ஆராய்ந்ததில் இருபத்தி நான்கு பண்களுக்குரிய இன்றைய இராகங்கள் கிடைத்துள்ளன. இவை பாடப்பட்டுவரும் காலங்களுக்கேற்ப பகற் பண்கள், இரவுப் பண்கள், பொதுப் பண்கள் என்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எண் பண்கள - இராகம்

பகற் பண்கள்:

1. புறநீர்மை - பூபாளம்

2. காந்தாரம் - நவரோசு

3. பியந்தைக்காரந்தாரம் - நவரோசு

4. கெளசிகம் - பைரவி

5. இந்தளம் - நாதநாமக்ரியை

6. தக்கேசி - காம்போதி

7. நட்டராகம் - பந்துவராளி

8. சாதாரி - பந்துவராளி

9. நட்டபாடை - கம்பீர நாட்டை

10. பழம் பஞ்சரம் - சங்கராபரணம்

11. காந்தார பஞ்சமம் - கேதார கொளை

12. பஞ்சமம் - ஆகிரி

இரவுப் பண்கள்:

13. தக்கராகம் - காம்போதி

14. பழந்தக்க ராகம் - சுத்த சாவேரி

15. சீகாமரம் - நாதநாமக்ரியை

16. கொல்லி - நவரோசு

17. கொல்லிக் கெளவாணம் - நவரோசு

18. வியாழக்குறிஞ்சி - செளராஷ்ட்ரம்

19. மேகராகக் குறிஞ்சி - நீலாம்பரி

20. குறிஞ்சி - குறிஞ்சி

21. அத்தானிக்குறிஞ்சி - சாமா

பொதுப் பண்கள்:

22. செவ்வழி - எதுகுலகாம்போதி

23. செந்துருத்தி - மத்தியமாவதி

24. திருத்தாண்டகம் - அரிகாம்போதி

பதின்மூன்றாம் நூற்றாண்டில், சாரங்கதேவர் இயற்றிய சங்கீத ரத்னாகரம் எனும் வடமொழி இசை இலக்கண நூலில் தேவார வர்த்தினி எனும் அடைமொழியுடன் பல தமிழ்ப் பண்களும், பெயர்களும், இலக்கணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர், தமிழக இசையின் தாளங்களை விளக்கும் வகையில் பல்லாயிரக் கணக்கில் முருகப் பெருமானின் பெயரில் திருப்புகழ்ப் பாடல்களைச் சந்த நடையில் பாடியருளினார். இவையே தமிழக இசையின் தாளக்கூறுகளுக்கு மூல இலக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இன்றைக்கு வழக்கிலுள்ள நூற்றுக்கணக்கான தாளங்கள் திருப்புகழ்ப் பாடல்களின் அமைப்பிலிருந்தே பெறப்படுகின்றன.

சோழர் காலத்தை அடுத்துத் தமிழகத்தை ஆண்ட விசயநகர, நாயக்கர், மராட்டிய (17, 18, 19 ஆம் நூற்றாண்டுகள்) மன்னர்களும், இசையைப் போற்றி வளர்த்தனர். அம்மன்னர்களின் தாய்மொழி தமிழல்லாது தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிகளாக இருந்ததால் தமிழிசையின் செல்வாக்கு குன்றி, தமிழ் நாட்டில் தெலுங்கு, கன்னடம், வடமொழி, மராத்தி, இந்தி முதலான வேற்று மொழிப் பாடல்கள் ஆதரிக்கப்பட்டன. இவை தமிழிசை மரபை ஒட்டிப் பாடப்பட்டு "கர்நாடக சங்கீதம்" எனும் பெயரில் குறிக்கப்படலாயின.

இவ்வாறு கோயில்களிலும், அரசவைகளிலும் இருந்து வந்த தமிழக இசை, பொது மக்களுக்காக அரங்குகளில் வேற்று மொழிப் பாடல்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கால கட்டங்களில் முத்துத் தாண்டவர் (1560 - 1640), மாரிமுத்தா பிள்ளை (1712 - 1787), அருணாச்சலக் கவிராயர் (1711 - 1778) முதலான தமிழ் இயலிசைப் பாவலர்கள் தோன்றி, பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் பிரிவுகளைக் கொண்ட கீர்த்தனை, பதம் முதலான இசைப் பாடல்கள் இயற்றியிருப்பினும், இவை தமிழல்லாது வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு மன்னர்கள் ஆண்ட காலத்தில் பாடப்பட்டதால் ஆதரிக்கப்படாமல் போய்விட்டன.

இதையடுத்துத் தஞ்சையில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப் பெறும் தியாகராஜ சுவாமிகள் (1767 - 1847), முத்துசுவாமி தீட்சிதர் (1775 - 1834), சியாமா சாஸ்திரிகள் (1762 - 1827) ஆகியோர் தெலுங்கு, வடமொழியில் பல பாடல்கள் இயற்றி கருநாடக இசையை மேம்படுத்தினர். இம்மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாதலால் இவர்கள் இயற்றிய பாடல்களின் இசை மரபு தேவாரம் மற்றும் தமிழிசைப் பாடல்களை அடியொற்றியவை எனக் கருதலாம். இவர்களை அடுத்து, கோபால கிருஷ்ண பாரதியார், வேதநாயகம் பிள்ளை, இராமலிங்க அடிகளார், நீலகண்ட சிவன் ஆகியோர் தமிழ்ப் பாடல்கள் இயற்றினர். இருபதாம் நூற்றாண்டில் கோடீசுவர ஐயர், பாபநாசம் சிவன், மகாகவி பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் தமிழ்க் கீர்த்தனைகள் இயற்றித் தமிழிசையை வளப்படுத்தினர். இருந்தபோதிலும் சங்கீத மும்மூர்த்திகளின் பாடல்களால் செவ்விசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் பிரபலமடையவில்லை.

இந்நிலையில் தமிழ் நாடகங்களில் தமிழ்ப் பாடல்கள் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தின. சங்கரதாஸ் சுவாமிகள், மதுரை மாரியப்ப சுவாமிகள் பாடல்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. இதில் நடித்த எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள் போன்றோர் தமிழ் மக்களிடையே அடைந்த செல்வாக்கு இங்கு நினைவு கூறத் தக்கது. இந்நாடகங்கள் வாயிலாக சென்ற நூற்றாண்டில் தமிழிசை வளர்ந்தது.

பின்னர் திரைப்படங்களில் தமிழிசைப் பாடல்கள் இடம் பெறும் கால கட்டம் ஏற்பட்டதும் நாடகங்கள் போற்றுவாரற்றுப் போயின. குறிப்பாக எம். கே. தியாகராச பாகவதர், ஜி. என். பாலசுப்பிரமணியம், தண்டபாணி தேசிகர், பி. யூ. சின்னப்பா போன்றோரின் செவ்விசை அடிப்படையிலான திரைப்படப் பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

செவ்விசை அரங்குகளில் வடமொழி, தெலுங்குப் பாடல்கள் பாடப்பட்டு வந்த நிலையிலும், தமிழ்ப் பாடல்களுக்கு உரிய இடம் தரப்படாத நிலையிலும், தமிழ் நாட்டு இசையரங்குகளில் தமிழ்ப்பாடல்கள் முழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு, டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களின் சீரிய முயற்சியில் சென்னையில் தமிழிசைச் சங்கம் 1943 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

இதன் வாயிலாக ஆண்டுதோறும் தேவாரப் பண்ணாராய்ச்சி மாநாடுகளும், தேவார, திருப்புகழ், திவ்வியப் பிரபந்த இசையரங்குகளும் இன்றளவும் நடைபெற்று பல நல்ல ஆக்கப் பணிகள் தொடர்கின்றன. இவ்வாறு செல்வாக்குப் பெற்ற, இன்று நம்மிடையே உள்ள ஓதுவார்களில் தருமபுரம் பி. சுவாமிநாதன், திருப்பனந்தாள் முத்துக் கந்தசாமி தேசிகர், வி. சோமசுந்தரம், காஞ்சிபுரம் எம். என். வேங்கடவரதன் (திவ்வியப் பிரபந்தம்) ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

தமிழிசையின் இன்றைய போக்கு

தமிழக இசைக்கேயுரிய சிறப்பு நிலைகளைத் தொகுத்துக் காண்கையில், தமிழக இசையானது இயற்கையினின்றும் தோன்றியது. இயற்கைச் சூழ்நிலைக்கேற்ப ஐந்து நிலங்களாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த நிலப்பகுதி இசையை வளப்படுத்தியமை, மக்களின் வாழ்க்கை முறையோடு பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாத கூறாக இருந்தமை, வெறும் பொழுதுபோக்குக் கலையாக இல்லாமல் மனிதனைப் பண்படுத்தும் பாங்கில் இருந்தமை, நாட்டுப்புற இசையாக இருந்து பண்படுத்தப்பட்டுத் தமக்கேயுரிய இசை இலக்கண முறையைக் கொண்டு வளர்ந்து, தற்போது கருநாடக இசை என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருவது ஆகிய நிலைகளைக் கொண்டது.

இத்தகு சிறப்பு வாய்ந்த தமிழிசை சென்ற நூற்றாண்டு வரை செவ்விசையாகவே இருந்தது. பொது மக்களும் விரும்பிக் கேட்கும் வண்ணம் இருந்தது. ஆனால் இந்த நூற்றாண்டில் இந்நிலை மாறியுள்ளது. இன்றைய நிலையில் தமிழிசை என்றாலே புதுப்புது கவிஞர்கள் இயற்றிய பக்திப் பாடல்களும், திரைப்படப் பாடல்களுமே நினைவுக்கு வருகின்றன. இவை கிதார், பியானோ போன்றஇசைக் கருவிகளின் துணையோடு இசையமைக்கப்படுகிற மெல்லிசைப் பாடல்களாகவும், திரை இசைப் பாடல்களாகவும் திகழ்கின்றன.

தமிழிசையின் உயிர்நாடியாக விளங்கும் மெலடித்தன்மை மாறி, ஃஆர்மோனியும், மெலடியும் கலந்ததொரு கலப்பிசையாகத் தமிழிசை இன்றைய திரை இசை அமைப்பாளர்களால் புது உருவம் அடைந்துள்ளது. இவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று தமிழில் செவ்விசைப் பாடல்கள் அருகியுள்ளன என்னும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

தமிழகத்தில் இசையைப் பாடமாகத் தரும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் தெலுங்கு, வடமொழிப் பாடல்களே அதிக அளவில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இசை இலக்கணங்களும் வடமொழி நூல்களில் காணப்படும் செய்திகளின் அடிப்படையிலேயே பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் இந்நிலை மாறுவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வகையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இசைத்துறை நிறுவப்பட்டு தேவாரம், திருப்புகழ் முதலானவற்றில் உயர் ஆய்வுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இவ்வாறே சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும், இசை ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு நூல்கள் வெளிவந்துள்ளன. முனைவர் ஏ. என். பெருமாளின் தமிழர் இசை, ஆர். ஆளவந்தார் எழுதிய தமிழர் தோற்கருவிகள், முனைவர் இ. அங்கயற்கண்ணி எழுதியுள்ள பஞ்சமரின் இசைமரபு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஓதுவார்கள் பாடியுள்ள பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் உரிய வகையில் இன்றைய தலைமுறையினருக்குச் சென்றடைய வேண்டும்.

வளர்ந்து வரும் அறிவியல் உலகில், இயற்பியல், கணிதவியல், மருத்துவம், விவசாயம் ஆகிய அறிவியல் துறைகளை இசை அறிவியலோடு இணைத்து கணிப்பொறி வசதிகளையும் பயன்படுத்தி ஆராயும் போக்கும் வளர வேண்டும். இத்தகைய ஆய்வுகள் உலகளவில் தமிழக இசையின் பெருமையை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

கவிதாசரண் சனவரி - பிப்ரவரி 2004.

17 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இது ஒரு முக்கியமான ஆவணப் படுத்துதல். இங்கிருக்கும் (அதாவது வலைப் பதிவில்) நிறைய பேருக்கு ஜெமோவின் காப்பி பற்றித் தெரியவில்லை. அவர் கையும் களவுமாக பிடிபட்ட பின் அடித்த கூத்தை திண்ணையில் காணலாம்.

இப்போது brosing centre ல் இருப்பதால் நாளை மறுபடியும் விரிவாக மறுமொழி இடுகிறேன்.

Anonymous said...

இதற்கும் தற்போது நடக்கும் சர்ச்சைக்கும் என்ன சம்பந்தம்?

வயித்தெரிச்சல்?

ஜெயமோகன் எல்லாமே காப்பி அடித்து எழுதினார் என்கிறீர்களா?

Anonymous said...

இது பற்றி திண்ணையில் ஒரு விவாதாமே நடந்தது.ஜெயமோகன் தன் தரப்பினைச் சொல்லியிருக்கிறார்.
அதற்கான மறுப்பும் இடம் பெற்றுள்ளது.

லக்கிலுக் said...

இப்படிப்பட்ட ஜெமோ அவரை விமர்சிப்பவர்களுக்கான தகுதி பற்றியெல்லாம் இன்று இணையத்தில் வாய்கிழிய பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது :-)

வளர்மதி said...

தங்களின் விரிவான பகிர்விற்காக காத்திருக்கிறேன் சுந்தர்.

அனானியாக வந்திருக்கும் முதலாமவரே, "விடிய விடிய ராமாயணம் கேட்டு விட்டு ..." என்கிற கதையாக இருக்கிறது உங்கள் கேள்வி. லக்கி லுக்கின் பின்னூட்டமே உங்களுக்குப் பதில்.

இரண்டாம் அனானியாருக்கு,
திண்ணையில் சிறிது நேரம் தேடிப் பார்த்தேன். இப்பிரச்சினை குறித்த ரவிசீனிவாஸின் கட்டுரை ஒன்றை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது. பிறவற்றுக்கான தொடர்புச் சுட்டியைத் தந்து உதவ முடியுமா?

ஆம் லக்கி லுக். அவருடைய சேஷ்டைகள் பல சமயங்களில் முகம் சுளிக்க வைப்பவையும் கூட.

மு. சுந்தரமூர்த்தி said...

வளர்மதி,
அனானி கேட்பது மாதிரித் தான் எனக்கும் தோன்றியது. ஏற்கனவே விவாதித்து முடிக்கப்பட்ட விஷயத்தை மீண்டும் கிளறவேண்டிய அவசியமில்லை என்பதே என் கருத்தும்.

Anonymous said...

Isn't this a crime, of plagiarism. what is the standpoint of Dr. Angayarkanni in this regard. Din't she pursue this case further.

Moreover, the article u have said that it is plagiarised has an author name of S. Arulmozhinangai.
but y is ur title speaking about it, as a crime of Mr.Jeyamohan?

The fact that S.Arulmozhinangai is wife of Mr.Jehamohan has no validity until it is proved legally that he was also a part of plagiarism. Or is it proven judicially, that he was a part of it?

All my questions are only based on this particular article u have written. I have no idea about the names involved in this and that is my literary knowledge in thamizh.

வளர்மதி said...

திரு. சுந்தரமூர்த்தி,

அனானியின் கேள்வியின் "தொனி" மட்டுமல்ல அவரது இரண்டாவது கேள்வியே மோசமானது.

தங்களது பகிர்வில் அவை இல்லை.

மற்றது, இது முடிந்துபோன பிரச்சினை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தனது சக எழுத்தாளர்கள் பற்றி மட்டுமல்ல, திராவிட இயக்கம், பெரியார், தமிழக ஒட்டு மொத்த பண்பாட்டுச் சூழல் என்று பலவற்றைப் பற்றியும் மிகுந்த வன்மத்தோடும் வக்கிரத்தோடும் ஜெயமோகன் அவ்வப்போது உதிர்த்து வரும் விஷமத்தனங்களின் தொடர்ச் சங்கிலியில் இதுவும் ஒன்று.

பல வருடங்கள் இவர் மலையாள இதழ்களில் தமிழ்ப் பண்பாட்டுச் சூழல், தமிழ் இலக்கியச் சூழல் குறித்து இழிவுபடுத்தி வந்தது தெரியவந்தபோது சட்டென்று அமைதி காத்து அந்தப் பிரச்சினைக்கு 'முற்றுப்புள்ளி' வைத்தார்.

இது போன்று அவர் 'முற்றுப் புள்ளி' வைத்த பிரச்சினைகள் பல.

இவர் ஒரு 'பிரச்சினையை' - விமர்சனம் என்ற பெயரில் ஒரு அவதூறு - ஆரம்பித்து வைப்பார். உடன் அதற்கு பல தரப்புகளிலிருந்து மறுப்புகள் வரும். ஒரு கட்டத்திற்கு மேல் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், "எல்லோரும் என்னை அவதூறு செய்கிறார்கள்" என்று சொல்லி ஒதுங்கி விடுவார். இதுவே இவரது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த எழுத்துத் திருட்டுப் பிரச்சினையைப் பொருத்த வரையில் சிற்றிதழ்களில் வெளிப்படையாக விவாதிக்கப்படவில்லை. ஆனால் பரவலாக பேசப்பட்டது நினைவிருக்கிறது.

இங்கு, இணையத்தில் மேலுள்ள கட்டுரையை "திண்ணை" இதழில் வெளியிட்டு வகையாக மாட்டிக் கொண்டார் என்பதை நண்பர் சுந்தர் மூலமாக சமீபமாகத்தான் அறிந்தேன்.

அதாவது, DJ - வின் பதில் இது குறித்த ஒரு பகிர்வை வைத்த பிறகு.

பார்க்க:http://padamkadal.blogspot.com/2008/01/blog-post_11.html

"திண்ணை" இதழில் மேலுள்ள கட்டுரை பிரசுரமாகி, "கவிதாசரண்" இல் பொ. வேல்சாமி இது திருடப்பட்ட கட்டுரை என்பதை அம்பலப்படுத்தியதும் தெரியவர, முதலில் "கவிதாசரண்" இதழை நான் மதிப்பதே இல்லை என்று திமிருடன் பதில் சொல்லி, பின் எல்லோரும் பிடித்துக் கேள்வி கேட்க, வகையாக மாட்டிக் கொண்டு, அக்கட்டுரைக்கு தானே பொறுப்பு என்று ஒப்புக் கொண்டு, அதை "திண்ணை" யிலிருந்து எடுத்து விடுமாறு கேட்டுக் கொண்டது போன்ற விபரங்களை ரவிசீனிவாசின் கட்டுரை வழியாக நேற்றுதான் அறிந்து கொண்டேன்.

பார்க்க: http://www.thinnai.com/?module=displaystory&story_id=60403252&format=html

சரி இவை இருக்கட்டும். தங்களுடைய கேள்விக்கு நேரடியாக வருகிறேன்.

"திண்ணை" இல் இது ஏற்கனவே விவாதித்து முடிந்த பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் "திண்ணை", சிற்றிதழின் தீவிரத்தோடு வரும் ஒரு இணைய இதழ். அதில் எழுதுபவர்கள், அதன் வாசகர்கள் பெரும்பான்மையும் 'தீவிர' இலக்கியம் சார்ந்தவர்கள்.

ஆனால், "தமிழ் மணம்" போன்ற வலைத்திரட்டிகளில் எழுதுபவர்கள், வாசிப்பவர்கள் பல தரப்பட்ட வாசிப்பு தளங்களில் உள்ளவர்கள்.
இவர்களும் இப்போது ஜெயமோகனை வாசிக்க நேர்ந்திருக்கிறது.

இந்நிலையில் இவர் எடுத்த எடுப்பிலேயே தனது அதிரடி வக்கிரங்களோடு தொடங்கியிருக்கிறார்.

பெரியார், திராவிட இயக்கம், குறித்து இவர் திமிர் அபிப்பிராயம் உதிர்த்தால் அவற்றுக்கு பதில் சொல்ல இங்கு பலர் இருக்கிறார்கள்.
ஆனால், இலக்கியம், தமிழ் வெகுஜன கலாச்சாரம் குறித்து கிசு கிசு பாணியில் வக்கிரத்தோடு இவர் எழுதத் தொடங்கும்போது அவற்றுக்கு எம்மைப் போன்றவர்கள் எதிர்வினை ஆற்றத் தொடங்கினால், இந்த வாசகர்களுக்கு இவரது பழைய தகிடு தத்தங்களையும் சேர்த்தே சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

எடுத்த எடுப்பிலேயே 'என்னை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும்' என்று திமிரோடு வருபவரது 'தகுதி' இவ்வளவுதான் என்று இந்த வாசகர்கள் மத்தியில் வைப்பதில் தவறு என்ன இருக்கிறது?

எனது தரப்பு பார்வை இது.

நீங்களும் பரிசீலித்துப் பாருங்கள்.

மற்றது, ஜெயமோகனது வக்கிர அவதூறுகளைப் பட்டியலிட்டால் பல பக்கங்கள் நீளும்.
என்றபோதிலும் தமிழ்ச் சூழல் அவரை ஒரு 'படைப்பாளியாக' அங்கீகரித்து தொடர்ந்து இயங்க வெளியையும் அளித்திருப்பதை ஒரு ஆச்சரியம் என்றே சொல்ல வேண்டும்.

அது அவருக்குக் கிடைத்த ஒரு கொடை. ஆனால் அதற்குரிய மரியாதையை திரும்பக் கையளிக்கும் பெருந்தன்மைகூட ஜெயமோகனிடம் இல்லை என்பதை தொடர்ந்து அவர் செய்து வரும் அருவருப்பான அவதூறுகள் நிரூபித்து வருகின்றன.

ஜமாலன் said...

நண்பர் வளருக்கு

உங்களது ஜெமோ குறித்த விரிவான பதிவுகள் என்னைப் போன்ற நீண்ட நாட்களாக தமிழ் இலக்கியச் சூழலில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கும், தமிழ் இணையச் சூழலுக்குள் சமீபத்தில் வந்தவர்களுக்கும் பயனுள்ள பல தகவல்களை தந்துள்ளது. பேசத் துவங்கியவுடன் எல்லாவற்றையும் பேசுவது என்பது சரியானதுதான். உண்மையில் இதனை இப்பதிவில்தான் முதன்முறையாக அறிந்து கொள்கிறேன். மீள்பதவிற்கு நன்றி.

90-களுக்கப்பிறகு தற்சமயம்தான் இலக்கிய உலகுடன் எனக்கு அதுவும் பதிவுகள் வழியான தொடர்பே. காரணம்..எனது சோம்பல் மட்டுமின்றி தமிழ்ச் சூழலை முழுமையாக வாசிக்க வாய்ப்பற்ற ஒரு சூழல் நான் இருக்கும் இச்சூழல். விடுமுறைகளில் எடுத்துவரும் நூட்களைத்தவிர மற்றவற்றை படிக்க வாய்பப்ற்ற சூழல். அதனால் இம்மீள்பதிவு என்போன்றோருக்கு அவசியமானது, அதனை காலத்தில் செய்துள்ளீர்கள்.

//பெரியார், திராவிட இயக்கம், குறித்து இவர் திமிர் அபிப்பிராயம் உதிர்த்தால் அவற்றுக்கு பதில் சொல்ல இங்கு பலர் இருக்கிறார்கள்.
ஆனால், இலக்கியம், தமிழ் வெகுஜன கலாச்சாரம் குறித்து கிசு கிசு பாணியில் வக்கிரத்தோடு இவர் எழுதத் தொடங்கும்போது அவற்றுக்கு எம்மைப் போன்றவர்கள் எதிர்வினை ஆற்றத் தொடங்கினால், இந்த வாசகர்களுக்கு இவரது பழைய தகிடு தத்தங்களையும் சேர்த்தே சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?//

உண்மைதான் பெரியார் திராவிட இயக்கம் குறித்தோ அல்லது சுத்த இலக்கியம் தூய அழகில் குறித்தோ அல்லது உள்ளளி பிரக்ஞை ஆத்மா குறித்தோ பேசும் எல்லாவற்றிற்கும் இடையில் ஊடாடும் தர்க்கம் ஒன்றுதான். அது முழுக்க முழக்க அரசியல்வகைப்பட்டது. இந்த அரசியல்போர் தமிழ் இலக்கிய உலகம் குறிப்பாக நவீன இலக்கிய உலகம் என அறியப்படும் பாரதிக்கு பிறகான காலகட்டத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு வருவது. பேசப்படும் எல்லாமே உரையாடல்கள் என்பதாக இல்லாமல் பிரச்சார நோக்கம் கொண்டவையாகவே தமிழக அறிவுச் சூழல் இருப்பதாகவே கருதுகிறேன். திராவிடப் பிரச்சாரம் என்பது மக்கள் சார்பானது கலை உன்னதம் என்று பேசி பரந்துபட்ட மக்களை வெளியே தள்ளும் கூட்டத்தின் பிரச்சாரம் மேட்டிமைத்தனமானது. பிரச்சாரம் என்றாலும் திராவிடப்பிரச்சாரம் மேட்டிமைத்தனத்தைவிட உயர்ந்ததே. அடிப்படையான ஜனநாயகப் பண்பு என்பதோ திறந்த மனநிலையோ தமிழில் இல்லை. குழு மனப்பான்மை என்பது ஒரு தீரா வியாதியாகிவிட்டது. அதன் ஒரு அதீத வெளிப்பாடே இந்த விவாதங்கள் அல்லது இதனை "பண்பாட்டு போர்" என்றுகூட சொல்லாம். இது கோட்பாட்டுரீதியாக பேசப்பட வேண்டிய பலவற்றை உள்ளடக்கியது.

ஜெகத் என்பவர் இதுகுறித்து அற்புதமாக எழுதியுள்ளார். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.
http://kaiman-alavu.blogspot.com/2008/02/blog-post.html
http://kaiman-alavu.blogspot.com/2006/07/2.html

வளர்மதி said...

கடைசியாக வருகை தந்துள்ள அனானி அவர்களுக்கு,

முதலாவதாக, இது அப்பட்டமான எழுத்துத் திருட்டு என்பது எவருக்கும் விளங்கும்.

திரு. அங்கயற்கண்ணி இது குறித்து அறிந்திருப்பாரா என்பதே சந்தேகம். பொதுவில், கல்விப் புலம் சார்ந்து இயங்குபவர்களுக்கும் சிற்றிதழ் சார்ந்து இயங்குபவர்களுக்கும் இங்கு பெரும் இடைவெளி உள்ளது.

இரண்டாவது, ஜெயமோகனின் மனைவி இதுவரையில் எதுவும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. "திண்ணை" இல் ஜெயமோகன் அக்கட்டுரையைத் தனது பெயரில் அல்லாமல் தனது மனைவியின் பெயரில் வெளியிட்டதாக ஒரு சந்தர்ப்பத்தில் ஒப்புக் கொண்டதாகவும் கேள்விப்படுகிறேன்.

ரவிசீனிவாசின் கட்டுரையிலும் இது குறித்த குறிப்புகளைக் காணலாம்.

துரதிர்ஷ்டவசமாக, இது தொடர்பான கட்டுரைகள் "திண்ணை" யில் கிடைக்கவில்லை. Unicode font -ற்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.

மாற்றி வெளியிட்டது விஷயம் இன்னும் தெளிவாகிவிடும்.

சம்பூகன் said...

//இந்நிலையில் இவர் எடுத்த எடுப்பிலேயே தனது அதிரடி வக்கிரங்களோடு தொடங்கியிருக்கிறார்.

பெரியார், திராவிட இயக்கம், குறித்து இவர் திமிர் அபிப்பிராயம் உதிர்த்தால் அவற்றுக்கு பதில் சொல்ல இங்கு பலர் இருக்கிறார்கள்.
ஆனால், இலக்கியம், தமிழ் வெகுஜன கலாச்சாரம் குறித்து கிசு கிசு பாணியில் வக்கிரத்தோடு இவர் எழுதத் தொடங்கும்போது அவற்றுக்கு எம்மைப் போன்றவர்கள் எதிர்வினை ஆற்றத் தொடங்கினால், இந்த வாசகர்களுக்கு இவரது பழைய தகிடு தத்தங்களையும் சேர்த்தே சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?//


மிகச் சரியாக கூறியிருக்கிறீர்கள் வளர்மதி.,

'பெரியார் தலித்துகளுக்கு எதிரி' என்ற செத்து போன வாதத்தை உயிர்பிக்க தனது சமீபத்திய கட்டுரையொன்றின் மூலமாக முயன்றிருக்கிறார் ஜெயமோகன், இதற்கான எதிர்வினையாக உங்களது "பெரியார் இடைநிலைச் சாதியின் பிரதிநிதியா?" என்ற கட்டுரையை மீள்பதிவு செய்யலாம் என்று நினைத்திருந்தேன், ஆனால் ஜெயமோகனின் குறிப்பான அந்த கட்டுரையிலிருந்து பதில் இருந்தால் சிறப்பாக இருக்குமென்றெண்ணி தகுந்த சூழல் வரும் பொழுது அதனை எழுதலாம் என்றிருக்கிறேன், மற்றபடி ஜெயமோகன் பிரச்சணை முடிந்துவிட்டது என்று எந்த அடிப்படையில் நண்பர்கள் என்றுதான் புரியவில்லை.

சம்பூகன்

சம்பூகன் said...

//எந்த அடிப்படையில் நண்பர்கள் என்றுதான் புரியவில்லை//

திருத்தம்: எந்த அடிப்படையில் நண்பர்கள் கூறுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.


இலக்கிய வட்டாரத்தில் ஜெயமோகன் செய்த தகிடு தத்தங்களை அந்த வட்டத்தை சேர்ந்தரே தமிழ்மண வாசகருக்கு அறிமுகப்படுத்துவது அவசியமான ஒன்று. அந்த வகையில் ஜெயமோகன் பற்றிய உங்களது மதிப்பீட்டையும் பதிவு செய்தால் நன்றாயிருக்கும்.

சம்பூகன்

மு. சுந்தரமூர்த்தி said...

வளர்மதி,
விளக்கத்துக்கு நன்றி. திண்ணையில் இது குறித்து நடந்த முழுவிவாதத்தையும் அறிவேன். திண்ணையில் தமிழின் சிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட்டு அதில் மூன்று இடங்களை தன் நாவல்களுக்கு அளித்துக்கொண்ட ஜெயமோகனின் கருத்துக்களை நான் இப்போதெல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.

வளர்மதி said...

பகிர்விற்கு நன்றிகள் ஜமாலன் :)

தங்களது கருத்துக்களுடன் உடன்படவே செய்கிறேன்.

எனது அவதானிப்பு ஒன்று.

தமிழ் இலக்கிய/அரசியல் சூழலில் குழு மனப்பான்மை இன்று ஓரளவிற்கு மறைந்து விட்டது என்றே நினைக்கிறேன். காரணம் இன்று குழுக்கள் என்று எதுவும் இல்லை. (காலச்சுவடு குழு, நிறப்பிரிகை குழு என்பது போல.)

தற்சமயம் அதீதத் தன்முனைப்பு சார்ந்த இயக்கமே நிகழ்ந்து கொண்டிருப்பதாக எனக்குப் படுகிறது.

காலச்சுவடு சார்ந்து இயங்குபவர்கள் பெரும்பாலும் கண்ணனுக்கு அடிபணிந்தே எழுதுபவர்கள். விதிவிலக்குகள் இருக்கிறார்கள் - ராஜமார்த்தண்டனைப் போன்றவர்கள்.

அதே போன்று உயிர்மை இதழிலும்.

விதிவிலக்கானவர்கள் தவிர்த்து, "யார் என்ன சொன்னால் எனக்கென்ன. எனக்குத் தேவை வாசகர்கள்" என்று காலச்சுவட்டின் மோசமான அரசியல் நன்கு தெரிந்தும் எழுதும் ஒரு சிறிய வட்டமும் உண்டு - பொ. வேல்சாமியைப் போன்றவர்கள்.

இவர்கள் தவிர்த்து இவ்விரண்டு இதழ்களிலும் எழுதுபவர்கள் பெரும்பாலும் இவ்விதழ் ஆசிரியர்களின் அடிவருடிகள், மற்றது தன்முனைப்பு மட்டுமே கொண்டவர்கள் (சாரு, ஜெயமோகன் போன்றவர்கள்).

இவ்விரு இதழ்கள் தவிர்த்து (இவற்றை இனியும் தமிழின் சிற்றிதழ் ஓட்டத்துடன் சார்ந்தவையாகக் கருத இடமில்லை; middle magazine என்பதையும் தாண்டி வணிக இதழ்களின் அத்தனை தந்திரங்களோடும் இயங்கிக் கொண்டிருப்பவை என்று கருத வேண்டியிருக்கிறது) காத்திரமான இதழியக்கம் மீண்டும் எழ வேண்டிய தேவை இருக்கிறது.

எம். டி. எம், நாகார்ச்சுனன் போன்றவர்கள் மீண்டும் எழுதத் துவங்கியிருப்பது நல்ல அறிகுறியாகவே தெரிகிறது.

ஆனால், தீவிர வாசிப்புடைய புதிய இளைஞர்கள் உருவாகாமல் இருப்பது ஒரு பெரும் குறை.

இணையத்தில் அத்தகையவர்கள் சிலரைக் காண்பது மட்டுமே உற்சாகம் தருவதாக இருக்கிறது.

மற்றது, நீங்கள் "பண்பாட்டுப் போர்" பற்றிக் குறிப்பிட்டதும் Lionell Trilling இன் Beyond Culture என்ற நூல் நினைவிற்கு வந்தது. பல வருடங்களுக்கு முன்னர் ராஜன் குறை சொல்லி, தேடிப் பிடித்து வாசித்தது.

அமெரிக்காவில் 60 - களின் கலாச்சாரப் போர் குறித்த ஒரு மீள்பார்வையாக Roll Over Beethovan என்ற நூலும் (ஆசிரியர் பெயர் சட்டென்று நினைவிற்கு வரவில்லை.) இந்த நூல்கள் நமது இன்றைய சூழலைப் புரிந்துகொள்ள மட்டுமல்ல, மாற்றுகளுக்கான சிந்தனைகளைக் கிளர்த்துபவையும் கூட.

மற்றது, "செல்லம்மாள் - பாகம் II " பதிவில் தங்களுடைய பகிர்விற்கு மிகுந்த நன்றிகள். அதன் தூண்டலில் மீண்டும் ஒரு முறை புதுமைப் பித்தனை வாசிக்க வாய்த்தது :)

அப்பதிவில் தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளை சற்று பொறுமையாக விரித்து எழுத வேண்டும் என்று இருக்கிறேன்.

பொறுத்துக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன்.

அன்புடன்

வளர் ...

வளர்மதி said...

நன்றிகள் சுந்தரமூர்த்தி :)

ஜெயமோகனுடைய அபிப்பிராய உதிர்ப்புகள் 'தீவிரத்' தளங்களில் உதாசீனம் செய்யப்பட வேண்டியவையே.

என்றபோதிலும் பொதுத் தளங்களை நோக்கி நகரும்போது எதிர் கொள்ளல் வேண்டும் - ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே - என்பது எனது நோக்கு.

வளர்மதி said...

பகிர்விற்கு நன்றி சம்பூகன்.

ஜெயமோகனின் 'இலக்கியம்' குறித்து விஷ்ணுபுரம் வந்தபோது எழுதும் எண்ணம் இருந்தது. அதற்குப் பிறகு அவர் போட்ட ஆட்டம் அருவருப்பூட்டியது. இவர் சட்டை செய்ய வேண்டிய நபர் அல்ல என்று அமைதியாக இருந்து விட்டேன்.

என்றாலும், ஒருமுறை அவரது 'இலக்கிய' எழுத்துக்கள் குறித்து சில விஷயங்களை விளக்கமாக எழுதிவிடுவது பலருக்கு உதவியாக இருக்கும் என்று இப்போது படுகிறது.

முயற்சிக்கிறேன்.

ஜமாலன் said...

//தற்சமயம் அதீதத் தன்முனைப்பு சார்ந்த இயக்கமே நிகழ்ந்து கொண்டிருப்பதாக எனக்குப் படுகிறது.//

உண்மைதான். நான் தமிழ்சூழலிருந்து விலகியிருப்பதால் இந்த போக்குகள் குறித்து பழைய பழகிய கண்ணோட்டத்திலிருந்து எழுதினேன்.

//எம். டி. எம், நாகார்ச்சுனன் போன்றவர்கள் மீண்டும் எழுதத் துவங்கியிருப்பது நல்ல அறிகுறியாகவே தெரிகிறது.//

ஆம். நல்ல அறிகுறிதான்.

//ஆனால், தீவிர வாசிப்புடைய புதிய இளைஞர்கள் உருவாகாமல் இருப்பது ஒரு பெரும் குறை.

இணையத்தில் அத்தகையவர்கள் சிலரைக் காண்பது மட்டுமே உற்சாகம் தருவதாக இருக்கிறது.//

உடன்படுகிறேன்.

//மற்றது, "செல்லம்மாள் - பாகம் II " பதிவில் தங்களுடைய பகிர்விற்கு மிகுந்த நன்றிகள். அதன் தூண்டலில் மீண்டும் ஒரு முறை புதுமைப் பித்தனை வாசிக்க வாய்த்தது :)

அப்பதிவில் தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளை சற்று பொறுமையாக விரித்து எழுத வேண்டும் என்று இருக்கிறேன். //

எழுதுங்கள். அவசரமில்லை. இது இலக்கியம் குறித்த ஆரோக்கியமான உரையாடலுக்கு வழிவகுக்கும்.

அன்புடன்
ஜமாலன்.

Post a Comment

Recent Posts